Header Ads



நேட்டோ படைகளின் கோரமுகம் - பசியாலும் தாகத்தாலும் கடலில் வபாத்தான முஸ்லிம்கள்


லிபியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின்போது ஆயிரக்கணக்கான அகதிகள் நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்லத்தொடங்கினர்.அவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்களை ஏற்றிச்சென்ற படகொன்று நேட்டோ கடற்படையினரின் அசிரத்தையால் உரிய தறுவாயில் மீட்கப்படாமல், 63 லிபியர்கள் உயிரிழந்துள்ளனர் என ஐரோப்பிய விசாரணை மன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (29.03.2012) ஐரோப்பிய விசாரணை மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லிபிய அகதிகளைக் கொண்ட மேற்படி படகுக்கு வெகு அருகிலுள்ள கடற்பரப்பில் நேட்டோ கடற்படையினரின் இரண்டு கப்பல்கள் சஞ்சரித்தவாறு இருந்த நிலையிலும், படகில் இருந்து தம்மை மீட்கக் கோரி எழுப்பப்பட்ட சமிக்ஞைகள் கவனத்தில் கொள்ளப்படாததால் மேற்படி உயிரிழப்பு நேர்ந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியப் போர் மற்றும் நேட்டோ படையினரின் பணிகள் குறித்து சுமார் ஒன்பது மாதகாலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த மேற்படி விசாரணைகளின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

"உள்நாட்டில் இடம்பெற்ற போரினால் உயிர் தப்பி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் நோக்கில் படகிலேறிப் புறப்பட்ட மேற்படி 63 லிபிய அகதிகளை மீட்கக் கூடிய பல்வேறுவிதமான வாய்ப்புகள் இருந்த நிலையிலும் அவர்கள் பரிதாபகரமாய் உயிரிழப்பதற்கு நேட்டோ மீட்புப் படையினரின் அசிரத்தையே காரணமாகும். மத்தியத் தரைக்கடல் பிராந்தியத்தில் சுமார் 15 நாட்கள் இடைவெளியில் வெறுமனே ஒன்பது லிபியர்கள் மட்டுமே நேட்டோ தரப்பினரால் மீட்கப்பட்டுள்ளனர்" என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையின் படி, லிபியாவில் இருந்து  கடல்வழியே புலம்பெயர்ந்து ஐரோப்பா செல்லும் வழியில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் உள்ளிட்டு ஆகக்குறைந்தது 1500 லிபிய அகதிகள் நேட்டோ படையினரால் மீட்கப்படாமல் பசியாலும் தாகத்தாலும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.