பிரான்சின் யூதப்பள்ளிகூடம் தாக்குதல் - சூத்திரதாரி சுற்றிவளைப்பு
பிரான்சின் டுலுஸ் நகரில் உள்ள யூதப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தங்கியிருந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். இந்த முற்றுகை, நாள் முழுவதும் நீடித்தது. இந்நிலையில் அந்த நபர், அல் - குவைதாவுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
பிரான்சின் தென்பகுதியில் உள்ள டுலுஸ் நகரில் உள்ள யூதப் பள்ளிக்கூடம் ஒன்றின் வாசலில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று குழந்தைகள், ஓர் ஆசிரியை என நான்கு பேர் பலியாயினர். ஏற்கனவே அந்நகரின் மற்ற இரு இடங்களில் இதே போல் நடந்த துப்பாக்கிச் சூட்டில், மூவர் பலியாகியிருந்தனர். மூன்று சம்பவங்களும் ஒரே ஆளால் நடத்தப்பட்டதாக போலீசார் சந்தேகித்தனர்.
இந்நிலையில், டுலுஸ் நகரின் இன்னொரு பகுதியில் அந்த மர்ம நபர் தங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, அவரது வீட்டை போலீசார் நேற்று காலையில் சுற்றி வளைத்தனர். அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்ட முகமது மெரா, 23, என்ற அந்த நபர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். அவருடன் அந்த வீட்டில் அவரது தாயார் உள்ளிட்ட குடும்பமும் வசித்து வருகிறது. அவர் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் சில காலம் இருந்துள்ளார்.
ஆப்கனில், 2007ல் அவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். ஆனால், 2008ல் அச்சிறையை தலிபான்கள் உடைத்த போது அங்கிருந்து தப்பியோடி விட்டார். நேற்று நடந்த முற்றுகையின் ஒரு கட்டத்தில் போலீசார், சரணடையும்படி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், தன்னை ஒரு முஜாகிதீன் (புனிதப் போர் வீரர்) என்றும், அல் - குவைதாவுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவித்தார்.
அவரது தாய் மற்றும் உடன் இருந்தவர்களை கைது செய்த போலீசார், தாயார் மூலம் அவரை சரணடைய வைக்கலாம் என நம்பினர். ஆனால், தான் சொல்வதை அவர் கேட்க மாட்டார் என மெராவின் தாயார் சொல்லிவிட்டார். இதனால், நேற்று போலீசாரின் முற்றுகை நாள் முழுவதும் நீடித்தது. இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு போலீசார் காயம் அடைந்தனர்.
Post a Comment