Header Ads



இலங்கைக்கு முக்கியத்துவமிக்க நாள்


ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைத் தடுப்பதற்கு இலங்கை மிகக்கடும் பிரயத்தனங்களை எடுத்துவரும் நிலையில் வியாழக்கிழமை வாக்கெடுப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி முதல் இலங்கைக் குழுவினர் ஜெனீவாவில் முகாமிட்டு அனைத்து உறுப்பு நாடுகளதும் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கைக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சிகளிலீடுபட்டு வந்தனர். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஒரு புறமும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான மஹிந்த சமரசிங்க மற்றொரு புறமுமாகக் கடும் பிரயத்தனங்களிலீடுபட்டு வருகின்றனர். எனினும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியாத நிலையே தொடர்கிறது.

இலங்கையும் இலங்கையுடனான நேச நாடுகளும் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கத் தவறியுள்ளதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது. வாக்கெடுப்பைத் தாமதப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கும் அமெரிக்கா இணக்கம் தெரிவிக்க மறுத்துவிட்டது. கடந்த இரண்டு தினங்களாக பல நாடுகளுடனும் இது விடயமாக கலந்துரையாடப்பட்ட போதிலும் அந்த முயற்சியில் முன்னேற்றத்தைக் காண முடியாது போயுள்ளது.

குறைந்த பட்சம் அமெரிக்காவின் தீர்மானத்தின் இறுக்கமான நிலையைக் குறைப்பதற்கான முயற்சிகளும் சாதகமாகக் காணப்படவில்லை. எனினும் அந்த முயற்சியில் இலங்கை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்காவை நெகிழ்வுத் தன்மையுடன் செயற்பட வைக்கும் முயற்சிகளில் இலங்கைத் தரப்பு தீவிர ஈடுபாடு காட்டிவருவதாகவும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்த நிலையில் நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தையிலீடுபட்டிருக்கிறார்.

இதன்போது இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாட்டை இறுதி நேரத்திலாவது மாற்றிக்கொள்ள வேண்டுமென பேராசிரியர் பீரிஸ் திருப்பித்திருப்பி வலியுறுத்தியுள்ளார். ஆனால், இந்தியா பிந்திய நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்வது இயலாத காரியமென கிருஷ்ணா தெரிவித்து விட்டதாக தெரிய வருகின்றது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளின் 47 நாடுகளது சில உறுப்பு நாடுகளின் வாக்குரிமை இந்த 19 ஆவது அமர்வுடன் முடிவடைகிறது. அந்த இடத்துக்கு புதிய உறுப்பு நாடுகள் உள்வாங்கப்படவுள்ளது. இவ்வாறு மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையிலிருந்து வெளியேறும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றேயாகும்.

இந்த நிலையில் அமெரிக்கா அதன் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கின்றது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எந்த வகையிலும் நிறைவேற்றுவதில் அமெரிக்கா உறுதியாகவே உள்ளது. இந்த விடயத்தில் சகல உறுப்பு நாடுகள் மீது அமெரிக்கா கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

47 உறுப்பு நாடுகளுக்கு இத்தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க தலா மூன்று நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெறும். வாக்கெடுப்பு முடிவடைந்ததும் அதற்குப் பதிலளிக்கும் சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்படும். இலங்கையின் மனித உரிமைகள் விவகார தூதுவர் அமைச்சர் மகிந்த சமரசிங்க பதிலளித்து உரையாற்றுவார்.

No comments

Powered by Blogger.