Header Ads



இந்தியாவின் நிலைப்பாடு - கருத்து கூற ஜெனீவாவில் இலங்கைத்தரப்பு மறுப்பு

ஜெனீவாவிலிருந்து ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்.

உதவி - தினக்குரல்

ஜெனீவா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்கா, இலங்கைக்கு  எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானம் குறித்த இந்தியாவின்  நிலைப்பாடு தொடர்பில் கருத்துக்கூற ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத் தரப்பினர் மறுத்துவிட்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜெனீவா வந்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமை தொடர்புகொண்டு இந்தியாவின் நிலைப்பாடு பற்றி விசாரித்தபோதே ஜெனீவா வந்துள்ள இலங்கை தரப்பினர் இந்தியாவின் தீர்மானம் குறித்து எத்தகைய கருத்துகளையும் வெளியிடுவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார். இது ஜெனீவா வந்துள்ள அரசாங்கத் தரப்பினரின்  திட்டவட்டமான தீர்மானம் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்தியாவின் தீர்மானம் தொடர்பில் ஏற்கனவே வெளியாகிய ஊடகச் செய்திகளே சில சிக்கல்களுக்கு  காரணமாக அமைந்துவிட்டதென சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம்  எனவேதான் இந்தியா தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு இலங்கை தரப்பினர் வரநேர்ந்ததாகவும் தெரிவித்தார்.

அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணையில்  வெற்றி பெறுவோமென்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டதுடன் இலங்கைக்கான ஆதரவு இன்னும் குறைந்துவிடவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை ஜெனீவா வந்துள்ள இலங்கை அரசாங்கத் தரப்பினர் சர்வதேசப் பிரதிநிதிகளை சந்திப்பதில் தொடர்ந்தும் நேற்று திங்கட்கிழமையும் ஈடுபட்டிருந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை ரஜீவ விஜேசிங்க தலைமையில் போருக்குப் பிந்திய இலங்கையின் முன்னேற்றம் தொடர்பிலான விவரணப் படமொன்று காண்பிக்கப்படவுள்ளது.இதில் பங்கேற்குமாறு சர்வதேச பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இலங்கைத் தரப்பு மற்றுமொரு விவரணப்படத்தையும் காண்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக சில ஆபிரிக்க நாடுகள் செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமரூன், நைஜீரியா ஆகிய நாடுகள் இலங்கையை எதிர்க்கும் போக்கு காணப்படுவதாக அறியவருகிறது. இருந்தபோதும் அநேக முஸ்லிம் நாடுகளும் இலத்தின் அமெரிக்கா நாடுகளும் இலங்கைக்கு ஆதரவான போக்கை கொண்டிருப்பதையும் அறியமுடிகிறது.இதனை ஜெனீவா வந்துள்ள இலங்கை அரசாங்கத் தரப்பினர் உறுதிப்படுத்தினர்.

1 comment:

  1. இவர்களுக்குத் தெரிந்த இங்கிதம் இலங்கையிலிருக்கும்
    சிலருக்குத் தெரியாமல் போய் விட்டதே.

    விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, குணதாச
    அமரசேகர போன்றோர் வாயை மூடிக்கொண்டிருந்தால்
    நன்றாக இருக்கும்.

    பதவிகள் மட்டும் மனிதனை தீர்மானிப்பதில்லை,
    அவனது நாவும் நடத்தைகளும் முக்கியமானவை.

    ReplyDelete

Powered by Blogger.