Header Ads



போர்நிறுத்தம் நீடித்திருந்தால் தமிழீழ ஜனாதிபதி பிரபாகரன், ரணிலும் வீஸா பெற்றிருப்பார்

ரணில் கைச்சாத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுவரை நீடித்திருந்தால், தமிழீழத்தின் ஜனாதிபதி ஆசனத்தில் பிரபாகரன் அமர்ந்திருப்பார் எனக் கூறிய அமைச்சர் விமல் வீரவன்ஸ, பிரபாகரனைப் பார்ப்பதற்கு ரணில் வீஸா எடுத்துத்தான் சென்றிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தமிழீழ இராச்சியம் நிறுவப்பட்டிருந்தால் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளங்கள் எமக்குச் சொந்தமில்லாமல் போயிருக்கும். இன்று முழு நாடும் இரண்டாகப் பிளவுபட்டு, தேச எல்லைகளுக்காக செத்துமடிந்து, சைப்பிரஸைப் போல் நடுவில் மனித நடமாட்ட மற்ற பகுதி போன்ற நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

இதற்கு முன்னர் நாட்டை நிர்வகித்த தலைவர்கள் எவரும் செய்யாத வேலையை மஹிந்த ராஜபக்ஷ செய்து முடித்துள்ளார். அந்தத் தலைவர்களின் காலத்தில் இராணுவத்தினர் யுத்தம் செய்யவில்லை. யுத்தம் செய்யவேண்டுமா, இல்லையா என இலங்கையில் இருந்த வெளிநாட்டுத் தூதரகங்களே தீர்மானித்தன. இராணுவம் எதிரிகளைத் தாக்கிக்கொண்டு முன்னோக்கிச் செல்கையில், தூதரக அதிகாரி ஒருவர் யுத்தத்தை நிறுத்துமாறு கூற நாட்டின் தலைவர்களும் இராணுவத்தினரைத் திருப்பி அழைத்தனர்.  இவ்வாறுதான் யுத்தம் செய்தனர்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்தத்தை நிறுத்துமாறு கூறி பல்வேறு சவால்களும், வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்களும் இருந்தன. இந்த அழுத்தங்கள் அனைத்திற்கும் முகம்கொடுத்தே அவர் யுத்தத்தில் வெற்றிகண்டார். இதன்மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் தற்காலிகத் தலைவர் அல்லர் என்பது தெளிவாகின்றது.
   
சமூகத்திலுள்ள குற்றங்கள், குறைகள், மோசடிகள் என்பவற்றை ஊடகங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு சமூகத்திலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து வெளியிடுபவர்களை சமூகம் மதிக்கும்  என்றார் அவர்.

No comments

Powered by Blogger.