Header Ads



மூளையில் பதிவான சோகத்தை ரப்பர் வைத்து அழிக்கலாம் - ஆய்வில் தகவல்


மூளையில் பதிவாகி வாட்டி வதைக்கும் சோகங்களை ரப்பர் வைத்து அழிப்பது போல அழிக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பழங்கால நினைவுகளை அசைபோட்டு பார்ப்பது சுகம்தான். ஆனால், சிலருக்கு அது சுமையாக அமைந்து விடுகிறது. கணவன், மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் திடீர் மறைவு, காதல் ஏமாற்றம், தொழில் நஷ்டம், சொத்துகளை இழத்தல் போன்றவற்றை மறக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இது தீராத மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் கனடாவின் மெக்கில் பல்கலையின் நரம்பியல் நிபுணர் டெரன்ஸ் காடர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் தெரியவந்தது பற்றி அவர் கூறியதாவது,

தசை பாதிப்பு, விபத்து போன்றவற்றால் சிலர் கையை இழக்கின்றனர். ஆனால், கையை இழந்த பிறகுகூட சில வேளைகளில் அவர்கள் கை வலிப்பதாக உணர்கின்றனர். கை இருந்தபோது ஏற்பட்ட வலியின் தாக்கம் இது. பிளாஷ்பேக் தகவலை மூளை அசை போடுவதால்தான், இல்லாத கைகூட அவர்களுக்கு வலிக்கிறது. இது மட்டுமின்றி, கடந்த கால சம்பவங்கள் சிலருக்கு நிரந்தர சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதுவும் முந்தைய ரகத்தை சேர்ந்ததுதான்.
புதிதாக ஒரு வலி ஏற்படும்போதோ, சோக நினைவுகளில் மூழ்கும்போதோ மத்திய நரம்பு மண்டலத்தில் பிகேஎம் ஸீட்டா என்ற புரோட்டீன் என்சைம் அளவு அதிகரிக்கிறது.

இதனால் நியூரான்கள் இடையே தகவல்கள் சிறப்பாக பரிமாறப்படுகின்றன. எப்போதோ வலி, சோகம் ஏற்பட்டது பற்றிய தகவல்களை மூளை அலசுகிறது. புதிய வலி, சோகத்துடன் பழைய சோகமும் சேர்ந்துகொள்கிறது. நரம்பு மண்டலத்தில் இந்த என்சைம் அளவை குறைத்தால், அதாவது, என்சைமை ரப்பர் வைத்து அழிப்பது போல அழித்தால் பழைய சோகங்கள், வலிகள் தாக்காது. நீண்ட கால சோகம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இது நல்ல மருத்துவ முறையாக பயன்படும். இவ்வாறு காடர் கூறினார்.

No comments

Powered by Blogger.