ஒஸ்மானியாவின் வரலாறு
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி வயதிலும் அனுபவத்திலும் சிறியதாக இருந்தாலும் அங்கு பணியாற்றிய ஆசிரியர்களும் அங்கு கல்விகற்ற மாணவர்களும் செய்த சாதனைகள் ஏராளம். 400 மாணவர்களைக் கொண்டிருந்த ஒஸ்மானியா, 3000 மாணவர்கள் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தின் பெரும் பாடசாலைகளுடன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான வெற்றிகளை அள்ளிக் குவித்தது. பிற்காலத்தில் கல்வித்துறையிலும் பல முன்னேற்றங்களை உருவாக்கிய ஒஸ்மானியா உருவாகிய விதம் சுவாரஸ்யமானது.
ஒஸ்மானியா உருவான விதத்தை தகவல்களாக திரட்டி அதனை 1988ஆம் ஆண்டு ஒஸ்மானியாவின் 25வது வருட வெள்ளிவிழாவை மலரான அல்ஹிக்மா என்ற நூலில் வெளியிட்ட ஆசிரியர் ஏ. ஸீ. நஜிமுத்தீன் அவர்களின் சேவையை பாராட்டுவதுடன் அவரின் அனுமதியுடன் மீண்டும் அவர் சேகரித்த தகவல்களை வாசகர்களுக்கு தருவதில் மகிழ்ச்சி. (ஆசிரியர் அவர்களின் அரும் முயற்சி 25 வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்டது என்பதால் தற்காலத் தகவல்கள் சில உள்ளிடுகை செய்யப்பட்டுள்ளது)
தோற்றமும் வளர்ச்சியும்
கல்வி ஊட்டும் கலாசாலை என்பது ஆயிரம் காலத்துப் பயிர், பன்னெடுங்காலம் நிலை பெற்று நின்று, காலவெள்ளத்திலே மிதந்து வருகின்ற எண்ணற்ற இளஞ்சந்ததியினரை வருக! வருக! ஏன்று இன்முகம் காட்டி வரவு செய்து, அறிவு என்னும் அமுதத்தின் சாரம் செறிந்தெடுத்து, நல்லொழுக்கம் என்கின்ற நறும்பால் சேர்த்துக் குழைத்து, அன்பும் அறமும் நிலைக்குமளவு இன்பம் செழிக்க ஊட்டி, ஊட்டி உவகை மழையில் நனைந்து, அவர்கள் சென்றுவருங்கால், நீவிர் நெறி வாழ்வு வாழ்ந்து சிறக்க! என்று ஆசி கூறி வாழ்த்தி நிற்கின்றது. குலசாகரத்திலேறி வந்து கலாசாலை அன்னையைத் தரிசனம் செய்து, 'தளராது செல்க!' என்று தட்டிக்கொடுத்து, வாழ்த்திச் செல்வதற்காக வருகை தருகின்ற இங்கிதமான நிகழ்ச்சிகள் பல. இத்தகைய நிகழ்ச்சிகளிலொன்றுதான் தற்போது எமது கல்லூரியின் விழாக் கோலத்திற்குக் காரணமாக இருக்கின்ற இனிய வெள்ளிவிழா!
அரை நூற்றாண்டை எட்டியுள்ள எமதருமைக் கலாகூடம் தற்போது வந்து சேர்ந்திருக்கின்ற நினைவு மேட்டிலிருந்து கொண்டு, பிறப்பும் வளர்ப்பும் தந்த இனிய வரலாற்றுப் பாடங்களின் நினைவுகளை மீட்டிசைத்துப் பாடுவதிலே அளவற்ற ஆனந்தம் பிறக்கின்றது.
மூலக்கல் நாட்டு விழா
1959 ம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள். யாழ். நகரத்து முஸ்லிம் வட்டாரத்தில் அமைந்த ராப்ஸ் வீதியில் ஜின்னா மைதானத்திற்கு முன்பாக நிலை பெற்றிருந்த சின்னஞ் சிறிய வீடுகளும், குடிசைகளும் எங்கோ மறைந்து விட்டன. காணி நிலங்களின் எல்லைகளைக் காட்டுகின்ற கதி கால்களைக்கூட அங்கு காணமுடியவில்லை. முட்களும், புதர்களும் நிறைந்திருந்த நிலத்துண்டுகள் அழகும், தெளிவும் பெற்றுக் காட்சி தருகின்றன. உயர்ந்தோங்கிய பலநூறு தென்னை மரங்களைக் கொண்ட சோலை ஒன்றின் சாயல் மட்டுமே அங்கு தெரிகின்றது. பெருந்தொகையான முஸ்லிம் பொதுமக்கள் கூடியிருக்கின்ற அந்தச் சபை நிகழ்ச்சிகளில் உணர்ச்சியும், உற்சாகமும் கரை புரண்டு ஓடுகின்றன.
கம்பீரமான துருக்கித் தொப்பிகள் அணிந்து கௌரவத்தோடு காட்சி தந்த அக்கால முஸ்லிம் பிரமுகர்கள் பலர் தத்தமுது பொறுப்புகளிலே கருத்தூன்றிச் செயற்படுகின்றார்கள். அதிக அலங்காரம் இல்லாத விழா மேடையெனினும் கல்விமான்களும், பெரியார்களும் அமர்ந்திருக்கின்றார்கள். அனைவோருக்கும் நடுநாயகமாக ஐரோப்பிய உடையணிந்துஇ மலாய தேசியத் தொப்பியுடன் வீற்றிருந்த பெரியார் - இலங்கையின் தேசிய வீரர்களுள் ஒருவர் அல்ஹாஜ் டாக்டர் ரீ.பீ. ஜாயா அவர்கள் நல்லதொரு தருணத்தில் எழுந்து வந்து அத்திவாரத்தின் ஆரம்ப வித்தாகிய மூலக் கல்லை நாட்டி வைக்கும் வேளையிலே 'அல்லாஹு அக்பர்' என்னும் ஆணித்தரமான கோஷம் அனைவரினதும் ஆனந்தக் கண்ணீருடனும் வெளிப்படுகின்றது. இதுவே அன்று நடந்தேறிய அருமையான நிகழ்ச்சியின் சுருக்கம்.
இந் நிகழ்ச்சி அரங்கத்துக்கு வரவேண்டும் - அதனுடைய பிரதி பலன்களை அனைத்து முஸ்லிம் பெருமக்களும் நுகர்ந்து களிக்க வேண்டும் என்கின்ற ஆவலின் கருப்பொருள், பல பெரியார்களின் நேரடி ஈடுபாட்டினாலும் - பின்னணி உரமூட்டுதலாலும் வளமாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. இதற்கான எண்ணம் அல்லது நாட்டம் சமூகத்தின் மத்தியில் வேரூன்றுவதற்குக் காரணமாக அமைந்திருந்த முன்னை சம்பவங்கள் சிலவற்றைப் புரட்டி ஆராய்தல் நற்பயன் அளிக்கும்.
முதற் பிரஸ்தாபம்
உலக ரீதியாக இஸ்லாத்தின் ஒளிக் கிரகணங்களால் மக்கள் ஆக்ர்ஷிக்கப்பட்டு இஸ்லாமிய நாகரீகம் தளைத்து வியாபிப்பதைப் பொறுக்க முடியாத மேற்கத்திய நாடுகள், மக்கள் மனதிலே தப்பபிப்பிராயங்களையும், ஐயப்பாடுகளையும் தோற்றுவிக்கத்தக்க முறையில் இஸ்லாத்தைப் பற்றிய மாசு கலந்த அர்த்தங்களை விதைப்பதற்குத் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை, உலகரீதியாக இம் முயற்சியை மடக்கி முறியடிக்க வேண்டுமென்ற உத்வேகத்தின் பலனாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்தே பல இஸ்லாமிய மகாநாடுகள் நடைபெற்று வந்தன. இப்படிப்பட்ட இலட்சியத்தின்பால் நத்வத்துல் உலமா என்கின்ற ஸ்தாபனம் லக்னோவில் ஒன்றுகூட்டிய மகா நாட்டுத் தீர்மானத்தின் பிரகாரம் மீலாதுன் நபி போன்ற விழாக்களை, இஸ்லாத்தின் உண்மைத் தத்துவங்களை விளக்கிப் பிரசாரம் செய்கின்ற சத்திய மேடைகளாகப் பயன்படுத்த வேண்டுமென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. (முஹம்மது பிறந்த தினத்தை கொண்டாடுவது (மீலாதுன் நபி விழா) பித்அத்தான விடயம் என்பதாக இன்றைய உலமாக்களில் அதிகமானவர்களின் கருத்தாகும். )
இது உலகளாவிய தீர்மானமெனினும் இந்த நோக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற கூட்டங்கள் யாழ்ப்பாணத்தில் - அதுவும் யாழ் கோட்டை முற்றவெளியில் 1930 ம் ஆண்டு தொடக்கம் 1952 ம் ஆண்டு வரை நடந்தேறியிருக்கின்றன என்பது பெருமைக்குரிய விடயமாகும். அல்ஹாஜ் வீ. எம். எம். எஸ். அப்துல் காதர் அவர்கள் நீண்டகாலமாக அக்கிராசனராக இருந்துவந்த 'ஆரளடiஅ டீசழவாநசாழழன ளுழஉநைவல' என்கின்ற கழகம்தான் இப்படியான கூட்டங்களை ஆண்டாண்டு தோறும் அரங்கேற்றியிருக்கின்றது. 1931 ம் வருடம் யாழ்ப்பாணம் கோட்டை மைதானத்திலே நடந்தேறிய மீலாத் விழாவில் சொற்பெருக்காற்றுவதற்காக, கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அரபு மொழி விரிவுரையாளராகக் கடமை புரிந்த மௌலவி ரவூப் பாச்சா அவர்கள் வருகை தந்திருந்தார்கள். அவ்வாண்டு பாலஸ்தீனத்திலே அமீனுல் ஹுஸைன் என்பாருடைய தலைமையில் நிகழ்ந்தேறிய உலக முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் கலந்துரையாற்றிவிட்டு திரும்பும் வழியிலேதான் மௌலவி ரவூப் பாச்சா யாழ் நகருக்கு வருகை தந்திருந்தார்.
திறமையும், புலமையும் மிக்க இஸ்லாமியக் குழந்தைகள் உருவாக்கப்படும் போதுதான் எதிர் காலத்து நெருக்கடிகளின் மத்தியில் உண்மை நிலை கண்டு உறுதி நிலை பேணுகின்ற முஸ்லிம் சமுதாயம் நிலைபெற முடியும். இதற்கான பணியில் ஸாஹிராக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் நாட்டின் நாலா பக்கங்களிலும் சேவையாற்ற வேண்டும் - அதனுடைய கிளை நிறுவனங்கள் உருவாகி நெறிகாட்ட வேண்டும் என்னும் உயரிய நோக்கம் கொண்ட ரவூப் பாச்சா, யாழ்ப்பாணத்திலும் இதுபோன்ற கிளை நிறுவனம் மிகவும் அவசியம் என்ற கருத்தினை அம் மீலாத் விழாக் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசினார். இங்குள்ள இஸ்லாமியப் பெரியார்களை இப்புனித பணியில் ஈடுபடும்படி தூண்டுதல் மொழி தந்தார். எல்லோருக்கும் இக்கருத்து நல்லதாகத்தான் தோன்றியது. எனினும் செயலுருப்படுத்துவது யார்? என்ற அயர்வான போக்கு அவர்களை ஆட்கொண்டிருந்தது.
மேலும் ஒரு தசாப்தம் கடந்தது. இரண்டாவது உலக யுத்தம் தந்த துர்ப்பாக்கியங்களில் ஒன்றாகக் கொழும்பு நகர் குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியது. முக்கள் பலர் கொழும்பைவிட்டு இடம் பெயர்ந்து நாட்டின் நாலா புறங்களுக்கும் செல்லத் தலைப்பட்டார்கள். இணையற்ற இஸ்லாமியக் கல்விக் கழகமாக விளங்கிய கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் மாணவர் தொகையில் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் தோன்றியது, இந்நிலையில் கொழும்பு செல்லும் யாழ்ப்பாணத்துத் தனவந்தர்களிடமும், படித்தவர்களிடமும் மௌலவி ரவூப் பாச்சா, தனது முன்னைய கருத்தைச் செயலுருப்படுத்தும்படி வலியுறுத்தி வந்தார்.
டாக்டர் ஜாயா வருகை
இக்கால கட்டங்களில் இலங்கையின் தேசிய வீரர் – சிறந்த கல்விமான் - கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் டாக்டர் ரீ.பீ. ஜாயா அவர்களின் தலைமையிலான குழுக்கள் இரு முறை யாழ் நகருக்கு வருகை தந்தன. யாழ்ப்பாணத்திலும் ஸாஹிராக் கிளையொன்று நிறுவப்பட வேண்டுமென்பதில் இக்குழுக்கள் அதிக அக்கறை செலுத்தின. 1938 ம் ஆண்டிலும் 1942 ம் ஆண்டிலும் இக்குழுக்களின் வருகை இடம் பெற்றிருந்தது. எதிர்காலத்தில் முஸ்லிம் குழந்தைகள் உயர்கல்வி பெற வேண்டியதன் அவசியத்தையும் அதனை நடைமுறைப்படுத்தும் பணியில் தனித்துவமான கல்வி நிறுவனத்தின் இன்றியமையாத் தன்மையையும் இக்குழுக்கள் வலியுறுத்தியதுடன் கால தாமதமற்ற செயற்பாட்டை ஆரம்பிக்கும் படியும் தூண்டுதல் மொழி தந்து சென்றன.
அந்தந்தக் காலத்தின் வேகத்திற்கும், உணர்ச்சிக்கும் ஏற்றபடி பல்வேறு பிரதானிகளும் குழுக்கள் அமைத்துக் கருத்துக்கள் வெளியிட்டார்கள், ஆலோசனைகள் வழங்கினார்கள். ஆக்கத்திட்டங்கள் தந்தார்கள். என்றாலும் பலதரப்பட்ட தனியாள் வேற்றுமைகளும், குழுசார்ந்த சிந்தனைகளும் கருப்பொருளின் தொடர்ந்தேர்ச்சியான முன்னேற்றத்திற்கு உரமூட்டுதலாக அமையவில்லை. நல்ல உள்ளம் படைத்த சில பெரியார்களையும் இப்படியான போக்கு மனஞ்சலிப்படையச் செய்தது.
ஆரோக்கியமான தீர்மானமும், ஈடுபடும்
யாழ்ப்பாண முஸ்லிம்களது கல்வி நுகர்ச்சியின் இன்னொரு படியாகப் பெண் பிள்ளைகளும் ஒன்றிரண்டாக அயலில் அமைந்திருந்த பாடசாலைகளுக்குச் செல்லத் தலைப்பட்டார்கள். இதன் விளைவாக ஏற்படத்தக்க சமய கலாசாரத் தாக்கங்களைப் பற்றிப் பலரும் சிந்திக்க முற்பட்டார்கள். இதன் விளைவுதான் 'முஸ்லிம் மகளிர் கல்லூரி ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்ற தவிர்க்க முடியாத தாகம்.
இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த சேர். ஜோன் கொத்தலாவல 1954 ம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது, யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பாக மஸ்ரஉத்தீன் பாடசாலையில் வரவேற்புபசாரம் ஒன்று நடாத்தப்பட்டது. அந்த வைபவத்தில் முஸ்லிம் மகளிருக்கான உயர் நிலைக் கல்லூரி கோரி மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் வைத்தே பிரதம மந்திரியால் இக் கோரிக்கை நாசூக்காக நிராகரிக்கப்பட்டது.
1957 ம் ஆண்டில் யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசலில் மார்க்க மறுமலர்ச்சிக்கான நோக்கில் 'தப்லீக் மகாநாடு ஒன்று நடாத்தப்படுதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் கலந்துரையாடற் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இக்கலந்துரையாடலின்போது, மார்க்க மறுமலர்ச்சியுடன் இசைந்து செல்கின்ற போக்கில் தனித்துவமான இஸ்லாமியக் கல்வி நிறுவனம் அமைவது அவசியம் என்னும் கருத்துத் தீவிரமாக வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் புதியதொரு திருப்பு முனை ஆரம்பமானது. எப்படியாவது மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற ஆரோக்கியமான தீர்மானம் வலுப்பெற்றது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான குழுவொன்றும் இக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.
இக்குழுவையும் அதன் செயற்பாட்டையும் முறைப்படியாக அங்கீகரிக்கும் வகையில் ஒருவாரத்தின் பின்னர் மற்றொரு கூட்டம் ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது. இக்குழுவில் முன்னாள் யாழ். மாநகர முதல்வர் குவாஸி ஏ. எம். சுல்தான் (வழக்கறிஞர்) தலைவராகவும், கிராம விதானையார் ஜனாப். எஸ். ஏ. றஸீன் செயலாளராகவும், வர்த்தகப் பிரமுகர் அல்ஹாஜ் வீ. எம். எம். எஸ். ஆப்துல் காதர் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்கள். செயற் குழுவில் ஜனாப் எம். அப்துல் மஜீத், ஜனாப் எம். மீரான் முஹிதீன், ஜனாப் எஸ். எம். முஹிதீன், ஜனாப் எம். எம். எஸ். லெப்பை, ஜனாப் எம். எஸ். மதார் ஆகியோர் அங்கம் வகித்தனர்.
மூலாதார முயற்சி
வெள்ளிக்கிழமைகள் தோறும் ஜும்ஆவின் பின்னர் மக்களிடமிருந்து பணம் திரட்டினார்கள். அக்காலத்திலே துருக்கித் தொப்பியும்இ சால்வையும் அணிந்து தான் பெரும்பான்மையானோர் ஜும்ஆவிற்குச் செல்வார்கள். தாம் அணிந்திருந்த சால்வைகளை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு வெளியே ஏந்திப் பிடித்து தொழுகை முடிந்து செல்பவர்கள் வழங்குகின்ற சில்லறை நாணயங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். நடைமுறை அனுகூலம் குறைவாக இருப்பினும் எத்துணை தியாகம் செறிந்த உட்சாக உணர்வு இச்செயல் முறையிலே கலந்திருந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படியான நடைமுறை மூலம் திரட்டப்படுகின்ற நிதிஇ இம் மாபெரும் பணியை நிறைவேற்றும் முயற்சிக்கு உடனடியாக உதவமாட்டாது என்பதையும்இ போதுமானதாக இருக்கமாட்டாது என்பதையும் காலக்கிரமத்திலே உணர்ந்து கொண்டார்கள். இதனால் பட்டியல் ஒன்று தயார்செய்து அதிலே பணத்தொகை குறிப்பிட்டு நிதி வசூல் செய்கின்ற புதிய பணியினை ஆரம்பித்தனர். முதன் முதலாக அல்ஹாஜ் வீ. எம். எம். எஸ். அப்துல் காதர் அவர்களின் பெருந்தன்மையால் எழுதப்பட்ட பத்தாயிரத்து நூற்றொரு ரூபா நிதியுடன் பட்டியல் நகர்ந்தது. இதனைத் தொடர்ந்து பல தனவந்தர்களும் பணத்தொகை எழுத முற்பட்டனர். (1957ம் ஆண்டைப் பொறுத்தவரையில் பத்தாயிரத்து நூற்றொரு ரூபா என்பது பத்து மடங்கையும் மிகைத்த அளவில் தற்போதைய பெறுமதியைக் கொண்டிருக்கும் என்பதையும்இ இது போன்று இன்னும் எத்தனையோ பதினாயிரம் ரூபாக்களை வேண்டிய பொழுதெல்லாம் நிதிக் கலசத்திலிட்டு நிரம்பச் செய்தவர் ஹாஜியார் என்பதையும் நன்றியோடு ஞாபகப்படுத்தல் பொருத்தமாகும்.)
வீ. எம். எம். எஸ். ஆப்துல் காதர் ஹாஜியார்
அப்துல் காதர் ஹாஜியார் தனவந்தராக இருந்தார். அவரிடம் தயாளமும், தாராள சிந்தையும் நிரம்பி வழிந்தன. மரியாதையும், பண்பும் அவரிடம் குடிகொண்டிருந்தன. பௌதீகத் தோற்றத்தில் மட்டுமன்றி மனோபாவத்தின் விரிவிலும் அவர் பெரிய மனிதராகவே விளங்கினார். 'நீரின் அளவே ஆகும் நீர் அல்லித் தண்டின் அளவு. அது போலக் கொடுத்தவரின் உள்ளத்தின் அளவே அவர்தம் கொடை' என்பார்கள். இதனை மெய்ப்பிப்பது போன்று ஹாஜியாரின் செயல்கள் அவரது உள்ளத்தைப் பிரதிபலித்தன. தனது சொந்த வாய்ப்பு வசதிகளுக்கு மேலாக அவர் சார்ந்த சமூகத்தில் சீர்மையும்இ சிறப்பும் மலர வேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். அவர் ஒரு வர்த்தகப் பிரமுகராக இருந்தார். எனினும் வளம் மிக்க கல்வி ஊட்டத்தால் கிடைக்கின்ற ஆரோக்கிய நிலையினையே என்றும் கருத்தில் கொண்டிருந்தார்.
ஹாஜியாருக்கு உறுதுணையாக நின்ற வழக்கறிஞர் சுல்தான்இ கிராம விதானையார் றஸீன் ஆகியோர் அக்காலத்தில் பலராலும் மதிக்கப்பட்ட பிரமுகர்களாகவும்இ தலைமை தாங்கும் இயல்பினராகவும் விளங்கினர்.
'மதீனா மஹாலில்' தற்காலிக முஸ்லிம் மகளிர் கல்லூரி
1957ம் ஆண்டு ஏற்பட்ட மறுமலர்ச்சியின் ஓர் அம்சம்தான் 'முஸ்லிம் மகளிர் கல்லூரி' ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி. கருவாக உள்ள முயற்சியினை உருநிலைப்படுத்துவதற்காகஇ மானிப்பாய் வீதி 136 ஆம் இலக்கத்தில் அமைந்த தனது வாசஸ்தலமாகிய 'மதீனா மஹாலின்' கதவுகளைத் திறந்து விட்டுஇ அதிலே மகளிர் கல்லூரிக்கான படிகத்தையும் பொறிக்கவைத்துப் பெருங்கொடை புரிந்தார் தியாக சீலர் அப்துல் காதர் ஹாஜியார்.
அக்காலத்தில் வடமாநிலத்தின் வித்தியாதிபதியாக விளங்கிய திரு. எஸ். யூ. சோம சேகரம் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக இக்கல்லூரியைத் தொடக்கி வைத்தார்கள். செல்வி ஜெஸீமா லெப்பை கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டார்.
உண்மையில் இந்த 'மதீனா மஹால்' அப்துல் காதர் ஹாஜியார் அவர்களின் பாரியார் திருமதி. ஸல்மா அப்துல் காதர் அவர்களுக்குச் சொந்தமானது. கணவரின் வழி நின்று அவர்தம் பணிக்கு உரமூட்டி உறுதி செய்வதற்காகத் தனது சொந்த வாசஸ்தலத்தையே மனமுவந்து வழங்கிய திருமதி. ஸல்மா அப்துல் காதர் அவர்கள்இ அங்கிருந்து இளஞ்சிறுமியர் இனிய கல்வி பெற்று உயர்வதைக் கண்டு உள்ளம் பூரிப்படைந்தார். இத்தகைய செயற்கரிய செய்கை மாதர் குலத்துக்கொரு முன்மாதிரியாக விளங்கியது.
அயராத உழைப்பு
கல்லூரிக் கட்டிடத்திற்கான நிதி சேகரப் பணி யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கொழும்பிலும் ஏனைய பல இடங்களிலும் களைப்புச் சலிப்பின்றி நெறியோடு நடைபெற்றது. அனைத்து இடங்களுக்கும் அப்துல் காதர் ஹாஜியாரின் மோட்டார் வாகனம் இரவு பகல் பாராது அவரது சொந்தச் செலவிலேயே சுழன்று வந்தது. இம் முயற்சியில் ஹாஜியாருக்குப் பக்க பலமாக நின்று தொடர்ந்தேர்ச்சியான சேவையில் உற்சாகத்துடன் ஈடுபட்ட பெருமக்கள் வரிசையில் எம். ஐ. எம். மீரா சாஹிப் ஹாஜியார் போன்ற சிலர் முன்னணியில் நின்று பாடுபட்டனர்.
நிதிப்பட்டியலில் பணத் தொகை குறிப்பிட்டுக் காட்டுவதில் சில நடைமுறைப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்ட முஹம்மதலி பாய் அவர்கள், பதினையாயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த காணித்துண்டொன்றை ஜின்னா மைதானத்திற்கு அணித்தாக விலை கொடுத்து வாங்கி அன்பளிப்புச் செய்தார்கள். (தற்போதைய ஒஸ்மானியா வளவில் புளிய மரத்திற்கும் எல்லைச் சுவருக்கும் இடைப்பட்ட காணி நிலத்துண்டு.)
ஜின்னா மைதானம்
இந் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னதாகவே ஜின்னா மைதானம் அமைக்கப்பட்டு விட்டது. யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராக இருந்த 'மெம்பர்' அல்ஹாஜ் எஸ். எம். அப்துல் காதர் அவர்களது முயற்சியின் நிமித்தம் பனந் தோப்பாகவும், முடிக்குரிய காணியாகவும் இருந்த நிலப்பகுதி பொறுப்பேற்கப்பட்டுத் துப்பரவு செய்யப்பட்டு 'ஜின்னா மைதானம்' என நாமம் சூட்டப்பட்டுப் பாவனைக்கு விடப்பட்டது. அப்போதைய நகர முதல்வர் திரு. சீ. பொன்னம்பலம் இம் மைதானத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து ஹாஜி வீ. எம். எம். அபூஸாலிஹ் அவர்களின் பெருமுயற்சியால் ஜின்னா மைதானம் காலத்துக்குக் காலம் செப்பனிடப்பட்டுப் பொலிவு செய்யப்பட்டது. ஹாஜி அபூஸாலிஹ் அவர்கள் அக்காலத்தில் மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், துணை முதல்வராகவும் விளங்கிப் பெரும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான பின்னணியைக் கொண்ட ஜின்னா மைதானத்திற்கு அணித்தாகத் திட்டமிட்ட மகளிர் கல்லூரிக்கான காணி நிலங்களை வாங்குவதில் இக்குழுவினர் கருத்தூன்றியதுடன் முஹம்மதலி பாய் அன்பளிப்புச் செய்த காணித் துண்டிலிருந்து தொடர்ந்து ராப்ஸ் வீதியை நோக்கிப் பரவலாகப் பல நிலங்களையும் விலை கொடுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இப்பகுதியில் ஜனாப் எஸ். எம். யூசுப் அவர்களின் தென்னந் தோட்டமும், சிறிய குடியிருப்புக் காணிகளும், வக்பு செய்யப்பட்ட காணித்துண்டுகளும் இருந்தன. இக் காணிகளில் பெரும்பாலானவை சேகரித்த நிதியிலிருந்து வாங்கப்பட்டன.
சிறுதுள்ளி பெருவெள்ளம்
மக்கள் மனமுவந்து வழங்கிய நிதியுடன் வேறு விதமான பண மூலங்களும் வந்து வாய்த்தன. அந்நாளிலே சங்கானையில் முஸ்லிம்கள் அதிகளவில் வியாபாரம் செய்தனர். சாஹுல் ஹமீட் என்பவருக்குச் சொந்தமான வியாபார நிலையம் சங்கானையில் பிரபல்யமானது. அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவரின் நண்பர் ஒரவரின் சதி முயற்சியால் அக்கட்டிடம் முஸ்லிமல்லாதவருக்கு விற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏனைய வியாபாரிகளும் அங்கிருந்து ஒதுங்கினர். சங்கானை முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காகப் பயன்படுத்திய கட்டிடம், அங்கிருந்து முஸ்லிம்கள் அகன்றதன் விளைவாகக் கவனிப்பாரற்றுப் போனபடியால் விற்பனை செய்யப்பட்டு இந் நிதியுடன் சேர்க்கப்பட்டது.
ஜனாப் எம். எம். ஷரீப் அவர்களிடம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பதின்மூவாயிரம் ரூபாவும் இந்நிதிக்கு வழங்கப்பட்டது. (இப்பதின் மூவாயிரம் ரூபாவும் உயர் கலைக்கூடம் அமைக்கும் நோக்கத்தைக் கருவாகக் கொண்டதுதான். 1950ம் ஆண்டு ராப்ஸ் வீதியின் வடக்கு எல்லை முடிவில் இருந்த நிலத் துண்டை அக்காலத்தில் எண்ணாயிரம் ரூபாவுக்கு வாங்கி அதில் ஓர் உயர்தர பாடசாலை அமைப்பதாகத் தீர்மானித்தார்கள். அக்காலத்தில் இலங்கையின் கல்வி மந்திரியாக இருந்த திரு. ஈ. ஏ. நுகவெல அவர்களை அழைத்து வரவேற்பளித்து அவரைக் கொண்டே அத்திவாரக் கல்லையும் நாட்டுவித்தார்கள். பல்வேறு காரணங்களின் நிமித்தம் அங்கு அப்பாடசாலையின் மூலக்கல் முளைக்கவுமில்லை, வளரவுமில்லை. இந் நிலத்துண்டு விற்பனை மூலம் கிடைத்ததுதான் பதின்மூவாயிரம் ரூபா.)
அந் நாளிலே கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனாப் ஏ. எஸ். அப்துல் காதர் என்பார் கொழும்பு வாழ் பாய்மார் சமூகத்திலே ஒரு சில நாட்களில் பதினேழாயிரத்து ஐநூறு ரூபா சேகரித்து வழங்கினார். அத்துடன் கொழும்பிலே உத்தியோகம் பார்த்த யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் பலரும் தமக்கிடையே நிதி வசூலித்து வழங்கியமையும் குறிப்பிடத் தக்க அம்சமாகும்.
இன்னும் நுணுக்கமாகக் குறிப்பிடுவதானால் பெருந்தன்மை வாய்ந்த கனவான்களின் வீட்டுத் தோட்டத்திலே காய்த்த பலாப்பழங்களும், வாழைக் குலைகளும், கால் நடைகளும், பீங்கான் கோப்பைச் சாமான்களும் கூட ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இந்நிதியோடு சேர்க்கப்பட்டது. வினோத உடைப்போட்டி நிகழ்ச்சி ஒன்றினை ஒழுங்கு செய்து வீதி வீதியாகப் பணம் சேர்த்த சந்தர்ப்பமும் உண்டு. இத்தனை அர்ப்பணங்களும் கல்விக்கூடக் கைங்கரியம் நிறைவேற வேண்டும் என்னும் விழுமிய நோக்கத்தின் வெளிப்பாடேயாகும்.
அப்போதைய யாழ்ப்பாணத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் கியூ. ஸீ. அரசினர் வாயிலாக ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா ஒதுக்கிக் கொடுத்தார். இது இரண்டு பிரிவாக இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டது. இவ்வாறான நிதிகளிலிருந்து வாங்கப்பட்ட காணி நிலத் தொகுதியிலே தென்னந் தோட்டத்தின் சாயல் செறிந்திருந்த அந்த நிலப்பரப்பிலே தான் 1959ம் வருடம் மே மாதம் மூன்றாம் நாள், கல்வி அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்த ஜனாப். முஹ்ஸின் அவர்களும் சமூகமளித்திருக்க டாக்டர் ரீ. பீ. ஜாயா அவர்கள் அத்திவாரக் கல் நாட்டி ஆரம்பம் செய்து வைத்தார்கள்.
இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஹாஜி வீ. எம். எம். அபூஸாலிஹ் அவர்களின் முயற்சியால் ராப்ஸ் வீதி என்று நாமம் பூண்டிருந்த நேரிய சாலை, மாநகராட்சி மன்றத்தினரால், முஸ்லிம் கல்லூரி வீதி என்னும் புதிய பெயரைப் பெற்றது.
அரசினரின் சட்டதிட்ட மாறுதல்களினால் காலத்துக்குக் காலம் இடையூறுகள் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சிய காலங்களிலெல்லாம் கம்பளை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், அப்போதைய பிரதம மந்திரி திரு. எஸ். டபிள்யு. ஆர். டீ. பண்டாரநாயக்காவின் நெருங்கிய நண்பரும், அப்போதைய முது பெரும் முஸ்லிம் தலைவருமான அல்ஹாஜ் டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. எதுக்கும் பயப்படாமல் கட்டுமானத்தைக் கட்டுங்கள், இன்ஷா அல்லாஹ் எல்லாம் சரிப்பட்டு வரும் என்று உற்சாக மொழி தந்து உறுதியூட்டினார் அந்தப் பெரியார்.
கட்டட வேலை
திட்டமிட்டபடி மரங்கள் யாவும் வீழ்த்தப்பட்டு அங்கு அத்திவார வரம்புகள் அமைக்கப்பட்டன. நூலா புறமும் அத்திவார வரம்புகளில் மட்டும் அறுபத்து நான்கு தென்னை மரங்கள் நின்றதாகச் சிலர் கூறுவர். யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் அமைந்த வைத்திலிங்கம் கம்பனியினருடன் செய்துகொண்ட ஒப்பந்தப் பிரகாரம் அந்நிறுவனத்தினர் கட்டிடத்தை அமைத்தனர்.
இடையூறுகளையும், தடங்களையும் விலக்கிக்கொண்டு வித்து முளைத்தெழுவது போன்று ஒருவாறு கட்டிடம் மேலெழத் தொடங்கியது. 1962ம் ஆண்டின் பிற்பகுதி, சாந்து பூசப்படாமலும், அடித்தளம் இடப்படாமலும், மேல் மாடி கட்டப்படாமலும் காட்சி தந்த கட்டிடத்திலே கம்பிகளும், கல் அடுக்குகளும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. நிலம் செப்பமற்று ஆங்காங்கே கற்குவியல்களும், பள்ளங்களும் நிறைந்திருந்தன. தென்னங்குற்றிகளும், பூவரசங் கொம்பர்களும் குறுக்கும் நெடுக்குமாகச் சாய்ந்திருந்தன.
கனிஷ்ட பாடசாலைகளிலிருந்து உயர்நிலைப் பாடசாலைகளுக்கு
ஏழாம், எட்டாம் வகுப்புகள் வரை கல்வி புகட்டும் பணியில் யாழ். மஸ்ரஉத்தீன் பாடசாலை (புதுப்பள்ளி), முஹம்மதியா பலவன் பாடசாலை (அல்லா பிச்சை மாமா பள்ளி), வண், மேற்கு முஸ்லிம் கலவன் பாடசாலை (மன்ப-உல்-உலூம் மத்ரஸா) என்பன 1962ம் ஆண்டுவரை நற்சேவை புரிந்தன. இப்படியான கனிஷ்ட பாடசாலைகளிலிருந்து வைத்தீஸ்வர வித்தியாசாலைக்கு பெரும்பான்மையாகவும் யாழ் மத்திய கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி என்பவற்றிற்கு ஓரளவிலும் மாணவர்கள் மேற்படிப்பு நோக்கி அனுமதி பெற்றுச் சென்றனர். (எனினும் கனிஷ்ட பாடசாலைகளிலிருந்து மேற்படிப்பைத் தொடர்வதற்குப் பதிலாக படிப்பைக் கைவிட்டு வேறு தொழில்களை நாடுபவர்களே பெரும் எண்ணிக்கையில் அடங்கினர்.)
திருப்புமுனை
1963ம் ஆண்டிலிருந்து முஸ்லிம் மகளிர் கல்லூரியைப் புதிய கட்டிடத்திலே ஆரம்பித்துவிட வேண்டுமென்ற உணர்வு மேலிட்டபோது இரு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியேற்பட்டது. ஒன்று அரை குறையாக நிறுவப்பட்டிருக்கும் கட்டிட அமைவு மகளிர் கல்லூரிக்குரிய அம்சங்களைக் கொண்டிருக்குமா? இரண்டு - இஸ்லாமியக் கலாசாரச் சூழலில் உயர் கல்வி பெறுவதற்கு ஆண்பிள்ளைகளுக்கு வாய்ப்பு வேண்டாமா?
இவ்விரண்டு வினாக்களுக்கும் விடையளிக்கும் விதத்தில் 1962ம் ஆண்டுப் பிற்பகுதியில் புதியதொரு மாற்றுத் திட்டத்தினை முன்வைத்தார்கள். அதாவது பூர்த்தி செய்யப்படாத புதிய கட்டிடத்தில் ஆண் பிள்ளைகளுக்கான ஸாஹிராக் கல்லூரியை ஆரம்பிப்பதென்றும், நாவலர் வீதியிலுள்ள முஹம்மதியா கலவன் பாடசாலையை அரசினர் அனுமதிப் பிரகாரம் நிறுத்திவிட்டு அங்கு மதீனா மஹாலில் தொழிற்பட்ட பெண் பிள்ளைகளுக்கான முஸ்லிம் மகளிர் கல்லூரியை இடமாற்றுவதென்றும் தீர்மானித்தார்கள். இது பலராலும் வரவேற்கப்பட்டு ஈற்றில் முடிவாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் ஸாஹிராக் கல்லூரி
ஆறாம் வகுப்பிற்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளை ஸாஹிராக் கல்லூhயில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் 1962ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோரப்பட்டன. வினியோகிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் ஸாஹிராக் கல்லூரி யாழ்ப்பாணம் என்னும் தலையங்கமே பொறிக்கப்பட்டிருந்தது.
இக் காலத்தில் மாண்புமிகு அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் இலங்கையின் கல்வி, ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பணிபுரிந்து பெருஞ் சேவை ஆற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (1960 முதல் திருமதி சிறிமாவோ பண்டார நாயக்காவின் அமைச்சரவையில் அல்ஹாஜ் மஹ்மூத் அவர்கள் மேற்படி பதவியைப் பொறுப்பேற்றார்கள்.)
கல்லூரியின் கட்டிட வேலையை ஆரம்பித்து ஆவன செய்யுமாறு முன்னர் உறுதியான ஆலோசனைகளும், உற்சாக மொழிகளும் வழங்கிய அல்ஹாஜ் மஹ்மூத் அவர்களுக்குக் கல்வி அமைச்சர் பதவி கிடைத்த பின்னர் கல்லூரி மீது இருந்த அக்கறை பல மடங்காகப் பெருகியது. இந் நிலையில் எப்படியாவது அமைச்சர் மஹ்மூத் அவர்களை யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்து அவர் மூலமாகவே கல்லூரியைத் திறந்துவைக்க வேண்டு மென்று தீர்மானித்தார்கள்.
மாபெரும் விழா
1963ம் ஆண்டு பிறந்தது. கட்டிடம் கல்லூரியாக மாறுவதற்கு ஆயத்தம் பூண்டது. யாழ்ப்பாணத்திற்கு அமைச்சர்கள் விஜயம் செய்வதைத் தவிர்த்துக்கொள்ளும் சூழ்நிலை அப்போது நிலவியது. என்றாலும் டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் யாழ்ப்பாணம் ஸாஹிராக் கல்லூரியை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு உத்தியோக பூர்வமாக விஜயம் மேற்கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்திலே முதன் முதலாக மக்கள் வங்கியின் கிளையொன்றைத் திறந்து வைப்பதற்காக வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த திரு. டீ. பீ. இலங்கரத்ன அவர்களும் அல்ஹாஜ் மஹ்மூத் அவர்களுடன் கூட வந்திருந்தார்கள்.
1963ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் நாள் ஸாஹிராக் கல்லூரி என்று நாமம் பூண்டிருந்த ஆண்கள் மஹாவித்தியாலயம் மிகவும் கோலாகலமாக இரு அமைச்சர்களையும் மனங்குளிர வரவேற்றது. அமைச்சர் மஹ்மூத் அவர்கள் கல்லூரியைத் திறந்து வைக்க கல்லூரியின் முகப்பு மண்டபத்திலே பொருத்தப்பட்டிருந்த வீ. எம். எம். எஸ். அப்துல் காதர் ஹாஜியாரின் பிரதிமைப் படத்தை வர்த்தக அமைச்சர் திரு. டீ.பீ. இலங்கரத்ன மன மகிழ்ச்சியுடன் திரை நீக்கஞ் செய்து வைத்தார்.
வித்தியாதிபதி, அரச அதிபர் உட்பட பல்வேறு அதிகாரிகளும், பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் திரண்டிருந்த மாபெரும் கூட்டம் பிற்பகல் ஏழு மணிக்கு ஆரம்பமானது. முன்னாள் மாநகர முதல்வர் குவாஸி எம். எம். சுல்தான் (வழக்கறிஞர்) கூட்டத்திற்கு தலைமை வகித்தார். அரை குறைக் கட்டிடமாயிருப்பினும் வண்ண அலங்காரங்களும், மின்விளக்குச் சோடனைகளும் குறைவிருக்கவில்லை. அமைச்சர்களுக்கு அணிவித்த நறுமண மலர் மாலைகள் மேசைமீது குவிக்கப்பட்டிருந்தன. ஆனந்தமான சுகந்தக் காற்று அங்கு வீசியது. அல்ஹாஜ் வீ. எம். எம். எஸ். அப்துல் காதர் அவர்கள் உரையாற்றுகையில், யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் சார்பாக டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் ஹோல் என்று இக் கல்லூரியின் மேல் மாடியில் அமையப்போகும் மண்டபத்திற்குப் பெயர் சூட்டுகின்றேன். என்று பிரகடனம் செய்த போது ஏகோபித்த கரகோஷத்தையும் மகிழ்ச்சி ஆரவாரத்தையும் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது பின்னர் மஹ்மூத் மண்டபம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. துரோகிகள் சிலரின் செயலினால் இம்மண்டபம் இன்று அழிவடைந்து காணப்படுகின்றது.
ஓஸ்மானியாவும், கதீஜாவும்
ஸாஹிராக் கல்லூரி என்று பெயரளவில் தீர்மானிக்கப்பட்டிருந்தும்இ ஒஸ்மானியாக் கல்லூரி' என்ற பெயரினை இடுவதற்கான தனது அவாவினை அமைச்சர் மஹ்மூத் அவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களது ஆமோதிப்பையும் பெற்றார். பல்வேறு பெரியார்களின் உரைகளைத் தொடர்ந்து அமைச்சரும் உவகை பொங்க உரை நிகழ்த்தினார். 'இந்தக் கல்லூரி எத்தனையோ இளஞ் சிறார்களுக்குக் கல்வி புகட்டப் போகின்றது. இந்தப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்குப் பெருஞ் சேவையாற்றப் போகின்றது. ஸாஹிராக் கல்லூரி என்பதை விட நல்லதொரு பெயரினை இப்போது இக்கல்லூரிக்கு இடப்போகின்றேன். இஸ்லாத்தின் மூன்றாவது கலீபா உதுமான் (றழி) அவர்களின் பெயரை நினைவுபடுத்துகின்ற சர்வகலாசாலை ஒன்று இந்தியாவில் இருக்கின்றது. அதுதான் ஒஸ்மானியா சர்வகலாசாலை. அதே போன்று இந்தக் கல்லூரிக்கும் 'ஒஸ்மானியாக் கொலீஜ்' என்று பெயர் சூட்டுகின்றேன். அத்தோடு றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய அருமைத் துணைவியார் கதீஜா நாயகி (றழி) அவர்களுடைய பெயரை நினைவுபடுத்துகின்ற நோக்கில் முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 'கதீஜா மஹாவித்தியாலயம் என்று பெயர் சூட்டுகின்றேன்.' இவ்வாறு டாக்டர் மஹ்மூத் அவர்கள் கூறியபோது மகிழ்ச்சி ஆரவாரம் வானைப் பிளந்தது. ஒஸ்மானியாவின் விருந்தினர் பதிவேட்டிலும்இ 'ஐ hயஎந pடநயளரசந in யெஅiபெ வாந ளஉhழழட ழுளஅயnலைய ஊழடடநபந' என்று குறிப்பிட்டுக் கையொப்பமிட்டிருக்கின்றார். இந் நிகழ்ச்சியுடன் ஸாஹிராக் கல்லூரி என்னும் பெயர் மறைந்துவிட்டது.
இக்காலத்தில் யாழ்ப்பாணத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய திரு. அல்பிரட் துரையப்பாவும் கல்லூரி மீது நல்லெண்ணம் வைத்து அதன் வளர்ச்சிக்கு ஓர் உந்து சக்தியாக விளங்கினார். திறப்பு விழா வைபவத்தன்று தனது தந்தை காலமாகிவிட்ட போதும்கூட விழா நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து சிறப்புறச் செய்தார்.
அவ்வைபவத்தை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கும் நிர்வாகப் பணிகளில் ஹாஜி அபூஸாலிஹ் அவர்களின் பங்கு முக்கியமானது. பல்வேறு நடைமுறைகளையும் கவனித்து வேண்டிய ஒழுங்குகளை அவர் நெறிப்படுத்தி வந்தர்ர்.
வித்தியாதிபதி
1957ம் ஆண்டுக் காலகட்டத்திலும் அதன் பின்னரும் வடமாநில வித்தியாதிபதியாகக் கடமை புரிந்த திரு. எஸ். யூ. சோமசேகரம் அவர்களை அனைவரும் அறிவர். அக்காலத்தில் உயர் பதவியிலும், சிற்றூழியத்திலும் கடமை புரிந்த அரச அலுவலர்களது மனோநிலைக்கும்இ நடத்தைகளுக்கும் புறநடையாக திரு. சோமசேகரம் அவர்கள் இக் கல்லூரியின் வளர்ச்சி மீது மனமொத்த ஆதரவை வழங்கினார்.
'பிரின்சிபல்' ஜிப்ரியும் பூர்வாங்க ஆசான்களும்
ஒஸ்மானியாக் கல்லூரி ஆரம்பமாகி விட்டது. கல்லூரியின் பூர்வாங்க அதிபராக ஜனாப். ஸீ. எம். ஏ. ஜிப்ரி டீ.யு.இ நு. வு. அவர்கள் நியமனம் பெற்றார்கள். கனிஷ்ட வித்தியாலயங்களில் 'தலைமை ஆசிரியர்' என்ற பதமே மாணவர்களுக்குப் பரிச்சயமாக இருந்தது. 'பிரின்சிபல்' என்ற புதிய பதமும் 'பிரின்சிபல் ஜிப்ரி' அவர்களின் மேற்கத்திய உடையிலான கம்பீரத் தோற்றமும் மாணவர்களுக்குப் புதுமையையும் பெருமையையும் தந்தன. ஒஸ்மானியா என்னும் உயர் கலைக் கூடத்தில் சேர்ந்திருக்கின்றோம் என்னும் மகிழ்ச்சிகரமான எண்ணமும்இ புதியதொரு கல்விச் சூழலிலே புகுந்திருக்கின்றோம் என்னும் பெருமித உணர்ச்சியும் மாணவர்களின் உள்ளத்திலே மேலிட்டிருந்தன.
முதன் முதலில் அதிபர் உட்பட ஏழு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். திரு. பொ. சிவஞானசுந்தரம், திரு. எஸ். ஸ்ரீ. தர்மநாதன், திரு. ஆசாரியஸ் பெர்னாந்து, ஜனாப் எம். யூ. ஏ. கையூம், ஜனாப் எம். ஐ. எம். ஷாபி, ஜனாப் எம். ஸீ. சலீம் ஆகிய நாமா விலாசங்களைக் கொண்டவர்களே அதிபர் தவிர்ந்த ஏனைய ஆறு ஆசிரியர்களுமாவர். முதல் நாளிலே சுமார் நூற்றைம்பது மாணவர்கள் வரை சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். ஆறு ஆகிய வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
சில மாதங்கள் சென்ற பின் கல்லூரிக் கீதமும் தயாராகிவிட்டது. கவித்துவப் புலமைமிக்க ஆசிரியர் திரு. ஆசாரியஸ் பெர்னாந்து அவர்கள் கல்லூரிக் கீதத்தை இதமாக இயற்றிக் கொடுத்தார்கள். இந்தியாவின் தேசிய கீத மெட்டிற்கு இசைவாக, 'வளர் கலை மாமதியோடிளந் தாரகை வானக மேலொளி மல்க!' என்று பொருந்துகின்ற அருமையான கீதத்தை மாணவர்கள் இசைத்தார்கள். இக்காலத்தில் திரு. பொ. சிவஞானசுந்தரம் உப அதிபராகக் கடமை புரிந்தார். தொடர்ந்து ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று. கண்டிப்பும்இ கனிவும் நிறைந்த அதிபர் ஜிப்ரி அவர்களுடைய தலைமையில் கலாகூடம் பதினொரு திங்கள் பெருமிதத்துடன் நடைபயின்றது. சிறப்பானதொரு எதிர்காலத்தை வேண்டி மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தது.
கொழும்பு சார்ந்த குடும்ப நிலை காரணமாகவும், ஏனைய பல தேவைகளின் நிமித்தமும் ஜனாப் ஜிப்ரி அவர்கள் பதினொரு மாதங்கள் சிறப்பான சேவையை நிறைவு செய்துவிட்டு மீண்டும் கொழும்புக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார்கள்.
'ஞானக் கலை புகட்டி – தற்சமூகச் சீர் பரப்பி
தேனைப்பழிக்கு மன்பில் செழுமையுற்றார் – ஆனமுதல்
அதிபர்க்கணி புனைந்தார் ஆர்வமெனும் பண்பீந்தார்
இதயம் கவர் ஜிப்ரி இவண்'
தேனைப்பழிக்கு மன்பில் செழுமையுற்றார் – ஆனமுதல்
அதிபர்க்கணி புனைந்தார் ஆர்வமெனும் பண்பீந்தார்
இதயம் கவர் ஜிப்ரி இவண்'
என்று பாடி வழியனுப்பிவைத்தது ஒஸ்மானியா. ஜனாப் ஜிப்ரி அவர்களுடைய பிரியாவிடையோடொட்டி அப்போது விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராகக் கடமை புரிந்த திரு. என். எஸ். முருகேசு அவர்களுக்கும் பிரியாவிடை இடம்பெற்றது. சிறிதுகாலம் சேவையாற்றிருப்பினும் திரு. முருகேசு அவர்கள் மாணவர்களை விளையாட்டு முயற்சியில் அதிக அளவில் ஈடுபடுத்தி நல்ல பல பெறுபேறுகளை ஈட்ட வாய்ப்பளித்தார். அவரது முயற்சியாலும்இ தூண்டுதலாலும் ஜின்னா மைதானம் மையவாடிப் பக்கமாகச் சிறிதளவு விஸ்தரிக்கப்பட்டது. இம் முயற்சிக்கு அப்போதைய சின்னப்பள்ளிவாசல் பரிபாலகர்களான வி.எம். முஹம்மது லெப்பை முஹதீன் தம்பிஇ வி.எம்.எஸ். முத்துராசாஇ எம்.எஸ். மதார் இமற்றும் எம். புகாரி ஆகியோர் பெரிதும் அனுசரணையாக விளங்கினர்.
ஜனாப் ஜிப்ரி அவர்கள் மாற்றலாகிச் சென்ற பின்னர் ஒன்றரை மாதங்கள் திரு. சிவஞானசுந்தரம் பதிலதிபராகப் பணி புரிந்தார்.
அதிபர் ஜனாப் எம். எம். யூஸுப்
01.02.1964 முதல் ஜனாப் எம். எம். யூஸுப் டீ. யு.இ நு. வு. அவர்கள் புதிய அதிபராக நியமனம் பெற்று வந்தார்கள். நிர்வாகப் பணியுடன் நல்லாசாண் புலமை செழிக்க நின்று, ஆங்கிலக் கடல் நீந்தி அருந்திரவியம் கொணர்ந்து அன்பொழுகப் புகட்டிய பெரிய மனிதர் அவர். வித்துவத்தின் விம்பம் பிரதிபலிக்க விரிவுரை தருகின்றபோது எந்தவொரு அதிகாரிதானும் வருகை தந்தாலும் கல்வியே கருந்தனம் என்று கற்பித்தற்பணி முடிந்த பின்பே காரியாலயம் செல்கின்ற கருத்தாளர் அவர்.
ஜனாப் யூஸுப் அவர்களுடைய வழிகாட்டலின் பிரகாரம் பச்சையும், வெள்ளையும் கலந்த கல்லூரிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கல்லூரியின் இலச்சினை (சின்னம்) ஜனாப் ஒ. எஸ். எம். ஏ. கபூர் ஆசிரியரைக் கொண்டு வரைவாக்கம் பெற்றது. கல்லூரியின் நல்வாக்கு (ஆழவவழ)-னுரவல னுபைnவைலஇ னுளைஉipடiநெ என்று இருக்குமாறு தீர்மானம் பெற்றது. கலாசாலைக் கீதத்தின் சில வரிகள் திரு. பெர்னாந்து ஆசிரியரைக் கொண்டே மெருகுற மாற்றியமைக்கப்பட்டது. எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு ஷாபி, அலி, இக்பால் இல்லங்களுடன் கஸ்ஸாலி, ஜின்னா என்னும் இல்லங்களும் அமையுமாறு முன்னேற்பாடாகவே வரைவு பெற்றது.
கல்லூரியின் முகப்பு மதில்
இக் காலத்தில் கல்லூரியின் எந்தவொரு மருங்கிலும் எல்லைச் சுவர்கள் இருக்கவில்லை. முகப்பு எல்லைச் சுவரை அமைத்துத் தருகின்ற பொறுப்பினை அந்நாளைய வர்த்தகரும், பொதுத்துறைக் கொடையாளருமான ஜனாப் யூ. எம். ஐத்துறூஸ் ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே தனது பொறுப்பிலும் செலவிலும் பல்வேறு பொதுப் பணிகளில் அவர் ஈடுபட்டார். அவற்றிலொன்றாகத் தனது சொந்தச் செலவிலேயே ஒஸ்மானியாவின் முகப்பு எல்லைச் சுவரையும் அழகுற அமைத்து 01.01.1964 ல் கல்லூரியிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். இம் முகப்பு மதில் முன்னாள் யாழ். மாநகர முதல்வர் காலம் சென்ற திரு. ரீ. எஸ். துரைராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது.
சின்னப்பள்ளிவாசல் ஒழுங்கைப் பக்கமாக கல்லூரியின் வடக்கு எல்லைச் சுவரின் ஒரு பகுதி ஜனாப் ஐத்துறூஸ் அன்பளித்த சுவரின் வடிவத்திலேயே அமைந்திருப்பதைக் காணலாம். காலம் சென்ற ஜனாப் எம். எம். ஷரீப் அவர்களின் தலைமையிற் தொழிற்பட்ட பொதுப்பணியாளர்கள் சிலரின் முயற்சியால் இச்சுவர் நிர்மாணிக்கப்பட்டது.
அதிபர் ஜனாப் அப்துல் குத்தூஸ்
ஜனாப் யூஸுப் அவர்களின் நற்சேவையைத் தொடர்ந்து அவர் யாழ். மத்திய கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றபின் 01.02.1967 முதல் ஜனாப் எம். எம். அப்துல் குத்தூஸ் டீ. யு.இ னுip-in-நுன. அவர்கள் அதிபர் பதவிக்கு வந்தார்கள். அன்பாகப் பேசி, ஆதரவோடு அரவணைத்துக் காரியமாற்றுகின்ற நல்லார் அவர். அனைத்திலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவராகப் பணிபுரிந்த பெருமையும் அன்னாருக்கு உண்டு. அதிபராசனத்திற்குப் பொலிவும், மரியாதையும் சேர்ந்த அவரிடம் அனைவரையும் இன்முகம் காட்டி வரவேற்கும் சால்பு நிறைந்திருந்தது.
1965ம் ஆண்டிலிருந்து 1970ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் கலாசாலைக் கட்டிடம் முந்திய அரைகுறை நிலையிலேயே தொடர்ந்து இருக்கவேண்டி ஏற்பட்டது. இந்நிலைக்குப் பல காரணங்கள் இருந்தன. அரசியல் அதிகார அரங்கம் மட்டுமன்றி கல்விப்பகுதி நிர்வாகத்துறையினருடன் பொறியியல் சார்ந்த அலுவலர்கள் யாவரும் இக் கட்டிடம் தொடர்பான வளர்ச்சியில் மறுதலையான போக்குடையவர்களாகச் செயலாற்றினர். ஒரு சந்தர்ப்பத்தில் மேல்மாடி அமையும் அளவிற்கு இக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதி உறுதிவாய்ந்ததல்ல என்றுகூட மறுதலையான சிபாரிசு செய்யப்பட்டது.
1970ம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் மீண்டும் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களைக் கல்வி அமைச்சராக்கியது. இச்சந்தர்ப்பம் ஒஸ்மானியாவைப் பொறுத்தவரையில் மீண்டும் ஒரு பொற்காலம் உதயமாவதைக் குறித்துக் காட்டியது. தனிப்பட்ட முறையில் ஒஸ்மானியா மீது அக்கறை கொண்டு அனைத்துக் கருமங்களுக்கும் அமைச்சர் மஹ்மூத் அவர்களே நேரடிக் கட்டளை பிறப்பித்தார்கள். உதாரணமாகக் குறிப்பிடுவதாயின் விஷேட பொறியியலாளர் குழுவொன்று கொழும்பிலிருந்து விமான மூலம் அனுப்பிவைக்கப்பட்டு இக்கட்டிடத்தின் நிலைமை பரிசோதிக்கப்பட்டது. இக்குழு, மேல்மாடி கட்டத் தகுந்த நிலையில் கீழ்ப்பகுதி போதிய உறுதிவாய்ந்ததாக இருப்பதாகச் சிபாரிசு செய்தது. அமைச்சர் மஹ்மூத் அவர்களின் உடனடிப் பணிப்புரையின் பிரகாரம் மஹ்மூத் மண்டபமும், ஏனைய குறைபாடுகளும் நிறைவு பெறத்தக்க முறையில் பொறியியல் மற்றும் நிதி சார்ந்த திட்டங்களும், செயற்பாடுகளும் துரித கதியில் இயங்கத் தொடங்கின. வி.எம்.எஸ். அப்துல் காதர் ஹாஜியார் ஒஸ்மானியாவின் உயிராகவிருக்க அதன் இரண்டாம் கட்ட கட்டிடப் பணியின் போஷகராகவும், சேவகராகவும், கலைஞராகவும் நின்றாசி செய்த பெரியார் அல்ஹாஜ் மஹ்மூத் அவர்களே. இக்கால கட்டத்தில் அதிபர் ஜனாப் குத்தூஸ் அவர்களின் சளைக்காத உழைப்பும், தொடரான ஈடுபாடும் காரியங்கள் யாவும் நிறைவேறுவதற்குப் பெரிதும் துணை நின்றன.
அல்ஹாஜ் மஹ்மூத் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய சோஷலிஸ முன்னணியின் யாழ். கிளையும் இதில் அக்கறை காட்டி நின்றது.
மஹ்மூத் மண்டபம்
மாடியில் அமைந்த மஹ்மூத் மண்டபமும் ஏனைய திருத்தங்களும் கட்டிடங்கள் திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டன. எனினும் திட்டமிட்ட வடிவமும் குவிந்த கூரையும் (னுழஅந) இக் கட்டிடத்தில் அமையவில்லை. தாஜ்மஹாலின் மேலே அமைந்திருக்கும் டோம் போன்ற வடிவம் கட்டிடத்தின் நான்கு முலைகளின் மேலும் அமையும். முன்பக்கத்தின் நடுவில் பெரிய ஒரு டோமும் அமையுமாறு கட்டிட வரைபு தயாரிக்ப்பட்டிருந்தது.
1972ம் ஆண்டு அமைச்சர்களுக்கு யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பும், பகிஷ்காரமும் மலிந்திருந்தது. இக்கால கட்டத்திலே அமைச்சர் மஹ்மூத் அவர்கள் துணிவுடன் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டதுடன் எல்லா நிகழ்ச்சிகளிலும் எதிர்பாராத வரவேற்புக்களையும் பெற்றுக்கொண்டார். இவ் விஜயத்தின்போது (1972ம் ஆண்டு மே மாதம் பன்னிரண்டாம் நாள்) அதிபர் ஜனாப் குத்தூஸ் அவர்களின் தலைமையில் அமைச்சர் மஹ்மூத் அவர்கள், ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஹாஜியார் நாமமிட்ட டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் ஹோலை மிகக் கோலாகலமாகத் திறந்துவைத்து மகிழ்ச்சி ததும்ப உரை நிகழ்த்தினார். யாழ் நகரத்து முஸ்லிம்களின் ஏகோபித்த வரவேற்பiயும் அமைச்சர் பெற்றுக்கொண்டார். (இந்நிகழ்ச்சி நடைபெறும்போது ஹாஜியாரும், றஸீன் விதானையாரும் உயிருடனிருக்கவில்லை.)
கல்லூரியின் விருந்தினர் பதிவேட்டில் அமைச்சர் மஹ்மூத் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
‘It is with great pleasure and full of expectations for the future that, I open the Osmaniya College Hall today. It was in 1963, when I was Minister of Education, I had the opportunity to visit this institution, declare it a Maha Vidyalaya and lay the foundation stone for this College Hall. It therefore gives me added pleasure to have had the good opportunity to visit this institution once again. It is my sincere wish and prayer that this institution should go on for one strength to strength and serve the Muslims of Jaffna in a fitting way. I am deeply grateful to the Principal, staff Students and well-wishers of Osmaniya for the excellent reception accorded to me to-day’Sgd. Badi-ud-din Mahmud – 12.05.72
இதே தினத்திலே அமைச்சரோடு வருகை தந்திருந்த கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரேமதாஸ உடகம இரட்டை அலகு விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கான அடிக்கல்லை நாட்டுவித்தார்.
அமைச்சரின் விஜயத்தோடொட்டியும், பின்னரும் நடவடிக்கைகள் துரிதமடைந்தன. ஜனாப் குத்தூஸ் அவர்களின் முயற்சியால் தொலைபேசி இணைப்பு நிரந்தரமாக்கப்பட்டது. எழுது வினைஞர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். ஒஸ்மானியாக் கல்லூரியின் சந்தி மூலையில் தனிக்குடியிருப்பாக அமைந்திருந்த ஒரேயொரு காணியும் 14.06.1972ல் அரசினரால் பொறுப்Nபுற்கப்பட்டது. ஜின்னா மைதானத்திற்குத் தெற்கிலும் மேற்கிலும் தென்னந் தோட்டக் காணிகள் சில சுவீகாரம் செய்யப்பட்டு முறையே அதிபர் மனைக்காகவும், மாணவர் விடுதிக்காகவும் ஒதுக்கப்பட்டன.
சுற்றுமதில் நிர்மாணம்
ஜனாப் குத்தூஸ் அவர்களது பதவிக் காலத்திலே பல்வேறு கட்டிட நிர்மாணங்கள் நடைபெற்றன. வடக்குப் பக்கத்தில் அமைந்த ஹாஜியார் புளொக் (ர்யதயைச டீடழஉம) அப்துல் காதர் ஹாஜியார் உயிருடனிருக்கும் போது கல்வித் திணைக்களத்தின் கட்டிடப் பகுதியால் நிறைவேற்றப்பட்டு நிதி ஒதுக்கி வருமுன்னர் தனது இருபத்தொன்பதாயிரம் ரூபா சொந்தப் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டது. (இப்பணம் திணைக்களத்திலிருந்து மீளப் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) வர்த்தகக் கல்வி அறையும் இக் காலத்திலே தான் நிர்மாணிக்கப்பட்டது.
குறிப்பாக ஜனாப் குத்தூஸ் அவர்களின் விடாமுயற்சியாலும், தளராத ஈடுபாட்டினாலும் கல்லூரியின் சுற்றுமதில்கள் தனிநபர்களின் நிதி உதவியினால் நிர்மாணிக்கப்பட்டன. ஜனாப் எம். முஹிதீன் பிச்சை அவர்களும், பாகிஸ்தானிய வர்த்தகப் பிரமுகர்களாகிய முனீர்ஸ் ஹாஜி, சுலைமான் தையூப், ஆதம்பாய் ஸ்தாபனத்தார்களும் இன்னும் பல நல்ல உள்ளம் படைத்த பெருமக்களும் மனமுவந்து வழங்கிய பொருளுதவியும், உழைப்புதவியும் இன்று சுற்றுமதிலாகப் பரிமளிக்கின்றன. ஜனாப் ஐத்துறூஸ் அவர்கள் அன்பளித்த முகப்பு மதிலும் இக்காலத்தில் ஜனாப் குத்தூஸ் அவர்களின் முயற்சியால் உயர்த்தியமைக்கப்பட்டது.
இக்காலத்திலே பொது விஞ்ஞான ஆய்வுகூடமும் சிறப்புறப் பூர்த்தியடைந்துவிட்டது. இரசாயனப் பொருட்களும், உபகரணங்களும் தாராளமாக நிரம்பியிருந்தன. இவ்வாறான முன்னேற்றங்களுக்கு ஜனாப் குத்தூஸ் அவர்கள் அரும்பாடுபட்டு உழைத்தமை மறக்க முடியாது. 1990ஆம் ஆண்டிலிருந்து விஞ்ஞான ஆய்வு கூடம் இயங்கவில்லை. கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. யாழ் கல்வித்திணைக்களத்துடன் தொடர்பு கொண்டால் மீண்டும் விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
ஜனாப் என். எம். ஏ. கபூர் அவர்கள்
ஜனாப் குத்தூஸ் அவர்கள் கல்வியில் டிப்ளோமா படிப்புக்காகச் சென்றிருந்த இடைக்காலத்தில் ஆசிரியர் ஜனாப் என். எம். ஏ. கபூர் அவர்கள் 11.10.1967 முதல் 18.08.1968 வரை பதிலதிபராகப் பதவி வகித்தார்கள். இக் காலகட்டத்தில் கல்லூரி மண்டப நிர்மாணம் ஆரம்பிக்கப்படவில்லை. கல்லும், கம்பியும் புறப்பட்ட நிலையிலே அரை குறையாகக் காணப்பட்ட கட்டிடத்தைப் பார்ப்போர் அதன் முகவுரை புரியாது தடுமாறினர். இக் குறைப்பாட்டைப் போக்கும் விதத்திலே கல்லூரி முகப்பில் ழுளுஆயுNஐலுயு ஊழுடுடுநுபுநுஇ துயுகுகுNயுஇ 1963 என்றிருக்கும் வாசகங்களைப் பதிப்பித்தவர் ஜனாப் கபூர் அவர்களே. அப்போதைய ஆசிரியப் பெருமக்கள் சிலர் சிலர் தமக்குள் சேகரித்து வழங்கிய சிறிய தொகைப் பணத்தின் மூலமே இவ்வாசகங்கள் கச்சிதமாகப் பதிக்கப்பட்டன. ஜனாப் கபூர் அவர்கள் விளையாட்டுத் துறை சார்ந்த தகைமைகளைக் கொண்டிருந்தமையால் மாணவர்களுக்கு இத்துறையில் வழிகாட்டி நின்றார்.
01.02.1964 முதல் 22.02.1966 வரை திரு. எஸ். ஸ்ரீ. தர்மநாதன் டீ. யு. அவர்கள் உப அதிபருக்கான கடமைகளைப் புரிந்தார், தொடர்ந்து 23.02.1966 முதல் 11.10.1967 வரை ஜனாப் பீ. எம். எல். ஏ. றஹீம் டீ. ளுஉ. னுip. ஐn நுன. உப அதிபருக்கான பொறுப்பினை ஏற்றுப் பணி புரிந்தார். அவர் ஆசிரியப் பணிபுரிந்த காலத்தில் அவரது கண்டிப்பும் கருத்துணர்வும் கணிதத் துறையிலே மாணவர்களுக்குப் பெரிதும் கைகொடுத்து உதவின.
அதிபர் ஜனாப் ஏ. எச். ஹாமீம்
ஜனாப் குத்தூஸ் அவர்களைத் தொடர்ந்து தற்போது அதிபராகக் கடமையாற்றும் ஜனாப் ஏ. எச். ஹாமீம் டீ. ளுஉ. னுip. ஐn. நுன. அவர்கள் 30.06.1974 முதல் 03.08.1979 வரை அதிபராகப் பணிபுரிந்து அளப்பருஞ் சேவைகள் நல்கினார். பல துறைகளிலும் மாணவர்களைச் சாதனையின்பால் சளைக்காது ஈடுபடுத்துவதில் ஜனாப் ஹாமீம் அவர்கள் காலத்தாலும், பொருளாலும், உழைப்பாலும் செலவுகள் பல செய்து அரும்பாடு பட்டிருக்கின்றார். மனிதனின் இயல்பூக்கத்தோடு சார்ந்த விளையாட்டு முயற்சிகளிலும், அறிவியல் நுகர்ச்சிகளிலும் மாணவர்களை இறுக்கத்தோடு ஈடுபடுத்தினர். 1975ம் ஆண்டு யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகளில் மிக இளமை வாய்ந்த ஒஸ்மானியாக் கல்லூரியின் மூன்றாவது பிரிவு உதைப்பந்தாட்டக் குழுவினர் யாழ் மாவட்டச் சம்பியன் விருதைப் பெற்றமையும், அக்குழு தோல்விகாணா வீரர்கள் (ரnடிநயவநச உhயஅpழைளெ) என்னும் சாதனையைப் புரிந்தமையும் ஜனாப் ஹாமீம் அவர்களின் உழைப்பினாலும், ஊக்கத்தினாலும் விளைந்த பலன்களே தாம்.
கலாசாலையின் கட்டிடம் கவினுறு தோற்றத்தில் வனப்பு மிளிரச் காட்சி தருவதற்கு ஜனாப் ஹாமீம் அவர்களின் பொலிவூட்டலே காரணம் எனலாம். கலாசாலை முற்றம் சீரிய முறையில் செப்பமிடப்பட்டு பசுமரங்களும், மலர்ச் செடிகளும், பயன்தரு பயிர்களும் நாட்டப்பட்டு இயற்கையான சுகந்தத்தையும், குளிர்ச்சியையும் தருகின்ற குதூகலச் சூழல் சமைக்கப்பட்டது. நீர் வினியோகம் முதல், நடைசாலைச் சீரமைப்புகள் வரை அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.
1976ம் ஆண்டு இரட்டை அலகு விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டிடம் அப்போது யாழ். பிரதேசக் கல்விப் பணிப்பாளராயிருந்த ஜனாப் ஏ. எம். மஜீத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதே ஆண்டில் கல்லூரி மைதானத்திற்கு மேற்காக மாணவர் விடுதிக்காகச் சுவீகரிக்கப்பட்ட காணித் துண்டின் எல்லைச் சுவர் பெற்றோர், ஆசிரியர் சங்கத்தின் அனுசரணையால் அமைக்கப்பட்டது. 1978ம் ஆண்டு எழுபத்தைந்து இருபத்தைந்து அடி நீள அகல மாடிக் கட்டிட நிர்மாண வேலை ஆரம்கிப்பட்டது. கல்விப் பணிப்பாளர் மஜீத் அவர்களே இதற்கான அடிக்கல்லை நாட்டுவித்தார். 1988இல் இக்கட்டிடம் பூர்த்தியடைந்து ஆரம்பப் பிரிவின் பாவனைக்கு விடப்பட்டிருந்தது. இக்கட்டிடத்தை அல்லது வர்த்தக கட்டிடத்தை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்குமிடமாக மாற்றுவதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட வேண்டியுள்ளது.
03.08.1979ல் ஜனாப் ஹாமீம் அவர்கள் இடமாற்றம் பெற்றதை அடுத்து ஜனாப் எம். கே. எம். ஹனீபா அவர்கள் பதிலதிபராகக் கடமை புரிந்து சரித்திரச் சங்கிலிக் கோர்வையின் இடையிணைப்பாக விளங்கினார். நிர்வாகத் தொடர்ச்சியில் ஒருவித சலனத் தன்மையும், நிச்சயமற்ற நிலையும் தோன்றிய அக்காலகட்டத்தில் ஜனாப் ஹனீபா அவர்கள் அதிபர் பொறுப்பில் கருமமாற்றியமை நல்லதொரு பணியாகவும், சேவையாகவும் கருதப்படுகின்றது.
அதிபர் எம். ஏ. ஆர். ஏ. றஹீம்
03.04.1980 முதல் ஜனாப் எம். ஏ. ஆர். ஏ. றஹீம் டீ. யு. அதிபர் பதவியினைப் பொறுப்பேற்றார். அடக்கமும்இ அமைதியும் நிறைந்த ஜனாப் றஹீம் கல்லூரியின் பாரம்பரியத்தையும்இ நடைமுறைகளையும் சிறப்பாகப் பேணி நிர்வாகம் புரிந்தார். ஆசிரியர்களின் சளைக்காத ஒத்துழைப்பும்இ இசைவான போக்கும் அவருக்குத் துணை நின்றன.
ஜனாப் றஹீம் அவர்கள் விடுமுறை பெற்றிருந்த காலத்தில் 07.08.1981 முதல் 27.12.1981 வரை ஜனாப் கே. எம். ஹம்துன் அவர்கள் பதிற் கடமை புரிந்துதவியமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஜனாப் ஹாமீம்
30.06.1982 இலிருந்து மீண்டும் ஜனாப் ஹாமீம் அவர்களுடைய தலைமையில் ஒஸ்மானியாஇ எதிர்காலக் கனவுகளை நனவாக்கும் பணியில் முன்னேறிச் செல்கின்றது. ஜனாப் ஹாமீம் அவர்களது பதவிக் காலத்தில் கல்லூரியின் பெருமை பலதுறைகளிலும் பிரகாசித்தது. 'கடமை தவறுவோர்இ கண்ணியம் பிறழ்வோர்இ கட்டுப்பாடு தளர்வோர் மாணாக்கரின் இலட்சணத்தைப் பழிப்பவரே' என்கின்ற தத்துவப் பிரகாரம் இயன்றவரை ஒழுக்க நிலையினை ஜனாப் ஹாமீம் அவர்கள் செம்மைப் படுத்தியிருக்கின்றார். இவ்வாறு மாணவர்கள் பெற்ற பயிற்சியின் பிரதிபலிப்புஇ மாணவரின் சமூகரீதியான ஒழுக்க நறுமலராய் மணம்பரப்பி சமூகத்திலே சிறந்ததொரு தாக்கத்தை ஏற்படுத்துமாயின் நல்விளைவினைப் பெற்றவராவோம். இத்தகைய ஒழுக்க நிலைப் பிரயோகம் கல்லூரியிலிருந்து சமூகத்தின் அனைத்துக் கிளைகளிலும் வேர்விட்டுப் பரவ வேண்டுமென்பதே கல்வியியற் தத்துவம் மட்டுமன்றிஇ கலாசாலை உருவாக்கத்திற்கு அரும்பாடுபட்டுழைத்த மேன்மக்களின் கனவுமாகும்.
வளாகத்தின் பவுத்திர நிலை
1986ம் ஆண்டு ஜனாப் ஹாமீம் அவர்களின் பெருமுயற்சியால் பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு அச்சங்கத்தினால் கல்லூரி மைதானத்தைச் சுற்றியுள்ள மிகுதி எல்லைச் சுவர்கள் யாவும் பூரணமாக்கப்பட்ட நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும். இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த பின்னர் தற்போதுதான் அதிபர் மனைக் காணிஇ மாணவர் விடுதிக்காணிஇ மைதானம் அடங்கலாக ஒஸ்மானியாவுக்குக் கட்டுக்கோப்பான சுவரெல்லைகள் நிறுவப்பட்ட நிலையில் நல்லதொரு பவுத்திரத் தன்மை தோன்றியுள்ளது.
உப அதிபர்கள்
ஏற்கனவே குறிப்பிடப்பட்ட உப அதிபர்களைத் தொடர்ந்து காலம் சென்ற திரு. எஸ். சிவானந்தன் அவர்கள் 18.02.1974 முதல் 30.12.1978 வரை உப அதிபராகக் கடமை புரிந்து பெருந்தொண்டாற்றினார். மாணவர்கள் அவரை 'புவியியற் கடல்' என்பார்கள். அந்த அளவிற்கு விடய ஞானம் பெற்றவராயிருந்ததுடன் அவற்றைச் சிறப்புற மாணவருக்கு ஒப்புவித்து நற்பெயரும் பெற்றார். பாடசாலை நிர்வாகத்திலும்இ கட்டுப்பாட்டிலும் அவருடைய உறுதியான நிலைப்பாடு பல்வேறு முன்னேற்றங்களுக்கும் தூண்டுகோலாக அமைந்திருந்தது.
இதன் பின்னர் உப அதிபராகக் கடமை புரிந்த ஜனாப் கே. எம். எஸ். ஹமீத் அவர்களின் பங்களிப்புஇ கலாசாலையின் பலநோக்குச் செயற்பாடுகளின் மேன்மைக்கு இன்றியமையாத்தன்மை பெற்றிருந்தது. விஷேடமாக விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கும்இ அவற்றைச் செவ்வனே செயற்படுத்துவதிலும் ஜனாப் ஹமீத் அயராது உழைத்தார்.
தற்போது ஜனாப் எம். எஸ். எம். முக்தார் டீ. நுன. அவர்கள் உப அதிபர் பதவியில் கடமையுணர்வுடன் கருமமாற்றி வருகின்றார். இவருடைய வருகை பாடசாலையில் அளவையியல் கல்வியின் அறிமுகத்துக்கு வித்திட்டுள்ளது. அளவையியல் பாடத்துறையில் முதலாவது பிரிவு 1989ஆம் ஆண்டு உயர்தரப் பரிட்சை எழுதியது. எல்லா மாணவர்களும் இப்பாடத்தில் சித்தியடைந்தது குறிப்பிடத்தக்கது.
நானாவித நடவடிக்கைகள்
1964ம் ஆண்டு முதல் மாணவர்கள் க. பொ. த (சாஃத) பரீட்சைக்குத் தோற்றினர். க. பொ. த. (சாஃத) வகுப்பில் அக்காலக் கல்வி முறையின் பிரகாரம் விஞ்ஞானப் பிரிவு வேறாகவும்இ கலைப்பிரிவு வேறாகவும் இருந்தன. முதன் முதலில் கலைப்பிரிவு மாணவர்களே பரீட்சைக்கு அமர்ந்தனர். அடுத்த ஆண்டு முதல் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றினர். க. பொ. த. (உஃத) வகுப்புகளுக்குத் தகைமை பெற்ற மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்குச் சென்று உயர் கல்வியை மேற்கொண்டனர். 1975ம் ஆண்டு முதல் க. பொ. த. (உஃத) வகுப்புகளும் இங்கு ஆரம்பிக்கப்பட்டன.
கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட 1963ம் ஆண்டிலிருந்தே இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளும் நடாத்தப்பட்டன. முதலாவது விளையாட்டுப் போட்டி கூடஇ வளர்ச்சியுற்ற பாடசாலைகளுக்கு நிகராக மிக ஆடம்பரமாகவும்இ அலங்காரமாகவும்இ அனைவராலும் பாராட்டத்தக்க முறையில் நிகழ்ந்தேறியது. தொடர்ந்து தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டிலும் விளையாட்டுப் போட்டிகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
1963ம் ஆண்டிலிருந்தே சாரணர் இயக்கமும் அறிமுகம் செய்யப்பட்டது. 1971ம் ஆண்டு ஏழு மாணவர்கள் 'இராணிச் சாரணர்' விருதைப் பெற்றனர்.
1988ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் ஓர் அங்கமாக அமைந்த பரிசளிப்பு விழாவும்இ இதன் பின்னர் ஆண்டாண்டு தோறும் தொடர்ந்து நடைபெறத் தீர்மானமாகியிருந்தது. வெள்ளி விழாவைத் தொடர்ந்து 'அல்ஹிக்மா' என நாமமிடப்பட்டுள்ள கல்லூரிச் சஞ்சிகையும் வருடாந்தம் வெளியிடப்படுவதற்கான திட்டமும் தீட்டப்பட்டது. 1990இல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதால் இவற்றை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. தற்போது பாடசாலை மீண்டும் இயங்குவதால் அங்கு கடமையாற்றும் ஆசிரியர் குழுவும் மாணவர்களும் பெற்றோர்களும் ஐம்பதாவது வருடத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலத்துக்குக் காலம் கல்விமான்களும்இ பெரியார்களும், அரசியல் தலைவர்களும்இ இராஜதந்திரிகளும் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார்கள். முது பெரும் முஸ்லிம் தலைவர் காலம் சென்ற சேர். ராஸிக் பரீத் இந்திய உயர்நீதிமன்ற நீதியரசர் – சமூக சேவையாளர் பஷீர் அஹமத் செய்யித் பேகம் செய்யித்இ முன்னாள் கல்வியமைச்சர் திரு. நிஸ்ஸங்க விஜரத்னஇ முன்னாள் சமூக சேவை அமைச்சர் திரு. ரீ. பீ. தென்னக்கூன்இ பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர்களாக இலங்கையிற் கடமையாற்றிய ஜனாப் ஹூமாயூன் கான் பன்னிஇ ஜனாப் அப்துல் றவூப் கான் போன்ற முக்கியஸ்தர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். இக்கல்லூரியின் உருவாக்கத்தில் கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களும் மறைமுகமான பங்களிப்புகளை வழங்கியுள்ளார்கள். சமூகத்திலுள்ள சிலர் கல்விமான்களை மதிக்காமல் செயற்பட்டதால் அவர் இவ்வாறான ஒரு முடிவுக்கு வந்திருந்க்கலாம். ஆனாலும் அப்துல் காதர் ஹாஜியாரை அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாடசாலைக் கட்டுமாணப் பணியைப் பற்றி விசாரித்துக் கொள்வார் என்று தெரியவருகின்றது.
முடிவுரை
இவ்வாறு சிறப்பான பின்னணியைக் கொண்டிருப்பினும் சமூகச் செறிவின் புள்ளி விபர நிலைமைகளைக் கருத்திற் கொண்டு நோக்கும்போது கல்லூரிக்கான உள்ளீடுகளும் வெளியீடுகளும் திருப்திகரமானவை அல்ல.
பாலூட்டிச் சீராட்டி வழிகாட்டி வளர்க்க ஏங்கி நிற்கும் தாய். தன்னை விட்டுத் தன் செல்வக் குழந்தைகள் பாலப் பருவத்திலேயே விரண்டோடி மறைகின்ற போது படுகின்ற வேதனைக்கு ஒப்பாக, ஒஸ்மானியா அன்னையும் தன்னையடைந்து கல்விச் சுனையிலிருந்து அள்ளி அருந்திக் களிக்காது வேற்று நோக்கில் இடை முறித்துச் செல்கின்ற குழந்தை மாணாக்கர்களைக் கண்டு மனம் வெதும்பி நிற்கின்றாள். கல்வியையும், கல்வி சார்ந்த அங்கங்களையும் பொருளாதாரத் தராசில் ஒப்பீடு செய்ய முயற்சிக்கின்ற குறைநோக்கம் கொண்ட சமூகச் சூழலின் பிரதிபலிப்பே இது.
பெருமைக்காகச் சுட்டிக்காட்டுகின்ற நினைவுச் சின்னமாகவோ, வீட்டுத் தொந்தரவிற்காகச் சிறார்களை அடைத்து வைக்கின்ற தங்கு மடமாகவோ, ஆசியரிப் பணியில் சேர்ந்தோருக்கு வேதனம் வழங்குகின்ற நிதி நிலையமாகவோ தன்னைக் கருதுவோரை ஒஸ்மானியா ஏளனம் செய்கின்றது. கல்வியை நுகர்ந்து – அதன் பெருமையை உணர்ந்து – அதன் வழியிற் சிறப்படைந்து நல்வாழ்வு வாழும் நற்பிரசைகளை ஒஸ்மானியா மென்மேலும் எதிர்பார்க்கின்றது.
இங்கிருந்து வளரட்டும் வரலாறு ..........................!!
இக் கட்டுரை தொடர்பான பல முக்கிய தகவல்களையும், புகைப்படங்களையும் வழங்கியுதவிய பின்வரும் பிரமுகர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
1. மர்ஹூம் எஸ். எம். முஹிதீன்
2. மர்ஹூம் எம். எம். மக்பூல்
3. மர்ஹும் எம். ஐ. எம். மீரா சாஹிப்
4. மர்ஹும் ஸீ. எம். ஏ. ஜிப்ரி
5. ஜனாப் எம். எம். ஏ. குத்தூஸ்
6. மர்ஹும் ஏ. எச். ஹாமீம்
2. மர்ஹூம் எம். எம். மக்பூல்
3. மர்ஹும் எம். ஐ. எம். மீரா சாஹிப்
4. மர்ஹும் ஸீ. எம். ஏ. ஜிப்ரி
5. ஜனாப் எம். எம். ஏ. குத்தூஸ்
6. மர்ஹும் ஏ. எச். ஹாமீம்
நன்றி - முஹம்மத் ஜான்ஸின்
எங்களுக்கே தெரியாத என் dady உடைய சேவைகளை எங்கள் கண் முன். நிறுத்திய யாழ் முஸ்லீம்க்கு மனம் நிறைந்த நன்றிகள் ... உங்களின் இந்த சிறப்பான சேவை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteஎன் குடும்பத்தைச் சேர்ந்த அப்பா (எம் எஸ். மதார் ), தந்தை 9ஓ.எஸ.எம்.ஏ.கபூர்) அவர்களும் ஒஸ்மானியாவின் இந்த வரலாற்றின் நிழலுள் இடம்பிடித்துள்ளார்கள் என்பதை இப்பதிப்பு மூலமாக அறிந்து மகிழ்ந்தேன்...நன்றி.........தொடரட்டும் யாழ் முஸ்லிமின் சேவைகள் !
ReplyDeleteI am proud that my family was involved a start of Osmania College, Jaffna. Supported to improve Jaffna Muslims life-hood, because “Jinnah Ground” detailed; Late. S. M. Yoosuf is my Grandfather Am son of Al- Hajj. M. Y. Abul Kalam (KALAM HARDWARES) & Late. Al- Hajj. V. M. M. Aboosali is My Grandmothers’ Younger Brother & My dad’s brother-in-low. My dad also, given support that he build a wall & Gate to control to entering Jinnah ground to Osmania college when Late. Hameem Master was principle, now the OBA is build new & my brother was played Football Captain 1987 (Mukthar Abul Kalam).
ReplyDeleteSome details not add, so please to be know this note, Thank you to know that my family Involvement…
www.youtube.com/melxak
Forward to new era Our Osmania College....
Al Hafeel, Jaffna, (Mt. Lavinia), Sri Lanka.