வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பே செய்யப்பட்டனர் - பிரித்தானிய எம்.பி.களுக்கு விளக்கம்
இலங்கையின் வடக்கில் இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம்களது பிரச்சினைகள், மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த புத்தளம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் என்பன குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தின் கன்சர்வேர்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வார்ட்டன் தலைமையிலான புலம் பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று கேட்டறிந்தனர்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளருமான ஹூனைஸ் பாருக், புத்தளம் மாவட்ட ஐக்கியத் தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான 8 பேரடங்கிய குழுவினர் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் இன்று இடம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான இக்குழுவில் சர்வதேச கற்கைக்கான மாணவ அமைப்பின் பிரதிநிதி ஜயன் பெரேரா, குயின்ஸ்பேரி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவி நில்மினி ஹேரத், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கற்கையினை முடித்துக் கொண்ட டாக்டர் வசந்தி நாயகம், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது ஆங்கில பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட சிலாஜா சுந்தரலிங்கம், டாக்டர் அசங்க பெர்ணான்டோ, பிரித்தானிய நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆயிஷா ஆப்தீன், டாக்டர் வித்ய காந்தி ஆகியோர் இக்குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
கரிக்கட்டியில் அமைந்துள்ள முஸ்லிம் ஹேன்ஸ் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலாநிதி எஸ்.எச். ஹஸ்புள்ளா, இனச் சுத்திகரிப்பு அதன் பின்னரான நிலவரங்கள், மீள்குடியேற்றம், தற்போதைய பின்னடைவுகள் என்பன குறித்து விளக்கமளித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத் தடைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், முஸ்லிம் சமூகத்தின பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தி, தேவையான வசதிகளை செய்து தர புலம்பெயர் அமைப்புக்கள் உதவ வேண்டும் என்ற பலமான கோரிக்கையும் கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்டது.
Post a Comment