Header Ads



ஈராக்கில் அமெரிக்க படைகள் தொடர்ந்து நிலைகொண்டுள்ளன - ஜோர்ஜ் புஷ் போர்க்குற்றவாளியே - ஜெனீவாவில் முழக்கம்

ஈராக்கில் அமெரிக்கா கடந்த 9 ஆண்டுகளாக புரிந்துவரும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு ஈராக்கைச் சேர்ந்த வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு ஹசன் தலைமை தாங்கினார். உண்மையிலேயே இன்று நாம் வேதனைப்பட வேண்டிய தினம். இன்றுடன் அமெரிக்கா ஈராக்கில் கால்பதித்து 9 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இந்த 9 ஆண்டுகளில் அமெரிக்க படைகள் ஈராக்கில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்துள்ளது.

அமெரிக்கா விரைவில் ஈராக்கில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறும் என்று கூறினாலும் இப்போதும் 45ஆயிரம் அமெரிக்க படையினர் சிவில் உடையில் ஈராக்கிய மக்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் ஒரு லட்சம் அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கில் இருப்பதுடன் அங்கு பணிபுரியும் அமெரிக்க ராஜதந்திரிகளுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு அளிப்பதற்காக 15ஆயிரம் கூலிப் படைகளையும் அமெரிக்கா வைத்திருக்கிறது.

ஈராக்கில் யுத்தக் குற்றச்சாட்டுகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்ட சகல அமெரிக்கர்களும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உட்பட அனைவருமே சட்டபூர்வமான முறையில் தண்டிக்கப்பட வேண்டும். ஈராக்கில் பூர்வீக குலங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து வன்முறை களையும் குண்டுத் தாக்குதல்களையும் மேற்கொண்டு வரும் அமெரிக்கா, ஈராக்கில் தங்கள் உத்தரவு படி தலையாட்டும் துரோகிகளை அதிகாரப்பீடத்தில் அமர்த்தி, தனது விருப்பப்படி கொடுங்கோல் ஆட்சியை செய்து வருகின்றது.

அமெரிக்கா இப்போது பாதுகாப்பு நிறுவனங்கள் என்ற பெயரில் ஈராக்கில் சுமார் 5,000 வரையிலான கூலிப்படைகளை சேவையில் அமர்த்தியுள்ளது. இவர்களே கார் குண்டுகளை வெடிக்கச் செய்து ஈராக்கில் மனித படுகொலைகளை செய்து வருகிறார்கள். ஈராக்கில் இருந்து உடனடியாக அமெரிக்கா வெளியேறி, அந்நாட்டில் மீண்டும் அமைதியையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்த இடமளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.



No comments

Powered by Blogger.