இலங்கை இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை - ஜெனரல் ஜகத் ஜயசூரிய
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்திருப்பதாக அந்த நாட்டின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசமாகிய வன்னியில் தெரிவித்திருக்கின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பகுதிக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றியபோதே இதனைக் கூறியிருக்கின்றார். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு சம்பவங்களே இடம்பெற்றிருக்கின்றன என்பதை, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் திரட்டிய சாட்சியங்களின் ஊடாக நல்லிணக்க ஆணைக்குழு கண்டறிந்து கூறியிருக்கின்றது. இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்திருக்கின்றது.
அதற்கேற்ப, நியமிக்கப்பட்டுள்ள இராணுவ விசாரணைக்குழுவொன்று தனது விசாரணைகளை நடத்தி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். "இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தும் வெல்ல முடியாத ஒரு பயங்கரவாத யுத்தத்தில் வெற்றிகொண்டதைப் பெரிய நாடுகள் பொறாமையுடன் நோக்குவதன் விளைவாகவே, ஜெனீவா மாநாட்டில் இலங்கைககு எதிராக மனித உரிமை மீறல்கள் பிரேரணையைப் பெரிய நாடுகள் கொண்டு வந்திருக்கின்றன."
"இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சனல் 4 தனது இரண்டாவது காணொளியை வெளியிட்டிருக்கின்றது. இதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. ஜெனீவா மாநாட்டுப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலும் எந்தவிதமான உண்மையும் கிடையாது."
"இறுதிச் சண்டைகளில் கலந்து கொண்ட இராணுவத்தினர், அப்போது அங்கிருந்தவர்களின் நேரடி சாட்சியங்களை உள்ளடக்கியதாக பிரபாகரனுக்கு இறுதி நேரத்தில் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்படுகின்ற தொலைக்காட்சிப்படத்தின் மூலம் நாட்டு மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கவுள்ளோம்." இப்போது யுத்தமில்லை. இது மீள்குடியேற்றத்துடன் கூடிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைபெறுகின்ற காலம். எனவே இராணுவத்தினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும். வீணான வதந்திகள், குற்றச்சாட்டுக்களுக்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment