யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர சமாதானம் பிரகடனப்படுத்தப்படவில்லை - ஜெஸீமா இஸ்மாயில்
தேசத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போது தான் அந்நாட்டு மக்களின் நற்பெயர் பாதுகாப்பு பேணப்படும். அவ்வகையில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிட சமூகத் தலைவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் தலைவியுமான தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் கொழும்பில் நடைபெற்ற சர்வ சமயத் தலைவர்களது மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டார்.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் மேற்படி சர்வசமய சமூகத்தலைவர்களின் மாநாடு கொழும்பு 05, எக்கு மெனிக்கல் நிறுவக கேட்போர் கூடத்தில் முன்னணியின் நிகழ்ச்சித்திட்டப் இணைப்பாளர் திருமதி லைலா உடையாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
நாட்டின் பல பாகங்களிலுமிருந்து இந்து, இஸ்லாம், பௌத்த, சமய சமூகத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். வளவாளர்களாக களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் (இந்து) ஊடகவியலாளர் எம்.ரவூப்தீன் (இஸ்லாம்) சகோ. கனிஸ் பெர்னாண்டோ (கிறிஸ்தவம்) ஆகியோர் செயற்பட்டனர்.
அங்கு தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் மேலும் பேசுகையில், " நமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்க்க வேண்டும். இலங்கையர் அனைவரும் சேர்ந்து பேசி முடிவுக்கு வர வேண்டும். நாம் அனைவரும் சமமானவர்கள் சீரான விழுமியங்களைக் கொண்டவர்கள். சமய, சமூகத் தலைவர்கள் என்றவகையில் எமக்கு முக்கியமான பொறுப்புண்டு. அது நாட்டுக்கான கடமையும் கூட. சிவில் சமூகம், குறைத்து மதிப்பிடக்கூடிய பங்காளிகள் அல்ல.
நாட்டில் புரையோடிப் போயிருந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர சமாதானம் பிரகடனப்படுத்தப்படவில்லை எனவே சகலருக்குமான பாதுகாப்பு என்பது தேவையான ஒன்றாகிறது. வேற்றுமைச் சமூகம் உருவாகா வண்ணம் அதே சமூகத்தின் மத்தியில் அடிப்படைச் சமூக மாற்றங்கள் தேவை. பன்மைத்துவ சமூகத்தை முறையாக கட்டியெழுப்ப நாம் முனைப்புக் காட்ட வேண்டும். அதற்கான புரிந்துணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
Post a Comment