Header Ads



காளை மாட்டின் உயிரை காப்பாற்றியது போல.. (வலம்புரி ஆசிரியர் தலையங்கம்)

(யாழ்ப்பாணத்திலிருந்து இன்றைய தினம் 2012-03-26 வெளியாகிய வலம்புரி பத்திரிகை முஸ்லிம் சகோதரர் ஒருவரினால் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்து மாடு தொடர்பில் எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்தை இங்கு தருகிறோம்)

நேற்றைய தினம் வெட்டப்படவிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான காளை மாட்டை வெட்டுவதற்குத் தடை பிறப்பிக்கப்பட்ட செய்தி அறிந்து ஆனந்தப்பட்ட மக்கள் ஏராளம். அவர்கள் தங்கள் மனத்திருப்தியைத் தொலைபேசிகளில் தெரிவித்தபோது-எங்களிடம் இருக்கக் கூடிய ஜீவகாருண்யத்தை நினைத்தபோது, ஆனந்தக் கண்ணீர் பெருகிக் கொண்டது. நேற்றுக் காலைவேளை அம்மையார் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

காளை மாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இரவு பூராகவும் தான் பிரார்த்தனை செய்ததாகக் கூறினார். காளை மாடு காப்பற்றப்பட்டுவிட்ட செய்தி அறிந்த பின்னரே தான் நிம்மதி அடைந்ததாகக் கூறினார். என்னே கருணை! என்று நினைத்தபோது, நெஞ்சம் நெக்குருகிக் கொண்டது. வீட்டிற்கு வெளியில் தொட்டி கட்டி, அந்தத் தொட்டியில் தண்ணீர் இறைத்து தெருவால் போகின்ற மாடுகள் தாகம் போக்க வழிசெய்த நம்மவர்கள், தண்ணீர் குடித்த மாடுகள் வாயைத் துடைப்பதற்காகத் தொட்டிக்கு அருகில் பெரிய தொரு கல்லையும் வைத்தனர்.

இத்தகைய உயரிய இந்துப் பண்பாட்டின் உரிமைக்காரர்கள் நாம் என்று நினைக்கும் போது மார்தட்ட வேண்டும்போல் இருக்கின்றது. காளை மாடு வெட்டப்படுவதான தகவலை அறிந்தவுடன் எங்கள் சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஜீவகாருண்யம் மிக்கவர்கள் ஒன்றாகக் குரல் கொடுத்தனர்.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட யாழ் அரச அதிபர் அங்கிருந்தவாறே காளை மாட்டைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்தபோது, மாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று யாழ் மாநகர முதல்வர் உறுதியாகத் தெரிவித்ததை தெரிந்து கொண்டபோது, முஸ்லிம் மக்கள் அதற்கு மதிப்பளித்தபோது, எல்லா விடயத்திலும் இப்படி ஒரு ஒற்றுமை; ஒருமைப்பாடு; ஒத்த குரல் இருந்தால் எங்கள் மண்ணில் எந்தக் குறைக்கும் இடமில்லை என்று எண்ணத் தோன்றியது.

ஆம், காளை மாட்டின் உயிரைக் காப்பாற்றுவதில் எங்ஙனம் ஒற்றுமைப்பட்டோமோ அது போல் எங்கள் இளம் பிள்ளைகள் மத்தியில் கலாசார கட்டுமானத்தைக் கட்டியயழுப்ப நாங்கள் அனைவரும் ஒன்று திரளவேண்டும். இத்தகைய ஒழுக்கக் கட்டுமானங்களை பிள்ளைகளின் உள்ளங்களில் வைரமாக கட்டி எழுப்பினால், யாழ்ப்பாணத்து மண்ணில் வாழ வேண்டும் என்பதற்காக பலர் வெளிநாட்டு வாழ்க்கையை தூக்கியயறிந்து விட்டு இங்கு வருவர். இது சத்தியம். நடக்குமா?

எமது முன்னைய செய்தி

http://www.jaffnamuslim.com/2012/03/blog-post_6908.html

யாழ்ப்பாண முஸ்லிம்கள் இறைச்சிக்காக மாடு வெட்டுதலும், தவறான கருத்துக்களும் (படங்கள் இணைப்பு)

குறிப்பு - இப்போது பல மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் இந்த வலம்புரி பத்திரிகை ஐந்துசந்தியில் யாழ் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு சொந்தமான ஹோட்டலில் கொத்து ரொட்டியுடன் நாய் இறைச்சி கலக்கப்பட்டு விற்கப்படுவதாக செய்தி வெளியிட்டது. இவ்வாறு ஆதாரமற்ற செய்தி வெளியிட்ட வலம்புரி பத்திரிகைக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்கள் அன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்ட படங்களையே கீழே காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.