Header Ads



வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை வாக்காளர் பட்டியல்களில் பதிய விசேட செயற்திட்டம்

தகவல் உதவி - உதயன்

வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசித்துவரும் முஸ்லிம் மக்களை வாக்காளர் பட்டியல்களில் பதிவதற்கான விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் செயலகத்தில் கட்சித் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, தேர்தல்கள் ஆணையாளர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது,புத்தளத்தைச் சேர்ந்த இரணடாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் எந்தவொரு இடத்திலும் பதிவு செய்யாமல் உள்ளனர். அதேநேரம், முல்லைத்தீவிலுள்ள இரண்டாயிரம் பேர் மாந்தை மற்றும் மன்னார் பகுதிகளில் தமது பதிவுகளை மேற்கொள்வதற்கு சென்றபோது உரிய ஆவணங்கள் இல்லையென அவர்கள் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.

இது குறித்து நாம் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தோம். இவர்களைப் பதிவு செய்வதற்கான விசேட செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்றும் நோன்புக்கு முன்னர் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையாளர் உறுதிமொழி வழங்கினார்.

அதேநேரம் இரண்டு பதிவுகளை மேற்கொண்ட வாக்காளர்களுக்கு ஏதாவது ஒரு இடத்திற்கு தேர்தல்கள் செயலகத்தினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்துக்கு உரிய பதில் வழங்காத பட்சத்தில் கடிதம் அனுப்பப்பட்ட பகுதியிலுள்ள பதிவை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். என்றார்.

No comments

Powered by Blogger.