யாழ்ப்பாண முஸ்லிம்களை பலாத்காரமாக வெளியேற்றிய புலிகளின் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்களா..??
கரிகாலன் இளம்பரிதி (ஆஞ்சநேயன்) |
இப்னு முஹம்மத்
''கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சாதனைகள்'' என்ற யாழ் முஸ்லிம் இணையத்தில் அண்மையில் வெளியாகியிருந்த ஆக்கத்திற்கு மேலதிகமாக இக்கட்டுரையை இங்கு பதிவு செய்கிறேன்..!
1990 காலப் பகுதியில், கடைசி நிமிடம் வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவன் என்ற வகையில் சில உண்மைகளை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். 1990 ஆம் ஆண்டு பிரேமதாச அரசாங்கத்துடனான புலிகளின் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து, அரசாங்க பேச்சுவார்த்தைக் குழுவின் மிக முக்கிய அங்கத்தவரான அப்போதைய உயர்கல்வி அமைச்சர் A C S ஹமீத் பலாலி இராணுவத் தளத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கடைசி நிமிட பேச்சுவார்த்தை முயற்சிகளும் பயனாற்றுப் போய் ஜூன் 10 , 1990 இல் யுத்தம் வெடித்த பொழுது யாழ் நகர மக்களினதும்,சோனகதெரு முஸ்லீம்களினதும் முக்கிய சவாலாக இருந்த விடயம் கோட்டை இராணுவ முகாமிலிருந்து அடிக்கடி மேற்கொள்ளப்படும் பயங்கர தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி என்பதாகும்.
இதனால் அதிகமான யாழ் நகர மக்களும், முஸ்லீம்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்கள் கடைசியில் அதே ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி இராணுவம் கோட்டையைக் கைவிட்டு மண்டை தீவு வழியாக தப்பிச் சென்ற பின்னர் ,வெளியேறாமல் எஞ்சியிருந்த முஸ்லீம்களும் மற்றவர்களைப் போலவே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அனால் அதனை நீடிக்க புலிகள் விடவில்லை.
மன்னார் முஸ்லீம்கள் 2 நாள் அவகாசத்தில் வெளியேற்றப் பட்டமை, முல்லைத்தீவு முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை போன்ற விடயங்களை யாழ்ப்பாண முஸ்லிம்கள் அறிந்தே வைத்திருந்தனர்.
இன்றோ நாளையோ தாமும் வெளியேற்றப்படப் போகின்றோம் என்பது அவர்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தது, அது பற்றி அடிக்கடி பேசிக்கொண்டார்கள். அதனை எதிர்பார்த்தே இருந்தார்கள்.
சிலர் பயணப் பைகளை கூட வாங்கினார்கள்.
புலிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மிகச் சிலர் வெளியேற்றப்படப் போகும் குறித்த நாள் குறித்து சில தினங்களுக்கு முன்னரே நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள் என்பது அவர்களின் இறுதி நேர செயல்பாடுகளை பின்னர் அசை மீட்டிப் பார்த்த பொழுது புரிந்து கொள்ள முடிந்தது, எனினும் அவர்கள் அதனை மற்றவர்களுக்கு நேரடியாக சொல்லியிருக்கவில்லை.
குறித்த நபர்களின் பெயர்களையோ, அவர்களின் யாழ்ப்பாணக் கடைசி நாட்களின் செயல்பாடுகளையோ இங்கே குறிப்பிடும் நோக்கம் எனக்கில்லை.
கோட்டை இராணுவ முகாம் நகருக்கு அருகில் இருந்த காரணத்தினால் இராணுவ தாக்குதலுக்குப் பயந்து 65 - 70 % வரையான முஸ்லீம்கள் ஏற்கனவே தாமாக வெளியேறிவிட்ட நிலையிலே சொனகதேரு அப்பொழுது காணப்பட்டது. எஞ்சியிருந்த ஒவ்வொரு குடும்பத் தலைவர்களிடமும் குறைந்த பட்சம் 3 - 4 வீடுகளின் திறப்புகள் கொடுக்கப் பட்டு,அந்த வீடுகளைப் பார்த்துக்கொள்ளும் பணி நட்பின்/ உறவின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.
மின்சாரம் இல்லாத காரணத்தால், திருடர்களும் அதிகரித்துக் காணப்பட்டனர். எனவே புலிகளின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட பொதுமக்கள் காவல் அமைப்புகளும் இருந்தன. இதுதான் அப்போதைய சொனகதேருவின் உண்மை நிலைமை.
இவ்வெளியேற்ற நிகழ்வு நடப்பதற்கு சரியாக 35 நாட்களுக்கு முன்னரே கோட்டை ராணுவ முகாமை இராணுவம் கைவிட்டு சென்றிருந்தாலும் யாழ்ப்பாணத்தில் வழமை நிலைமை திரும்பியிருக்கவில்லை. யாழ் நகரில் வியாபாரங்கள் நடைபெறவுமில்லை, பாடசாலைகள் திறக்கப்பட்டிருக்க்கவுமில்லை என்பதே உண்மையாகும்.
அன்றைய நாட்களில்,புதிய சோனகதெரு மற்றும் வேறு இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்த மக்கள் ஒஸ்மானியா கல்லூரியில் அகதிகளாக தங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாணத்தில் புலிகள் அக்காலத்தில் வழமையாகவே ஆயுதத்துடனேயே காணப்பட்டனர்.
குறித்த தினத்தன்று காலை 9 மணியளவில் ஆயுதங்களுடன் முஸ்லிம் பிரதேசத்துக்குள் அதிக எண்ணிக்கையில் வந்த புலிகள் முஸ்லிம் மக்கள் அவைவரையும் ஒஸ்மானியாக் கல்லூரி மைதானத்தில் ஒன்றுகூடும் படி உத்தரவிட்டனர்.
அங்கே வைத்து மக்களை விழித்த புலிப் பொறுப்பாளன், ''இரண்டு மணி நேரத்தில் நீங்கள் வெளியேற வேண்டும்'' என்ற வரலாற்றின் கொடூரமான கட்டளையை மொழிந்தான். அதிர்ந்து போன மக்கள், 10 நாட்கள் என்பதில் ஆரம்பித்து,கடைசியாக ஒரு நாள் என்பது வரை அவர்களிடம் தவணை கேட்டனர், எதுவுமே ஏற்றுக் கொள்ளப் படவில்லை, புலிகளோ இரண்டு மணி
நேரம் என்பதில் உறுதியாக இருந்தனர்.
நேரம் என்பதில் உறுதியாக இருந்தனர்.
காசு ஐம்பது ரூபாய் (அல்லது ஐநூறு ரூபாய், சரியாக ஞாபகமில்லை) , அணிந்திருக்கும் நகைகள், சைக்கிள், உடுதுணிகள் என்பவற்றை மட்டும் எடுத்துச் செல்லலாம், மின்சார உபகரணங்கள், மேலதிக பணம், மேலதிக நகைகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது.
மக்கள் சோகத்துடனும், டென்சனுடனும் வீடுகளுக்குத் திரும்பி, கையில் அகப்பட்டவைகளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகினர். அப்பொழுது புலிகள் ஒவ்வொரு வீடாக உள் நுழைந்து மக்களை போகும்படி அவசரப்படுத்தினர். மக்கள் ஐந்து சந்தியை நாடிச் சென்றனர். ஓரிருவர் தங்கள் புதிய வர்ணத் தொலைக்காட்ச்சிப் பெட்டிகளைக் கூட தூக்கிக் கொண்டுவந்து அவற்றை ஐந்து சந்தியில் வைத்து புலிகளிடம் பறி கொடுத்ததைக் கூட காணக் கூடியதாக இருந்தது.
அங்கே புலிகள் சோதனை செய்தனர், மக்களின் பொருட்களை சோதனை செய்து புதிய உடுப்புக்கள், பணம் , நகைகள் உட்பட அனைத்துப் பெறுமதியான பொருட்களையும் பறித்துக் கொண்டனர். பெண்களை பெண் புலிகளே சோதனை செய்தனர். அவர்களுக்கு சந்தேகமாகத் தோன்றிய பெண்களை மட்டும் தனியான இடத்துக்கு பெண்புலிகள் அழைத்துச் சென்று உடல் சோதனை நடத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அங்கே புலிகள் சோதனை செய்தனர், மக்களின் பொருட்களை சோதனை செய்து புதிய உடுப்புக்கள், பணம் , நகைகள் உட்பட அனைத்துப் பெறுமதியான பொருட்களையும் பறித்துக் கொண்டனர். பெண்களை பெண் புலிகளே சோதனை செய்தனர். அவர்களுக்கு சந்தேகமாகத் தோன்றிய பெண்களை மட்டும் தனியான இடத்துக்கு பெண்புலிகள் அழைத்துச் சென்று உடல் சோதனை நடத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் மக்கள் வைத்தீஸ்வரா சந்தியை நோக்கி நகர்த்தப்பட்டனர். அங்கு கத்தசாமியின் கடையில் உணவு, தேநீர், தண்ணீர் என்பவற்ற மக்கள் பெற்றுக் கொண்டனர், சிலரிடம் கந்தசாமி பணம் கூட பெறவில்லை என்றும் புலிகள் பக்கத்தில் வரும் பொழுது அவர் பணத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்றும் பேசிக்கொண்டனர்.
அங்கிருந்து ஓரளவு மக்கள் லொறிகள் மூலம் சங்குப்பிட்டி நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். மீதி மக்கள் மனோகரா தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே முற்றத்தில் இரவு வரை தங்க வைக்கப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பத்தில் சில தமிழர்கள் உள்ளே வந்து தமது முஸ்லிம் நண்பர்களை சந்தித்து உணவு, பிஸ்கட், தண்ணீர் பொன்றவற்ற வழங்குவதற்கு புலிகள் தடை எதனையும் விதிக்கவில்லை, கட்டுப்பாடு இருந்தது உண்மைதான்.
பின்னர் அங்கிருந்த மக்களும் லொறிகள் மூலம் சங்குப்பிட்டி நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.
அது மழைக் காலம், மக்கள் பூநகரி, பெரியமடு, மடு, சின்னப் பண்டி விரிச்சான், பெரிய பண்டி விரிச்சான், பூந்தோட்டம் என 6 முதல் 8 நாட்கள் வரை பல்வேறு லொறிகளில் மாறி மாறியும் நடந்தும் வெள்ளத்திலும் சேற்றிலும் சீரழிந்து கடைசியில் இராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்கு வந்த சேர்ந்தனர்.
இவாறு வந்த மக்களை முதன் முதலில் நிவாரண் பொருட்களுடன் வந்து சந்தித்த கூட்டம் ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
இதுதான் சுருக்கமான நிகழ்வு.
வவுனியாவில் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்கு வந்து சேர, தூக்கமோ, ஓய்வோ இல்லாத, சேறும் சகதியும் நிறைந்த பாதைகள் வழியான, நடையும், லொறியும் என்று மாறி மாறி துன்பம் மிகு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த வெளியேற்ற நிகழ்வின் சோகத்தை சந்தித்த ஆயிரக்கணக்கானோர் இன்று நம் மத்தியில் உள்ளனர், இவர்கள் இதைப் பற்றி இப்பொழுது அதிகம். வரலாற்றைத் தொகுக்க நாடும் ஒருவர் இவர்களை சந்தித்து உண்மையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அடுத்து, அன்று இக்கொடுமையை முன்னின்று நடாத்தியவன் கரிகாலன் என்ற கண்ணாடி அணிந்த புலிப் பொறுப்பாளன் ஆவான். புலிகள் இயக்கம் கருணா தலைமையில் பிரிந்த பொழுது கருணாவின் கட்டுப்பட்டுப் பகுதியில், கிழக்கில் இருந்த இவன், கருணாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து தனது குழுவினருடன் சென்று பிரபாகரனின் கூட்டத்துடன் இணைந்தான். யுத்தம் முடிவைடந்த கடைசி சந்தர்ப்பத்தில், பொது மக்களுடன் மக்களாய் இருந்த இவன் இராணுவத்தால் கைது செய்யப் பட்டதாக Sunday Times செய்தி வெளியிட்டிருந்தது. இந்த கனாடிக் கரிகாலன் இப்பொழுது எங்கே என்று தெரியவில்லை.
இது குறித்து தேடித் பார்த்து அவனுக்கு எதிராக வழக்குத் தொடர யாராவது முன்வருவார்களா?
யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனமாவது முன்வருமா?
முஸ்லிம் வர்த்தகர்களின் வீடுகளுக்கு இரவில் வந்த புலிகள் அவர்களை தம்முடன் பலாத்காரமாக அழைத்துச் சென்றமையை அறிவேன் இவர்களில், சுல்தான் காதர் (கிளுறு சுல்தான் காதர்) என்பவர் புலிகளின் சித்திரவதை காரணமாக உயிரிழந்ததாக அறிந்தேன்.(அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, அவருக்கு சுவர்க்கத்தை வழங்குவானாக) ஏனையவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டது எனக்குத் தெரியும்.
வரலாறுகள் கூட்டல் கழித்தல் இன்றி உண்மையாக நடந்ததை நடந்தபடி எழுதப்பட வேண்டும். வராலாற்று உண்மைகள் கசப்பாக இருப்பினும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் உண்மையானவையாக பதியப்பட வேண்டும்..!!
Post a Comment