Header Ads



"உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே! அது நடவாது."

தே. சௌந்தரராஜன்

குழந்தை வளர்ப்பு என்பது குழந்தையின் கரு உருவாகும்போதே ஆரம்பமாகிறது. ஒரு தாயாகப் போகிற பெண் தன்னை குழந்தை பெற்றுக் கொள்ள தயாரான உடலையும் மனதையும் பெற்றிருக்க வேண்டும்.

சாதிப்பது வேறு. சாதனையாளரை உருவாக்குவதுவேறு. சிறந்த குழந்தைகளை உருவாக்க நாம் நிறைய நேரத்தை அவர்களுக்காக செலவு செய்தாக வேண்டும்.

ஒரு தாய்க்கு குழந்தை பற்றிய தன்மதிப்பு எத்தனை உயர்வாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தை தன் வாழ்வில் சாதிக்கிறான்.

குழந்தைகள் புதிய மலர்கள். அவர்கள் சுடப்படாத ஈரக்களிமண். அவர்கள் மீது நாம் நமது சொந்த கருத்துக்களை திணிக்கக்கூடாது.

நம் குழந்தைகள் உண்மையில் நம் குழந்தைகள் அல்ல, அவர்கள் நம் மூலமாக வந்தாலும் நம்மிடமிருந்து வரவில்லை. அவர்கள் இறைவனிடமிருந்து வந்தவர்கள். அவர்கள் இறைவனின் படைப்புகள்.]

குழந்தை சுடப்படாத ஈரக்களிமண்: .

அப்பாவும் பையனுமாக குற்றாலத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கே பல இடங்களில் "திருடர்கள் ஜாக்கிரதை" "திருடர்கள் ஜாக்கிரதை" என்று எழுதப்பட்டுள்ளது.

இதை வாசித்த அந்த சிறுவன் தந்தையிடம் கேட்கிறான் "திருடர்கள் ஜாக்கிரதை" என்று எழுதியிருந்தால் மட்டும் திருடர்கள் பயந்து விடவா போகிறார்கள். தந்தை பதில் கூறுகிறார். "இந்த எச்சரிக்கை திருடர்களுக்காக அல்ல. திருடர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள நம்மை போன்ற சுற்றுலா பயணிகளுக்குக் கொடுக்கப்படும் அறிவுரை". எனவே திருடர்கள் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்குமான அறிவுரை இது. குழந்தைகள் பெற்றோரை தெய்வம் போல பார்க்கிறார்கள். ஒரு வழிகாட்டியாக (Role Model) கவனிக்கிறார்கள்.

ஆகவே நாம் நமக்காக மட்டுமல்ல நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காக குறையற்ற நல்ல பழக்க வழக்கங்களை, ஒழுங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு செயல்களையும் நமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஒவ்வொரு வார்த்தைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து பின்பற்றுகிறார்கள்.

நாம் அவர்களுக்கு என்ன சொல்கிறோம் என்ன அறிவுரை கூறுகிறோம் என்பதை அல்ல, என்ன செய்கிறோம் என்பதையே அவர்கள் பார்க்கிறார்கள் பின்பற்றுகிறார்கள்.

"என் வாழ்வே என் செய்தி" என்ற அண்ணல் காந்தி கூறியது போல நமது செயல்களே நம்மையறியாமல் நம்மை அவர்கள் பின்பற்ற காரணமாக அறிவுரையாகிறது. எனவே நமது நடவடிக்கைகள் சரியானதாகவும் ஒழுக்கமானதாகவும், திறமையானதாகவும், வழிகாட்டும்படியாகவும் இருக்க வேண்டும்.

எது சிறந்த முதலீடு:

நமது செல்வத்தை எதில் முதலீடு செய்யலாம்? தங்கத்திலா? நிலத்திலா? பங்கு சந்தையிலா? வங்கி கணக்கிலா? எதில் முதலீடு செய்வது சிறந்தது? என்று பல வல்லுனர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.

மிகச்சிறந்த முதலீடு என்பது நமது குழந்தைகள்தான். கோடி கோடியாக பணம் இருந்தாலும் குழந்தைகள் சரியாக வளர்க்கப்படவில்லை என்றால் என்ன பயன்? நம் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க நம்மில் அனேகர் ஆர்வத்துடன் இருக்கக்கூடும்.

மிகச்சிறந்த பள்ளியில் சேர்ப்பதாலோ, டியூசன் ஏற்பாடு செய்வதாலோ ஒரு குழந்தை சிறப்பு பெற்றுவிடுவதில்லை. குழந்தைகள் மீது நாம் எடுத்துக் கொள்ளும் சிரத்தை உணர்வுதான் குழந்தையின் வெற்றிக்கு ஆதாரம்.

''ஈன்றபுறந்தருவது தாயின் கடனே, சான்றோன் ஆக்குவது தந்தையின் கடனே''

''தாயோடு அன்பு போகும், தந்தையோடு கல்வி போகும்'' இவைகள் தமிழ் வாக்குகள்.

ஆனால் குழந்தை வளர்ப்பதில், சான்றோன் ஆக்குவதில் தந்தையின் பங்கை விட தாயின் பங்கே அதிகம். ஒரு சிறந்த தாயால் மட்டுமே உயர்ந்த மனிதனை உருவாக்க முடியும்.

சாதிப்பது வேறு. சாதனையாளரை உருவாக்குவதுவேறு. சிறந்த குழந்தைகளை உருவாக்க நாம் நிறைய நேரத்தை அவர்களுக்காக செலவு செய்தாக வேண்டும்.

ஒரு தாய்க்கு குழந்தை பற்றிய தன்மதிப்பு எத்தனை உயர்வாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தை தன் வாழ்வில் சாதிக்கிறான்.

தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் இருந்து படிக்க லாயக்கில்லை என்று விரட்டப்பட்டார். அந்த குழந்தையின் தாய் என் மகனின் திறமைகளை இந்த உலகம் இன்று புரிந்து கொள்ளவில்லை. ஆனால் பின்பு புரிந்து கொள்ளும் என நம்பினார். தானே குழந்தைக்கு அத்தனை பாடங்களையும் சொல்லிக் கொடுத்து அவன் செய்யும் பரிசோதனைகளுக்கு உதவினார். மிகச் சிறந்த விஞ்ஞானியாக உருவாக்கினார். அந்த தாய்க்கு இன்று இந்த உலகே கடமைப்பட்டிருக்கிறது.

முட்டாள்தனமாக கேள்வி கேட்டு கொண்டிருக்கிறான். அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று பள்ளி ஆசிரியர் ஐன்ஸ்டினை வெறுத்தார். உற்றார் உறவினர்களும் அவரை ஒதுக்கினர்.

ஆனால், அவரது தாயும் ஜேக்கப் என்ற அவரது மாமாவும் அவரை மதித்து அவரது கேள்விக்கு விடை காண உதவினர். அவருக்கு ஊக்கம் கொடுத்தனர். அவர்களின் ஊக்கத்தால் அந்த மாமேதை உருவானார்.

இன்று நாம் அறிந்த பலரது வெற்றிக்குப்பின் அவர்கள் பெற்றோரின் கடின உழைப்பு, பெரும் முயற்சி காரணமாக இருக்கிறது.

ஒரு மனிதன் சிறந்த குழந்தைகளை உருவாக்க வேண்டுமானால் தானும் சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும். குழந்தைகள் கேட்கும் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு அசராமல் பதில் சொல்ல வேண்டும். பதில் தெரியவில்லை என்றால் எனக்குத் தெரியாது நீயே கண்டு பிடித்துக் கொள் என்று சொல்ல வேண்டும்.

அப்படி இல்லாமல் தவறான பதில்களையோ, மழுப்பலான பதில்களையோ கூறக்கூடாது. குழந்தைகளின் வயிற்றுப்பசியை தீர்த்தால் போதாது. அவர்களின் அறிவுப்பசியை தீர்க்க வேண்டும்.

நமது எண்ணங்களும் நமது சிந்தனைகளும் நமது கருத்துக்களும் மிகச் சரியானவை என்று சொல்ல முடியாது. நாம் இந்த சமுதாயத்தால் உருவாக்கப்பட்டுள்ளோம். சமுதாயத்தின் சீர்கேடுகள், முட்டாள் தனங்கள் நம்முள் நிறைந்திருக்கின்றன.

குழந்தைகள் புதிய மலர்கள். அவர்கள் சுடப்படாத ஈரக்களிமண். அவர்கள் மீது நாம் நமது சொந்த கருத்துக்களை திணிக்கக்கூடாது.

நம் குழந்தைகள் அல்ல!

நம் குழந்தைகள் உண்மையில் நம் குழந்தைகள் அல்ல, அவர்கள் நம் மூலமாக வந்தாலும் நம்மிடமிருந்து வரவில்லை. அவர்கள் இறைவனிடமிருந்து வந்தவர்கள். அவர்கள் இறைவனின் படைப்புகள்.

அவர்கள் நம்மோடிருந்தாலும் நமக்குச் சொந்தமில்லை. அவர்கள் நம் எண்ணங்களை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவந்தவர்கள் அல்ல. அவர்கள் தன் எதிர்பார்ப்புகளை, அல்லது இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றவந்தவர்கள். நமது குழந்தைகள் மேல் நாம் அதிகமான உடைமை மனப்பான்மை (Possessiveness) கொள்ளலாகாது.

"உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது" என்கிறார் எமர்சன்.

ஒரு மாமரத்தை நட்டு நீர் ஊற்றி உரமிட்டு வளர்த்தால் நன்கு வளரும். ஆனால் நம் விருப்பத்தினால் அது பலா மரமாக மாறிவிடாது.

அது போலவே குழந்தைகளும். இருந்தாலும்கூட ஐந்து வயதில் இருக்கும்போதே ஒரு குழந்தை எதில் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகிறதோ அதில் சாதனை படைக்க முடியும்.

தாவரங்களில் விதையின் மூலம் வருவதும் உண்டு, குச்சிகளின் (ஒட்டுச்செடி) மூலம் வருவதும் உண்டு. குச்சி மூலம் (குளோனிங் குட்டிகள் போல) வருவது தாய்ச் செடியின் குணம் அப்படியே இருக்கும். விதைகள் மூலம் உருவான செடிகள் தாய் தாவரத்திலிருந்து சற்று மாறுபட்டு இருக்கும். தாய் தாவரத்தில் இல்லாத சிறப்புகளும் சில குறைகளும் இதில் இருக்கும்.

அதுபோலவே ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொருவிதம் அவர்கள் ஒரு புதிய பரிணாமம். இறைவனின் உன்னத படைப்பு.

நம் குழந்தைகள் மட்டும் நம் குழந்தைகள் அல்ல

நம் குழந்தைகள் மட்டும் நமக்கு குழந்தைகள் அல்ல. நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளையும் நம் குழந்தைகள் போல் நேசிக்க வேண்டும். அவர்கள் முன்னேற்றத்திற்கும் நாம் பல உதவிகளை செய்யலாம். அப்போதுதான் நம் குழந்தைகளுக்கும் ஒரு சமுதாயப் பார்வை வரும்.

படி, படி, படி:

சில மாதங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒலிக்கக்கூடிய எலக்ட்ரானிக் பெட்டி இப்போது கடைகளில் கிடைக்கிறது. அதை ஆன் செய்தால் தொடர்ந்து மந்திரங்களை திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருக்கும். அது போல ஒரு பெட்டி நம்முள் இருக்கிறது என நினைக்கிறேன்.

ஆகவேதான் குழந்தைகளைக் கண்டால் படி, படி என இடையறாது கூறிக்கொண்டே இருக்கிறோம். ஒரே வார்த்தையை அடிக்கடி கேட்கும்போது குழந்தைகளுக்கு அதன் மீது ஒரு வெறுப்பு உருவாகிறது. எப்போதாவது ஒருமுறை சற்று விளக்கங்களோடு, சில கதைகள் சேர்த்து, உதாரணங்களோடு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.

குழந்தை வளர்ப்பு:

குழந்தை வளர்ப்பு என்பது குழந்தையின் கரு உருவாகும்போதே ஆரம்பமாகிறது. ஒரு தாயாகப் போகிற பெண் தன்னை குழந்தை பெற்றுக் கொள்ள தயாரான உடலையும் மனதையும் பெற்றிருக்க வேண்டும்.

வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவு உண்டு உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்க வேண்டும். நிறைய ஆக்சிஜன் தேவைப்படும். நல்ல காற்றோட்டமான இடத்தில் வசிக்க வேண்டும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

கரு உருவாகும் காலங்களில் வாந்தி வரும். அப்போது உணவு உள்ளே செல்லாது. அப்போது புளிப்பான பழரசங்களை அருந்தலாம். அப்போது உணவு உள்ளே செல்லாததால் உடலின் எடை குறையும் அது பற்றி கவலை இல்லை. பின்பு சரியாகிவிடும்.

கருவுற்ற தாய்க்கு நிறைய கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் தேவை. இவைகளை பார்த்து உண்ண வேண்டும். உடலை அசுத்தம் செய்யும் உணவுகள் ஆகாது. உப்பு, கொழுப்பு குறைவான உணவுகள் ஏற்றது. சிறிய உடற்பயிற்சிகளும், மூச்சுப் பயிற்சிகளும் நல்லது.

பிறந்த பின்:

தாய்ப்பாலே குழந்தைக்கு சிறந்தது. தாய்ப்பால் கொடுக்கும் தாய் உணவு விசயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

மூன்று மாதத்திற்குப்பின் தேன்கலந்த சாத்துக்குடி ஜுஸ் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு பின் வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் பழ ஜுஸ்கள் கொடுக்கலாம்.

இட்லியைவிட சத்து மாவு குழந்தைகளுக்கு நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஜங்க் புட் என்ற உணவுகளை கொடுக்கக்கூடாது. பேக்கரி உணவுகள் நல்லதல்ல. வெறும் மைதாவில் செய்யப்பட்ட பிஸ்கட் சிறந்த உணவல்ல. கேரட் துருவி, தேங்காய் சேர்த்து சற்று இனிப்பும் சேர்த்து கொடுக்கலாம்.

எந்த உணவினால் நமக்கு சர்க்கரை வியாதியும், இதயநோயும் வந்ததோ அதே உணவை நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? ஆகவே அரிசி உணவு (சோறு, இட்லி, தோசை) ஒருவேளைக்கு மேல் கொடுக்கவே கூடாது.

மூன்று வேளை கண்டிப்பாக குழந்தைகளுக்கு திணிக்க வேண்டாம். காரம் உப்பு நிறைந்த உணவுகளை கொடுக்கக்கூடாது. பசி வரும்போது கேட்டு வாங்கி உண்பார்கள்.

குழந்தைகள் சத்துப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். கூடிய மட்டும் நிறைய பழங்களும் கொஞ்சம் புரதமும் இருந்தால் போதுமானது. அதிக உணவே ஆபத்து. வீட்டில் எங்கு நோக்கினும் கைக்கு, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பழங்கள், பயறுகள், நிலக்கடலைகள் போன்ற உணவுகளே இருக்க வேண்டும். ஜங்க் புட் , பேக்கரி உணவு மற்றும் சுவீட் கடையின் இனிப்பு கார வகைகள் கண்ணில் படக்கூடாது. பசிக்கும்போது குழந்தைகள் கைக்கு எது கிடைக்கிறதோ அதை உண்பார்கள்.

பாதுகாப்பு:

இந்த குழந்தைகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் வைத்திருக்க வேண்டும். நெருப்பு, தொட்டியில் உள்ள நீர், கத்தி, ஆணி, மருந்துகள் இவைகளில் இருந்து பாதுகாக்க சரியான வழிமுறைகள் இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி:

உடலைப் பற்றிய ஒரு அறிவு குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். தினமும் விளையாட்டு, கராத்தே, ஓட்டம் மற்றும் நடனம் போன்ற பயிற்சிகள் செய்வதற்கு ஒரு மணி நேரமாவது செலவிடவேண்டும்.

என்னதான் சிறந்த உணவு உண்டாலும் உடலின் மெட்டோபாலிசம் சிறப்பாக வேலை செய்தால்தான் உடல் வளர்ச்சி, ஆரோக்யம் சிறந்து விளங்கும். அதற்கு இந்த பயிற்சிகள் அவசியம்.

மேலும் உடல் உற்சாகமாக இருக்கவும், ஞாகபசக்தி, சிந்தனைத்திறன் சிறந்து விளங்க உடற்பயிற்சி மிக மிக அவசியம். ஆகவே உடற்பயிற்சிக்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும்.

மூன்று வித நோய்கள்:

டெட்டனஸ், கக்குவான், இளம்பிள்ளை வாதம் இம்மூன்றும் சிறு குழந்தைகளை பாதிக்கும் உடல்நோய்கள். தடுப்பூசி மூலம் இவைகள் வராமல் தடுக்கப்படுகிறது. இது போல குழந்தைகள் மனதை பாதிக்கும் நோய்கள் குற்ற உணர்வு, பயம், நேசிக்கப்படா நிலை.

இந்த மூன்று குறைகளும் குழந்தைகளின் ஆளுமைத்தன்மையை கெடுக்கிறது. எப்போது ஒரு குழந்தை தன் பெற்றோரால் நேசிக்கப்படுகிறதோ அப்போதே அதற்கு உயர்ந்த தன்மதிப்பு (Self Esteem) உருவாகிறது.

திட்டுதல்:

அநேக பெற்றோர்களுக்கு பல பிரச்சனைகள், சிக்கல்கள், கவலைகள், மன போராட்டங்கள். இதன் காரணமாக குழந்தைகள் மேல் எரிந்து விழுகிறார்கள். பாவம் அந்த குழந்தைகள் என்னதான் செய்யும், யாரிடம் போய் சொல்லும். இப்படி எப்போதாவது நாம் நடந்துகொண்டால் பின்பு அவர்களை அழைத்து, அவர்களிடம் நம் தவறுக்கு மன்னிப்பு கோரவேண்டும். அப்போது அவர்கள் நம்மை புரிந்துகொண்டு மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள்.

அநேகமாக ஐந்து வயதுக்குள் குழந்தைகளுக்கு மனம் உருவாகிறது. அந்த வேளையில் தாயின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முகபாவங்களும், சொல், செய்கையுமே குழந்தையின் மனதை பாதிக்கின்றன. நம்பிக்கையூட்டும் உற்சாகமான மகிழ்வான முகத்தை பார்க்கும் குழந்தைகளுக்கு நல்ல மனம் உருவாகிறது.

செயல்கள் செய்யும்போது தவறுகள் வரும். தவறுகள், தவறுகள் அல்ல. ஆனால் ஒரு தவறை மறுமுறை வராமல் இருக்க அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

தவறுகள் செய்யும்போது அதற்கான பலன்கள் கிடைக்கும் அதை எதிர்கொள்ள துணிவு வேண்டும். தவறுகள் வந்தால் குழந்தைகளை திட்டி உனக்கு இதை செய்ய தகுதி இல்லை என்று மட்டும் கூறவே கூடாது. தாழ்வு மனப்பான்மை உருவாக்கக் கூடாது. தவறாமல் இருக்க வழிகளையும், தவறுகளின் பின்விளைவுகளையும் எடுத்துக் கூறவேண்டும்.

திட்டுக்கள், தண்டனைகள் அதிகமாகும்போது அநேக விசயங்களை நமக்கு தெரியாமல் குழந்தைகள் மறைப்பார்கள். அதனால் இன்னும் குற்ற உணர்வு கூடி மனம் நம்பிக்கையிழந்து குறுகிப் போகும்.

பயம்:
நாம் குழந்தைகளின் தொல்லைகளில் இருந்து விடுபட குழந்தைகளை சாப்பிட வைக்க பேய், பூச்சாண்டி, போலீஸ்காரன், பிள்ளைபிடிப்பவன் என பல வித பெயர்களில் பயப்படுத்துகிறோம். தற்காலிகத் தீர்வுக்காக குழந்தைகளின் மனதில் பயம் என்ற விசத்தை தூவுகிறோம். பயம் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும். வீரம் இல்லாவிட்டால் அறிவால் எந்த பயனும் இல்லை. அறிவு சிறப்பாக செயல்பட வீரம் வேண்டும்.

நேருக்கு நேர் பார்:
இன்று கதிரவன் உதிப்பதை கூட குழந்தைகள் தொலைக்காட்சியில்தான் பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு உலகத்தைக் காட்ட வேண்டும். உலகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் காட்ட வேண்டும். அவர்களின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அவைகள் பயனுள்ளதாக இருக்கும்.

உயர்ந்த மலைகளை, அடர்ந்த காடுகளை, கடற்கரைகளை, பவுர்ணமியை, கதிரவன் உதயத்தை, பறவைகள், புழுக்கள் கூடு கட்டுவதை, முட்டையில் இருந்து குஞ்சு வெளிவருவதை.

கிராமங்களை, நகரங்களை, சந்தைகளை, தொழில்கூடங்களை, நீதிமன்றங்களை, காவல் நிலையங்களை, அதிகாரிகளை, அமைச்சர்களை, பாராளுமன்றம், சட்டமன்றம் இப்படி வாழ்வின் எல்லா அம்சங்களையும் குழந்தையாக இருக்கும்போதே நேரில் பார்ப்பது விசாலமான மனதை உருவாக்கும்.

உயர் அதிகாரிக்கும், பணம் பெற்றிருப்பவர்களுக்கும் இருக்கும் அந்த செல்வாக்கை அவர்கள் உணர வேண்டும். இவைகள் தன் இலக்கினை உருவாக்க அவர்களுக்கு உதவும். இதுவே கல்விச்சுற்றுலா.

இயந்திரங்கள் அல்ல:

இன்று எல்லாமே இயந்திரமாகி போய்விட்டது. நமது வாழ்க்கை இயந்திரத்தனமாக ஆகிவிட்டது. எல்லாவற்றையும் வியாபார நோக்கோடு பார்க்கிறோம்.

மாடு என்றால் பால் கொடுக்கும் இயந்திரம். கோழி என்றால் முட்டை போடும் இயந்திரம். மனிதன் என்றால் பணம் உண்டாக்கும் இயந்திரம், குழந்தைகள் என்றால் (புரிந்தாலும் புரியாவிட்டாலும்) மார்க்குகள் வாங்கும் இயந்திரங்கள்.

இவைகளால் முடங்கிப் போவதல்ல வாழ்க்கை, குழந்தையானாலும் பெரியவரானாலும் வாழ்க்கை வாழப்பட வேண்டும்.

வாழ்வதற்கே படிப்பு, வாழ்வதற்கே உழைப்பு, வாழ்வதற்கே வருமானம். ஆகவே ஆனந்தமாக வாழத் தெரிந்திருக்க வேண்டும்.

பண நிர்வாகம்:

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை இருக்கும். சில குறைகளும் இருக்கும். ஆனால் எல்லா குழந்தைக்கும் பொதுவாக மொழிப் பாடமும் கணிதப் பாடமும் சொல்லித் தருகிறோம். அதுபோன்ற அடிப்படையான பாடம் ஒன்று உண்டு.

அதுதான் பண நிர்வாகம் (Finance Management) என்ற வரவு செலவு கணக்கு. எப்படியும் வரவுக்குள் செலவு இருக்க வேண்டும். செலவுகளில் சிக்கனம் வேண்டும்.

எந்த திறமை இல்லாவிட்டாலும் பண நிர்வாகம் என்ற திறமை இருந்தால் என்றும் நிம்மதியாக வாழலாம்.

எப்போது வேண்டுமானாலும் சிக்கல்கள் வரலாம். அமெரிக்காவே இன்று சிக்கல்பட்டு இருக்கிறது. வரவுக்குள் செலவை வைக்கவும், கடன் வாங்காதிருக்கவும் பழக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் செய்யாதிருக்கவும் சில்லரைகளிடம் கவனமாக இருந்தால் பெருந்தொகை தானாக வரும்.

சிக்கனம் என்றுமே மனிதனை காப்பாற்றும். அதிகமாக சம்பாதிக்கும் அநேகர் அல்லல்படும்போது, குறைவான வருமானத்தில் மகிழ்வாக வாழ்பவர் அநேகர்.

தந்தையிடம் கோடி கோடியாக பணம் இருந்தாலும் செலவில் சிக்கனம் என்ற குணம் யாவருக்கும் வேண்டும்.

சிக்கனம் மனிதனின் சிறந்த பாதுகாப்பு கவசம். குழந்தை மனதில் இது உருவாக்கப்பட வேண்டும்.

"ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடுஇல்லை

போகாறு அகலாக் கடை"- திருக்குறள்

குழந்தைகளிடம் பணத்தை கொடுத்து தங்களுக்கு தேவையானவற்றை அவர்களே வாங்கவும் கணக்குகளை பார்க்கவும் மீதி காசை கவனமாக திருப்பி வாங்கவும் நாம் பயிற்றுவிக்க வேண்டும்.

சமுதாய நோக்கு

இன்று நாம் குழந்தைகளுக்கு நல்ல வருமானம் வரக்கூடிய தொழிற்கல்விகளை கொடுக்கலாம். கூடவே சுயநலத்தோடு வாழவும் சொல்லித் தருகிறோம். நம்மிடம் ஒரு சமுதாய நோக்கு இல்லை.

நம் வீட்டை பளிங்கு போல வைத்திருப்போம். நம்மைச் சுற்றியுள்ள சாலைகள் படு மோசமாக இருக்கும். சாக்கடைகள் தேங்கி துர்நாற்றம் வீசும். அதைப்பற்றி நாம் கவலை கொள்ள மாட்டோம்.

நமக்கு பணம் வருகிறது என்னும் போது அந்த பணம் வரும் வழி நல்ல வழியாக இருக்கிறதா? நம் செயல் சமுதாயத்திற்கு பாதிப்பு வராமல் இருக்கிறதா? என்று சிந்தனையை உருவாக்க வேண்டும்.

இந்த குழந்தை தன்னை உயர்த்தினால் போதாது. தன்னைச் சுற்றியுள்ளவரும் உயர வழி காண வேண்டும். அப்போது அந்த குழந்தை நல்ல குடிமகனாக, நல்ல தலைவனாக நல்ல வழிகாட்டியாக உயரும்.


No comments

Powered by Blogger.