முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றுமில்லாமல் போகும், இரண்டுங் கெட்டான் நிலை!
- மப்றூக் -
சில கேள்விகளுக்கு இரண்டு வகையான பதில்களே இருக்கும். 'ஆம்', அல்லது 'இல்லை'! பதில் இல்லாத கேள்விகளும் உள்ளன என்பார்கள். சரியாகக் சொன்னால் குறித்த கேள்விகளுக்கான பதில்களை நாம் அடையவில்லை என்பதே உண்மையாகும். இன்னும் சில கேள்விகளுக்கு கால காலமாக விடைகள் என நாம் நம்பிக் கொண்டிருப்பவை – பதில்களே அல்ல! புதிய விடைகள் நம்மை வந்தடையும் போது – ஆச்சரியங்களுக்குள் நாம் புதைந்து விடுகிறோம்!
அரசியலைப் போலவே அரசியல் அரங்கில் எழுகின்ற கேள்விகளும் சிலவேளைகளில் நம்மைக் குழப்பும் வகையானவை. சில கேள்விகளுக்கான பதில்கள் - இறுதியில் கேள்விகளை விடவும் குழப்பம் நிறைந்தவைகளாக மாறி விடுவதுண்டு!
அவ்வாறானதொரு கேள்விதான் இது; ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறதா, இல்லையா?
'இருக்கிறது' என்று நீங்கள் கூறினால், அது – அப்பாவித்தனமான பதிலாகவே அமையும்! 'இல்லை' என்று கூறினால், நீங்கள் நையாண்டி செய்கிறீர்கள் என்று விளங்கிக் கொள்ள முடியும்!!
எவ்வாறாயினும், மேற்படி கேள்விக்குப் பொருந்தும் வகையிலானதொரு பதிலை இவ்வாறு கூறலாம்!
கேள்வி: ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறதா, இல்லையா?
பதில்: இருக்கிறது ஆனால் இல்லை! இல்லை, ஆனால் இருக்கிறது!!
கறுப்பு வெள்ளைப் பார்வையில் இந்தப் பதிலானது - கோமாளித்தனமானதாகக் கூடத் தெரியலாம். ஆனால், இதுவே – மிகச் சரியான பதிலாகும் என்பதை இன்றைய அரசியலை கவனமாகப் புரிந்து கொண்டோர் ஏற்றுக் கொள்வார்கள்.
கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு விடயத்தின் மூலம் இதை உங்களுக்குப் புரிய வைக்க முடியும்.
அதாவது, கடந்த 28ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அம்பாறைக் கச்சேரியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அந்த மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என – ஏறத்தாள அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது, மேற்படி பிரதிநிதிகள் தமது பிரதேசங்களில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்து, அதற்கான அங்கீகாரத்தினையும் பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில், அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசனலி சார்பிலும் 09 திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் பரிதாபம், அவை அனைத்தும் முகத்தில் அடித்தாற்போல் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நிராகரிக்கப்பட்டன!!
இதேவேளை, மு.காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் இந்தக் கூட்டத்துக்கு சமூகமளித்திருக்கவில்லை! விசாரித்துப் பார்த்ததில் - மேற்படி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் எவருக்கும் உத்தியோகபூர்வ அழைப்புகள் கிடைக்கவில்லை எனத் தெரியவந்தது!
இவை மு.கா.வுக்கு அவமானமாகும்! அதுவும், மு.காங்கிரஸின் அரசியல் பகையாளியான அமைச்சர் அதாவுல்லா இணைத் தலைவராகப் பதவி வகிக்கும் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இப்படியான நிகழ்வுகள் இடம்பெற்றமையானது - இரட்டிப்பு அவமானம்தான்!
மு.கா.வின் இந்த நிலைமைக்கு – அவர்கள்தான் காரணம் என்று அவர்களுக்குள்ளேயே பேசப்படுவதுதான் இதிலுள்ள சுவாரசியமாகும்!
ஆச்சரியமாக இருக்கிறதா? அப்படியென்றால், சில விடயங்களை உங்களுக்கு உடைத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது!
அதாவது, அரசோடு – மு.காங்கிரஸ் இணைந்து கொண்ட போதிலும் அந்தக் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் சிலர் - அரசாங்கத்தை விமர்சிப்பதையும், அந்த விமர்சனங்களை அறிக்கைகளாக விடுவதையும் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கின்றனர். இந்த விடயமானது ஆட்சியாளர்களுக்கு மு.கா. மீது கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான், ஹசனலியின் அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டமையாகும்!
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் முடிவடைந்ததன் பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட மு.கா.வின் மக்கள் பிரதிநிதிகள் சிலர் - மதிய உணவுக்காக ஒன்று கூடினார்கள். இதன்போது அவர்கள் தங்களுக்குள்; பேசிய சில கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை!
'ஆட்சியாளர்களால் மு.காங்கிரஸ் ஒதுக்கப்படுகிறது என்பதற்கு இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டம் மிக நல்லதொரு உதாரணமாகும். மு.கா.வுக்கு இந்த நிலை ஏற்படுவதற்கு கட்சியின் செயலாளர் ஹசனலிதான் காரணமாவார். கண்மண் தெரியாமல் அரசாங்கத்தை அவர் விமர்சித்து அறிக்கைகளை விடுவதால் ஏற்பட்ட வினைதான் - மு.கா.வுக்கு இன்று நேர்ந்த அவமானமாகும்' என்றார் அங்கு வந்த மு.கா.வின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர்! இந்தக் குற்றச்சாட்டினை அங்கிருந்த மு.கா.வின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் ஏற்றுக் கொண்டதோடு, இது குறித்து அவர்களும் தங்களுக்குள் காரசாரமாகப் பேசிக் கொண்டனர்!
இந்த இடத்தில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் இன்னுமொரு விடயத்தினையும் கூறினார். சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது, ஆட்சியாளர்களில் உயர்நிலைத் தலைவர் ஒருவர் - மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இவ்வாறு கூறினாராம். அதாவது, 'மு.காங்கிரஸ் என்பது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாகும். எனவே, அரசாங்கத்துடன் ஒத்திசைந்து, கூட்டுப் பொறுப்புடனும் மு.கா. நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு முடியாது விட்டால் நீங்கள் அரசிலிருந்து வெளியேறலாம். பிரச்சினையில்லை!'
ஒரு வகையில் பார்த்தால், அந்த உயர்நிலைத் தலைவரின் கூற்று நியாயமானதே. அரசில் அங்கம் வகித்துக் கொண்டு, மு.கா.வினர் ஆட்சியை விமர்சிப்பதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுதான்! அரசாங்கம் தொடர்பில் எதிரணியினர் தெரிவிக்கும் விமர்சனங்களை விடவும், ஆட்சியில் பங்கு வகிப்போர் கூறும் விமர்சனங்கள் பாரிய கவனத்தைப் பெற்று விடுகின்றன. அவை – அரசை கடுமையாகப் பாதிக்கவும் செய்யும்!
அப்படியென்றால் அரசாங்கத்தின் பிழைகளையும், தவறுகளையும் விமர்சிக்கக் கூடாதா? என்று நீங்கள் கேட்கலாம்!
நியாயமாகப் பார்த்தால், இந்த அரசாங்கம் குறித்து விமர்சிக்கவும், விவாதிக்கவும் ஆயிரம் விடயங்கள் உள்ளன. ஆனால், அந்த விமர்சனங்களை எங்கிருந்து கொண்டு மு.காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வெளியிடுகின்றார்கள் என்பதே இங்குள்ள கேள்வியாகும்!
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தோடு, மு.கா.வினர் இணையும் போது என்ன கூறினார்கள்? 'நீண்ட காலமாக மு.கா. எதிரணியில் இருந்து வந்ததால், அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எந்த நன்மையினையும் கட்சியால் செய்ய முடியாதுள்ளது. மேலும் ஆதரவாளர்களின் பிரதேசங்களும் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த அரசோடு ஒத்துப் போவதன் மூலமாக அபிவிருத்திகளைப் பெற்று, எமது மக்களுக்கு எதையாவது நன்மைகளைச் செய்யலாம். அதற்காகவே அரசுடன் இணைகின்றோம்' என்றனர்.
ஆனால், அரசாங்கத்தோடு இணைந்து கொண்ட பின்னரும் கூட, மு.காங்கிரஸால் அவர்களின் ஆதரவுப் பிரதேசங்களுக்கு அபிவிருத்திகளை வழங்க முடியாதுள்ளமைதான் இங்கு கவலைக்குரிய விடயமாகும்!
ஏற்கனவே, மு.காங்கிரஸ் மீது – ஆட்சியாளர்களுக்கு நம்பிக்கையில்லை. காரணம், மு.கா. குறித்து பல கசப்பான அனுபவங்கள் இந்த அரசுக்கு உள்ளன.
மஹிந்த ராஜபக்ஷவினுடைய கடந்த ஆட்சியில் இணைந்து கொண்ட மு.காங்கிரஸானது, அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து விட்டு, அரசிலிருந்து வெளியேறியது. நல்ல காலமாக, அந்த வரவு செலவுத் திட்டத்தை ஜே.வி.பி. ஆதரித்ததால், ஜனாதிபதி மஹிந்த தப்பினார்!
பிறகு வந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக சரத்பொன்சேகவுடன் கைகோர்த்தது மு.காங்கிரஸ்!
இப்படி – நிறையவே பட்டியலிடலாம்.
எனவே, 'நாங்கள் முன்னர் போல துரோகம் செய்ய மாட்டோம். உங்களுடன் நாங்கள் உளப்பூர்வமாக இணைந்துள்ளோம். எங்களை நீங்கள் நம்பலாம்' என்பதை அரசுக்கு மு.காங்கிரஸ் நிரூபித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது! அதுவரை மு.கா.வை ஆட்சியாளர்கள் நம்பப் போவதில்லை! (அதற்குப் பிறகும் நம்புவார்களா என்பது வேறுகதை!)
இவ்வாறானதொரு நிலையில்தான், அரசை விமர்சிக்கும் வகையில் மு.கா. செயலாளர் போன்றோர் வெளியிடும் அறிக்கைகள் ஆட்சியாளர்களை கோபப்படுத்தியுள்ளன. அதன் விளைவுதான், மு.கா.வினர் புறமொதுக்கப்படுவதும், அவமானப்பட நேர்வதுமாகும்.
இவை இவ்வாறிருக்க, அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது – மு.காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக ஜனாதிபதியிடம் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தியத்தலாவை ராணுவக் கல்லூரியில் செயலமர்வொன்று இடம்பெற்றது. அதன்போது வருகை தந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்தான் மு.கா. நாடளுமன்ற உறுப்பினர்கள் தமது முறைப்பாட்டினைத் தெரிவித்துள்ளார்கள்.
இதனையடுத்து, மு.கா.வுடன் பேசுவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். ஆயினும், அந்தப் பேச்சுவார்த்தையின் போதும் என்ன நடக்கும் என்பதை இப்போதே நாம் ஊகித்துச் சொல்ல முடியும். மு.கா.வினர் அரசாங்கத்தோடு இருப்பதால் - அடக்கி வாசிக்கவும், அரசுக்கு விசுவாசத்தினை வெளிப்படுத்தவும் கோரப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!
ஒரே வார்த்தையில் சொன்னால், இந்த அரசாங்கத்தில் மு.காங்கிரஸ் இரண்டுங் கெட்டான் நிலையில்தான் இன்னுமிருக்கிறது. மு.கா. தலைவர்களில் சிலர் தண்ணிக்கும் - வேறு சிலர் தவிட்டுக்கும் இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், மு.கா. எனும் வண்டியானது, எந்தத் திசையிலும் உறுதியாகப் பயணிக்க முடியாமல் குழம்பிப் போய்க் கிடக்கிறது!
மு.கா. தலைவர்களிடையே காணப்படும் இந்த இரண்டுங் கெட்டான் நிலை குறித்து, சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அந்தக் கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலும் கேள்வியெழுப்பப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதாவது, அரசியல் மற்றும் கட்சி சார்ந்த அநேக விடயங்களில் மு.காங்கிரஸின் தலைவர்கள் ஒத்த கருத்தினை வெளிப்படுத்துவதில்லை. உதாரணமாக, ஏதாவதொரு விடயம் குறித்து கட்சியின் தலைவர் ஒரு கருத்தைக் கூறும்போது, செயலாளர் இன்னொரு கருத்தினையும், தவிசாளர் வேறொரு கருத்தினையும் தெரிவிக்கின்றனர். இது ஆரோக்கியமானதொரு விடயமல்ல என்று கட்சியின் உயர்பீட அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கான விளக்கத்தினை கட்சியின் தலைவர் ஹக்கீம் வழங்கினார். வழமைபோல் வார்த்தை ஜாலங்களால் - அவர் தனது விளக்கத்தினை நிறைவு செய்திருந்தார்.
ஆக, மு.கா.வினர் ஒத்த கருத்துடன் செயற்படவில்லை என்பது பொய்யில்லை. அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடமே இந்தக் குற்றச் சாட்டு உள்ளது. எனவே, முதலில் மு.கா.வின் தலைவர்கள் இந்த விடயத்தில் ஒத்துப்போக வேண்டும்!
அரசாங்கத்தில் இருப்பதென்றால் அடக்கி வாசிக்க வேண்டும். விமர்சிக்காமல் விடமாட்டோம் என்றால் - எதிரணிக்குச் செல்ல வேண்டும்!
இரண்டுங்கெட்டான் நிலையென்பது – கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்!!
Post a Comment