Header Ads



இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் - கொழும்பு - பிரிட்டன் உறவில் பாதிப்பு இல்லையாம்

அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகள், அமெரிக்கா, இந்திய ஆகியவற்றுடனான இலங்கையின் உறவுகளில் பாதிப்பு ஏற்படமாட்டாது என பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் கூறியுள்ளார். “இலங்கைக்கும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு தொடர்புகள் பாதிக்கப்படுவதற்குக் காரணம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

இனிவரும் காலங்களிலும் இலங்கையின் ஏற்றுமதிக்கான சந்தைகளாக இந்த நாடுகள் விளங்கும்’ என இலங்கை ஆடைகள் ஏற்றுமதி சந்தையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ரன்கின் கூறியிருக்கிறார்.

“ஐக்கிய இராச்சியத்திற்கான 2011 ஆம் ஆண்டு ஏற்றுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டொலராகவும் இறக்குமதி 245 மில்லியன் ஆகவும் இருந்தது. ஐக்கிய இராச்சியம் இலங்கையில் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது.
இலங்கையின் மொத்த ஏற்றுமதியான 4 பில்லியன் டொலரில் அரைப் பங்கு ஐரோப்பாவுக்கே செல்கின்றது. இலங்கையில் ஐக்கிய இராச்சியத்தை பிரதான தளமாகக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட கம்பனிகள் உள்ளன’ என அவர் கூறினார்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை நன்மையடைய முடியும். உலக போட்டியிடும் ஆற்றல் குறிகாட்டியில் இலங்கை கடந்த வருட நிலையிலிருந்து 10 புள்ளிகள் முன்னேறியுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

ஏற்றுமதியாளருக்கும் கொள்வனவு செய்வோருக்கும் நன்மை தரக்கூடிய ரூபாயின் பெறுமதி இறக்கத்தை அவர் இதன் போது வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.