Header Ads



திருமண தினம் (அறபுச் சிறுகதை)

(அஷ்ஷெய்க் உஸ்தாத் மன்ஸூர் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிவைத்த ஆக்கமொன்றை இங்கு பதிவிடுகிறோம்)

 நஜீப் அல் கைலானி


 (தமிழில் அஷ்ஷெய்க் உஸ்தாத் மன்ஸூர்)
அந்நகரத்தின் பெருந்தெருவில் நடந்து கொண்டிருந்தான். வாகனங்களின் சத்தங்களை அவன் பொருட்படுத்தவில்லை. அவனைச் சூழ சிறுவர்கள் எழுப்பும் ஒலிகளும் அவன் காதில் விழவில்லை. இரு புறங்களிலும் இருந்த பல மாடிகள் கொண்ட கட்டிடங்களை பார்க்கவும் அவன் முற்படவில்லை. அவன் தோளில் தொங்கும பெட்டி அதில் உள்ள பல வர்ண போத்தல்கள்... அந்தப் பெட்டி பற்றி கூட அவன் மனம் அலட்டிக்கொள்ளவில்லை. அவன் மகன் சொன்ன ஒரு சிறிய வசனம் அதுதான் அவன் தலையில் விடாமல் ஒலிக்கிறது. உலர்ந்து போன அவன் உடலையும் உசுப்பி விடுகிறது.

'எனது வாப்பா இறந்துவிட்டார்'

 ஹின்தாவி நாநா இந்த வார்த்தையை மறக்கத்தான் முயல்கிறார். திருப்பித் திருப்பி அது ஒலிக்க ஒலிக்க அதனிடமிருந்து ஓடத்தான் முயல்கிறார்.... ஆனாலும் பிரயோசனமில்லை... தன்னை அறியாமலேயே அவர் உள்ளம் ஆழ்ந்த நோவுடன் சொல்கிறது.

என்னருமை மகனே நானிறக்கவில்லை... என்னதான் இருந்தாலும் நான் உயிரோடுதான் இருக்கிறேன்... எனது அந்தப் பலகைப் பெட்டியை சுமக்கிறேன்...

சப்பாத்துக்களை துப்பரவாக்கிக் கொடுக்கிறேன். அதன் மூலம் சில காசுகள் சம்பாதிக்கிறேன்... அப்படித்தான் உன்னைப் படிக்க வைத்துப் பட்டதாரியாக்கினேன்....

உன் தோழர்கள் சொல்வது போன்று உன்னை ஹஸ்ஸான் ஸேர் ஆக்கினேன்...

நான் சாகவில்லை மகனே! நான் என்னை ஆக்கினேன். உன் எதிர்காலத்தை ஆக்கினேன்.

செருப்புத் துடைப்பவன் மகன் என்ற நிலையிலிருந்து ஆங்கில உடை அணிந்த இங்கிதம் தெரிந்த ஹஸ்ஸான் சேர் ஆக்கினேன்.

மகனே நான் உயிரோடிருக்கிறேன். நான் இறந்தாலும் உன்னில் நான் வாழ்வேன். ஏனென்றால் நீ என் மகன் நான் உன் தந்தை.

ஒட்டி உலர்ந்து குழி விழுந்துபோன அவர் கன்னத்தில் ஒரு சூடான கண்ணீர்த்துளி விழுந்து உருண்டது.... அதனைத் துடைக்க அவர் முனையவில்லை... அவர் காதுகளில் ஒரு சோக கீதமிழைப்பது போல் அவருக்குத் தோன்றியது.....

இன்று மறக்க முடியா நாள்... இன்றுதான் அவரின் ஒரே மகனுக்கு திருமணம் நடக்கிறது. அவன் ஓர் அழகிய படித்த பெண்ணைத் திருமண முடிக்கிறான். அவள் யுனிவசிடியில் அவனோடு படித்தவள்... அவள் தந்தை ஒரு பெரிய மனிதர்... சமூகத்தில் இடம்பிடித்தவர்.

ஹஸ்ஸான் அப்பெண்ணை விரும்பினான். அவளும் விரும்பினாள். திருமணத்திற்குத் தடையாக இருந்த ஒரு காரணி அவனது தந்தை செருப்பு துடைப்பவர். மாமா அந்த கண்ணியமிக்க தரத்திற்கு இது பொருந்தாது. இப்பிரச்சினை ஹஸ்ஸானை தூங்கவிடாது செய்தது... கவலையையும் குழப்பத்தையும் கொடுத்தது... ஒரு நாள் இரவு தன்னையறியாமலேயே கத்தினான்...

ஏன்?! இறைவா இந்தத் தண்டனை? எனது தந்தை சப்பாத்துத் துடைப்பவராக அவற்றின் முன்னால் தலை குனிந்து நிற்கவே வேண்டும் தானா? இது ஏன் ஏன்?!

எந்த உபாயமும் புலப்படாதபோது. தீர்வு எதுவும் காணக் கஷ;டமாக இருந்த போது முதற் கட்டமாக தந்தையை விட்டுப் பிரிந்து தனி ஒரு வீட்டில் தங்கியிருப்பது என முடிவெடுத்தான்.... தன் பெண் வீட்டாருக்கு தந்தை நீண்ட காலத்திற்கு முன்பே இறந்துவிட்டார் எனச் சொல்லி விடுவது?! பின்னர் அவன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என ஏற்பதில் கஷ்டமேதுமில்லை...

 தாயின் காதில் தான் கண்ட அந்த ஒரே தீர்வை 'உசாவினான்' ஆச்சரியமும் வெறுப்பும் அவள் முகத்தில் தோன்றியது அவள் முகம் திடீரென வெளிறியது. எனினும் அவள் சமாளித்துக் கொண்டாள்...

என் அன்பு மகனே உன் கட்டளை! உன் சந்தோச வாழ்வு திருப்தி இவையே எமக்கு முக்கியம்.    வாப்பா அவருக்கு இந்த நடத்தை கஷ்டமாயிராதா?

வாப்பா நாளும் தெரிந்தவன் மகனே! அவர் தன்னிடமுள்ள மிக உயாந்த பொருளைத் தியாகம் செய்யவும் சித்தமாயிருப்பார். நீ வாழ சந்தோஷமாக இருக்க தன்னுயிரையம் அவர் கொடுப்பார்.

பிரச்சினை இவ்வாறு தீர்ந்தது. ஆழ்ந்த கசப்பும் கவலையும் வேதனையும் உள்ளத்தை வாட்டியபோதும் தம் முன்னால் நிகழ்பவற்றைப் பார்த்துக் கொண்டு தாயும் தந்தையும் மௌனம் காத்தனர். எனினும் தந்தையால் திருமண நாளன்று உள்ளத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை. தன் உள்ளத்திற்கினிய மகனை அந்நாளில் பார்க்க வேண்டுன்மென்றவர் அவாவுற்றார். தன் வாழ்வின் எத்தனை துரதிஷ;டம் பிடித்த வரண்ட இரவுகளில் அந்நாளை அவர் கனவு கண்டிருப்பார்.. சுவரோடு ஒட்டி ஊர்ந்து அவர் போனார். அந்த பலகைப் பெட்டி அவர் தோளில் தொங்கியது.

வீட்டு வாயிலில் பல வர்ணக் கொடிகள் ஆடுவதை மனிதர் கண்டார். அவர் உள்ளமும் ஆடியது. வாயிலில் அழகிய உடையணிந்து கவர்ச்சித்த தோற்றத்தில் பலர் நின்றனர். அவர்களது சப்பாத்துக்கள் அழகாக மின்னின. வருவோரை இனிய புன்னகையுடன் தலையை சற்று தாழ்த்தி இங்கிதமாக அவர்கள் வரவேற்று நின்றனர். வீட்டுக்கு வெளியே சில கார்கள் எதிர்பார்த்து நின்றன. ஹின்தாவி ஒதுங்கி நிற்க வெளியே ஓரிடத்தை தேடினார். பெரிய மனிதர்களுக்கு மத்தியில் இறந்தவர்களுக்கெங்கே இடம்?!

சற்று தூரத்தில் தெரு ஓரத்தில் ஒரு வரண்ட மரம் தனியே நின்றிருப்பது அவருக்குத் தென்பட்டது. அதன் பின்னால் போய்க் குந்திக் கொண்டார். நேரம் எவ்வளவு போனதென்று அவருக்குத் தெரியவில்லை. ஹஸ்ஸானும் அவன் மணப்பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி பாட்டுப் பின்பற்ற ஊர்ந்து வருவதை மட்டுமே அவர் கண்டார்.

அவர்கள் மீது மலர்கள் விழுகின்றன். கதவு திறக்க ஓர் அழகிய காரில் இருவரும் ஏறி அமர்கின்றனர். ஹின்தாவி தன்னை மறந்தார். தன்னையறியமாலேயே காரை நோக்கி ஓடினார். ஏதோ ஒரு மர்ம சக்தி அங்கே அவரை இழுத்தது போலிருந்தது. காரின் யன்னலூடே தன் தலை நரை மூடிய தலையை நுழைத்து கவலை சொட்டும் நடுங்கும் குரலில் மெதுவாக...

'அன்பு மகனே உனக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்' என்றார்.

ஹஸ்ஸானின் கண்களில் எரிச்சல் டிரைவரை நோக்கி

'டிரைவர் அவசரமாக அவசரமா எடு' என்றான்.

பல கைகள் எதிர்பாராது பாய்ந்த பிச்சைகாரனை வேகமாக புறப்பட்டு விட்ட அந்தக் காரை விட்டு அப்புறப்படுத்த நீண்டன. அப்போது அங்கு நின்றிருந்த ஒருவர்.

'ஏய் உனக்கு வெட்கமாயில்லை. அது பிச்சை கேட்கும் நேரமல்ல! ஆ இந்த பிடி எனக் கூறி சில சில்லறைகளை நீட்டினார்.

ஹின்தாவி அதனைத் திரும்பியும் பார்க்கவில்லை. அவர் முணுமுணுத்தார்.

'ஏன் மகன்

என்ன அழகு!.......'

'எனக்கு எவ்வளவு சந்தோஷமான நாளிது?'


பிரயோசனமென்று கருதாததை

நான் சொல்லவில்லை

பிரயோசமானதை நான்

சொன்னேனா?!

வாழ்ந்தால் உளச் சுதந்திரத்தோடு

வாழ்ந்திருப்பேன்.

நான் செய்தவைப் பற்றித் திருப்பதியுடன்

சந்தோஷமாக.....

இறந்தால் சுதந்திரமாக இறப்பேன்.

ஏனெனில்.

வாழ்வுக்கு ஒரு புதிய விலங்கை

நான் செய்து சேர்த்துவிடவில்லை.

(தத்துவக் கவி மஹ்மூத் அபுல் வபா)

No comments

Powered by Blogger.