Header Ads



சிங்கள மக்கள் குர்ஆனிய கருத்துக்களை அறிய வாய்ப்பு - மௌலவி ஏ.எல்.எம் இப்ராஹீம்

சந்திப்பு சிராஜ் மஷ்ஹுர், இன்ஸாப் ஸலாஹுதீன்


மௌலவி ஏ.எல்.எம் இப்ராஹீம் அவர்கள் மாவனல்லை உயன்வத்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1948 ஆம் ஆண்டு மஹரகம கபூரிய்யாவில் நுழைந்தார். கொழும்பு பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இலங்கை ஜமாஅதே இஸ்லாமியுடன் தன்னை இணைத்துக் கொண்டு சமூக சீர்திருத்தப் பணிகளில் நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் இவர் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாஹியா அரபுக் கல்லூரி, மாவனல்லை ஆயிஷா சித்தீகா கல்வி நிலையம், தன்வீர் அகடமி, செரன்திப் ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்களை உருவாக்குவதில் இப்ராஹீம் மௌலவி அவர்கள் கூடிய ஈடுபாடு காட்டியவர். ஜாமிஆ நளீமியாவின் பாடத்திட்ட தயாரிப்பிற்காக ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவில் மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம் அவர்களும் அங்கத்துவம் வகித்ததோடு நளீமியாவின் முதலாவது பாடத்திட்டத்தையும் இவர் வரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்ஹீமுல் குர்ஆன் எனும் மௌலானா மௌதூதி (றஹ்) அவர்களின் தப்ஸீரை சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் தலைமையிலான குழு அப்பணியை நிறைவு செய்துள்ளது. அதன் 12 பாகங்களும் சிங்கள மொழியில் வெளிவந்திருக்கும் காலத்தில் அப்பணி தொடர்பான அனுபவங்களை அவருடன் உரையாடினோம். உரையாடலின் முக்கிய பகுதிகளை மீள்பார்வை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

தப்ஹீமுல் குர்ஆனை சிங்கள மொழிக்கு மாற்றும் பணியில் எப்படி ஆர்வம்  வந்தது? அதன் பின்னணி பற்றிக் கூறமுடியுமா?
நான் வளர்ந்த சூழல் இதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். எங்களது வீட்டுத் தோட்டத்திலே சிங்கள சகோதரர்கள் வேலை செய்தார்கள். மற்றும் நான் படித்த, பணியாற்றிய இடங்களிலும் சகோதர இணத்தவர்களோடு பழகக் கிடைத்து. இதனால் இஸ்லாத்தின் தூதை அவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும் என ஆர்வம் கொண்டேன்.

இலங்கையில் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே குர்ஆன் வகுப்புக்கள் நடைபெறுவது வழக்கம். ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்டதும் குர்ஆன் வகுப்பில்தான். குர்ஆனின் செய்திக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்ததும் இம் மொழிபெயர்ப்புக்கு ஒரு காரணமாக இருக்கின்றது.

1930 களின் பிற்பகுதியில் மௌலானா மௌதூதி அவர்கள் தர்ஜுமானுல் குர்ஆனை எழுத ஆரம்பித்தார்கள். 1942 இல்தான் அதில் தப்ஹீமுல் குர்ஆனை எழுத ஆரம்பித்தார்கள். 1942 இல் எழுதத் தொடங்கிய மௌலானா அவர்கள் 1972 இலே அதனை எழுதி முடித்தார்கள். 1967 இலே அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியானது.

தப்ஹீமுல் குர்ஆனை சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் பணி எப்போது ஆரம்பமானது?
முஸ்லிம்கள் குர்ஆனை விட்டுத் தூரமாகியதுதான் அவர்களது வீழ்ச்சிக்குக் காரணம் என நாம் உணர்ந்தோம். எனவே அவர்களை அல்குர்ஆனின் பக்கம் மீட்க வேண்டிய பணி நமக்கு முன்னே இருந்தது. ஒரு தனிமனிதன் முதல் ஒரு சமூகம் வரை உருவாக்குவதற்கு அல்குர்ஆன் வழிகாட்டுகின்றது.

எனவே எமது இலட்சியத்திற்கு அது துணைசெய்வதாக இருந்தது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு இந்தியாவிலிருந்து வரும் என்பதனால் சிங்கள மொழியில் நாம் செய்யலாம் என நினைத்தோம். இந்த நாட்டு மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டிய பாரிய கடப்பாடு எமக்கிருக்கின்றது.

நான் அமீராக இருந்த காலப் பகுதியில்தான் இப்பணி ஆரம்பிக்கப்பட்டது. அபூ உபைதா அவர்கள் இதற்கு தூண்டுதலாக இருந்தார். மொழித் திணைக்களத்தல் பணிபுரிந்த ஜயசிங்க என்பவரின் உதவியோடு தப்ஹீமின் முதலாவது பாகத்தை 1989 இல் வெளியிட்டோம்.

தொடர்ந்து வந்த காலங்களில் மொழிபெயாப்பு மற்றுமல்லாமல் அதனை உர்து ஆங்கிலம் போன்ற மொழி பெயர்ப்பு நூல்கலோடு ஒப்பிட்டு நோக்க வேண்டியிருந்ததனாலும் அதனைத் தொடர முடியவில்லை. 2000 ஆம் ஆண்டுவரை அந்த இடைவெளி தொடர்ந்தது.

இதனை எப்படியாவது பூரணப்படுத்த வேண்டும் என்ற அவா மனதில் இருந்தது. எனவே இரண்டு வருடங்கள் இதனோடு என்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டேன். 2002 இல் முதலாவது பாகத்தை மீண்டும் வெளியிட்டோம்.

அப்படியாயின் அதன் பின்னரா ஏனைய பகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டன?
ஆம் 2002-2012 வரை இதில் முழுமையாக ஈடுபடும் வாய்ப்பை அல்லாஹ் தந்தான். லங்காதீபயில் பணி புரிந்த ஷரீப்தீன் ஆசிரியர் அவர்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சம புலமை பெற்ற ஒருவர். அவருடன் எனக்குத் தொடர்பிருந்தது. அவர் ஓய்வு பெறப் போவதாகச் சொன்னதும் தப்ஹீமைச் செய்ய அவரை அழைத்தேன். 8 பாகங்கள் வரை அவர் இதிலே பணியாற்றினார்.
அதன் பின்னர் மாஹிர் மௌலவி அவர்கள் இதில் இணைந்தார். யூஸுப் இஸ்மாஈல், நஜ்முதீன் ஆசிரியர் போன்றோரும் இதில் பங்கெடுத்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு முடிகின்ற பாகங்களை எமது புத்தகசாலை வெளியிட்டு வந்தது. சென்ற வருடம் ரமழான் 17 ஆம் நாள் நாம் எதிர்பார்க்காமலேயே இப்பணி நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

மூல நூலிலிருந்து இம் மொழிபெயர்ப்பு எந்த வகையில் வித்தியாசப்படுகின்றது?
 
உண்மையில் தப்ஹீமின் ஏனைய மொழிபெயர்ப்பு நூல்களைவிட அதன் சிங்கள மொழி பெயர்ப்பு நூல் விஷேட தன்மையை உள்ளடக்கியிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இதிலே தேவையான இடங்களில் விளக்கங்களும் அடிக்குறிப்புக்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆத்தோடு மௌலானா அவர்கள் மொத்தமாக விளக்கும் ஒழுங்கை நாம் கருத்துச் சிதையாத வகையில் அதனை தனித்தனி ஆயத்திற்கான விளக்கமாகப் பிரித்திருக்கிறோம். இலகுவாகப் புரிந்து கொள்வதற்கே அப்படிச் செய்திருக்கிறோம். இது ஏனைய மொழிபெயர்ப்புக்களில் இல்லாத ஒரு விஷேட அம்சமாகும்.

மேலும் இஸ்லாம் பற்றிய ஒரு அறிமுகக் குறிப்பு எழுதி இணைக்கப்பட்டுள்ளது. மௌலானாவின் Towards Understanding Islam நூலின் சுருக்கமும் நபியவர்களின் வாழக்கை வரலாற்றின் சுருக்கமும் இதிலே சேர்க்கப் பட்டுள்ளது. இஸ்லாம் பற்றிய முழுமையான அறிமுகத்தை வழங்கவே இவற்றை இணைத்துள்ளோம்.

ஒரு அல்குர்ஆன் விளக்க நூல் சிங்கள மொழியிலே வந்திருப்பதானது மகத்தான ஒரு பணியாகும். இப் பணியைப் பற்றி சுருக்கமாக என்ன சொல்கிறீர்கள்?
அல்லாஹ்வின் அருளைக் கொண்டு இப்பணி நிறைவு பெற்றுள்ளது. சிங்கள மொழியில் படிக்கக் கூடிய முஸ்லிம் மாணவர்களுக்கும் சிங்கள மொழி பேசக் கூடியவர்களில் இஸ்லாத்தைப் பற்றி அறிய விரும்புவர்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றிய தப்பெண்னங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த வெளியீடானது நிச்சயம் நன்மைகளைக் கொண்டு வரும். மட்டுமல்லாது இது சிங்கள இலக்கியத்திற்கான எமது பங்களிப்பாகும்.

மேலும் தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மூலம் பெரும்பான்மை மக்களுக்கு குர்ஆனிய சிந்தனையை, கருத்துக்களை அறியும் வாப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.