Header Ads



யாழ் முஸ்லிம் இணையம் போதையூட்டுகிறது...? (விமர்சனம்)

உங்கள் இணையத்தளத்தில் வரும் செய்திகளை வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். உங்கள் செய்திகளை மேய்ந்து விட்டு செல்லும் கறுப்பாடுகளிலும் நானும் ஒருவனே. யாழ்பாண முஸ்லிம்களிற்காக யாழ்ப்பாண விவகாரங்களை யாழ்ப்பாணத்தான் எழுதுவது சிறப்பானது. அந்த சிறப்பான பணியை செய்யும் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு ஒரு சின்ன குறிப்பு.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் உயற்சிக்கும், எழுச்சிக்கும் உரமாகவும், பக்கபலமாகவும் செயற்படும் உங்கள் இணையத்தளம், யாழப்பாண முஸ்லிம்கள் சம்மந்தமாக காத்திரமான பல பங்களிப்புக்களை செய்துள்ளது. களத்தில் சிந்திக்க மறந்த பலவற்றை தளத்தில் தெரியப்படுத்தியுள்ளீர்கள். களத்தில் பேச மறுத்த பல விடயங்களை தளத்தில் பேசியுள்ளீர்கள். புலம்பெயர் முஸ்லிம்களும், யாழ் முஸ்லிம்களும் இணையும் மையம் உங்கள் யாழ் முஸ்லிம் இணையத்தளம். பல முரண்பாடுகள் உங்கள் தளத்தின் ஊடாக சமரசமான சமாச்சாரங்களுமுண்டு.

அந்த வகையில் யாழ்ப்பாண உணர்வுகள் மங்காதவாறு யாழ் முஸ்லிம்களின் உள்ளங்களை பதப்படுத்தி வைக்கும் உங்கள் எழுத்து வண்ணம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கடந்த சில தினங்களாக உங்கள் தளம் முழுக்கவும் யாழ் மயம். கடந்த யாழ் முஸ்லிம் ஒன்று கூடலில் கிடைத்த திருப்தியினைவிட உங்கள் தளத்தில் சில நாட்களாக கொடிகட்டும் யாழ் பசுமை நினைவுகள் தொடர்பான திருப்தி அதிகம் என என் நண்பர் ஒருவர் அலாதியாக கூறினார். உண்மைதான். யாழ்ப்பாண பசுமைகள் இனிமையானவையே.

ஆனால் இந்த பசுமைகள் என்பது ஒரு வகை போதை. ஒரு ஏகாந்த கிரக்கத்தில் யாழ் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் தள்ளுகிறீர்கள் என்பது தான் சற்று நெருடலான விடயம். சோனகரிஸ்தான் கனவுகளில் வாழும் சோம்பேறி சமுதாயமாக நாம் வாழப்பழகி பல வருடங்களாயிற்று. பழைய சோனக தெருவை மீண்டும் பார்க்கலாம் ஏனும் ஏக்கம் என்பது ஒரு போதைவஸ்து பாவனையாளரின் ஏக்கங்கள் போன்றவை. நாம் அன்று வாழ்ந்த சோனக தெரு ஒரு கனவு. அந்த கனவை அசை போட வைப்பது தவறான செயல். நாமும் மயங்கி மற்றவர்களையும் மயக்கும் போதை வியாபார நிலையமல்ல யாழ் முஸ்லிம் இணையம். இனிமையான, பசுமையான சோனக தெருவை பற்றி நாம் கடந்த 22 வருடங்களாக நிறையவே கதைத்துள்ளோம்.

உலகம் மாறி விட்டது. நாடு, நகரம் எல்லாமே மாறிவிட்டது. தமிழர் போராட்ட வடிவம் உட்பட. யாழ்பாபணத்து பச்சை புல் நுணியில் நடைபயிலும் தம்பளாபூச்சி கூடத்தான் மாறி விட்டது. ஆனால் நாம் மட்டும் அதே பழைய புல்டோ கனவுகளில் சொக்கித்து போகிறோம். ஒஸ்மானியாவையும், அல்கிக்மாவையும் வைத்து புகைக்படக்கண்காட்சி நடாத்துவதால் எஞ்சப்போவது நாம் சோனவர், யாழ்ப்பாண சோனவர் எனும் எண்ணங்கள் மட்டுமே. அந்த எண்ணங்கள் கூட தமிழர் ஆட்டி காட்டும் அதிகப்படியான ஐந்து லட்ச ரூபாய் பணத்தில் காணியை தாரைவார்ப்பதில் கலைந்து போய் விடுகிறது.

எழுத முடியாதவர்களும், கனவுகான தெரியாதவர்களும், எதிர்கால சிந்தனைகள் பற்றிய அறிவில்லாதவர்களும் தான் வரலாற்றின் குப்பை தொட்டிகளை கிண்டிக்கொண்டிருப்பார்கள். சோனக வரலாறு எழுத. நாம் புதிய பாதையில் பயணிக்க வேண்டும். இஸ்லாமிய சோனக தெரு பற்றிய சிந்தனைகள் நமக்கு அவசியம். நமது கலாச்சாரம் சர்பத் கொடுப்பது என மார்தட்டுவதை விட்டுவிட்டு அடுத்த வீட்டுக்காரன் பசியில் இருக்கிறான என சிந்திப்பதே காலத்தின் தேவை. பள்ளிவாயல்களில் டைல்ஸ் பிடிக்கும் பணம் எத்தனையோ ஏழைகளின் கூரைகள். வரண்ட உள்ளங்களில் பசுமை எண்ணங்களை விதைப்பதில் என்ன பயன்?

யாழ் முஸ்லி்ம் இணையம் எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாழ்தல் தொடர்பான பிரச்சனைகளை அணுகி, அதற்கான விஞ்ஞானபூர்வமான, ஆக்கபூர்வமான திட்டங்களை பகிரும் ஒரு தளமாக தன்னை ஒழுங்குபடுத்தி கொள்ளல் வேண்டும். தனிமனித செயலணி எனும் பாதையை மாற்றி ஒரு கூட்டு குழுவின் செயற்பாடாக தன் எல்லைகளை அகட்டிகொள்ள வேண்டும். உலக ஒழுங்கியல் மாற்றத்திற்கு ஏற்றவாறும், அதிகரிக்கும் இஸ்லாமிய எழுச்சிகளிற்கு ஏற்றவாரும் யாழ்ப்பாண முஸ்லிம்களை தயார்படுத்தும் ஒரு தளமாக இயங்க வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போல யாழ் முஸ்லிம்கள் ஒரு புள்ளியில் இணைவார்கள் என்றால் அது யாழ் முஸ்லிம் இணையத்திலேயே.

காரணங்கள் நிகழ்கால ஒத்தடங்கள். காரியங்கள் வருங்கால வாஸ்தவங்கள். அந்த அடிப்படையில் யாழ் முஸ்லிம்கள் தொடர்பான காத்திரமான செயற்பாடுகளிற்கு முன்னிற்கும் ஒரு இணையத்தளமாக தன்னை மாற்றிக்கொள்ளல் அவசியம். பசுமை நினைவுகள் எனும் போர்வையில் கனவுகளை சுமப்பவர்களாக யாழ் முஸ்லிம்களை பழக்கப்படுத்துவதும், அழைத்துச் செல்வதும் விபரீதமான எதிர் விளைவுகளையே உருவாக்க வல்லன.

“முதல் தர மனிதர்கள் திட்டங்களை பற்றியே பேசுவர், இரண்டாந்தர மனிதர்கள் விடயங்களை பற்றியே பேசுவர்” இதில் யாழ் முஸ்லிம் இணையத்தளம் எந்த தரத்தில் இருக்கப் போகிறது என்பதை நாம் சில பொழுதுகளில் காணலாம். நான் எழுதுபவை உங்களை நெறிப்படுத்தவேயன்றி வேறில்லை என்பது நானும் நீங்களும் அறிந்த உண்மை என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கைகளை மெய்படவைப்பதும், பொய்படவைப்பதும் உங்கள் எழுத்துக்களிலேயே உள்ளது.

அன்புடன்
அபூ மஸ்லமா
பிரதம ஆசிரியர் ஹைபர் தளம்

10 comments:

  1. i dont like this artical

    ReplyDelete
  2. ஓர் இடைவெளிக்கு பின் அபூ மஸ்லமாவின் பெயரை யாழ் முஸ்லிம் இணையத்தளத்தில்
    காணும் முதல் சந்தர்ப்பம்.

    இதனை அபூ மஸ்லமா தான் எழுதினாரா என்று சந்தேகமாக உள்ளது.
    வழமையாக ஆக்கபூர்வமாக எழுதும் அபூ மஸ்லமா உலக பொது நடைமுறைக்கு
    முரணாக கருத்து முன்வைத்துள்ளார்.

    20 வருடங்களுக்கு முந்தய அதே சோனக தெருவை மீண்டும் உருவாக்க முயல்வது
    என்பது வேறு, நம் பழைய வாழ்வின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பது என்பது வேறு.

    அபூ மஸ்லமா இரண்டிற்குமான வித்தியாசங்களை புரியாத ஒருவராக இருக்க வாய்ப்பில்லை.

    வரலாறுகளும், பழைய நினைவுகளை மீட்டுவதும் ஒரு பொழுதுமே முன்னேற்றத்துக்கான தடைகளாக இருந்ததில்லை.
    அபூ மஸ்லமாவின் வாதம் சரியாக இருந்தால், வரலாற்றுப் புத்தகங்கள் தடை செய்யப்பட வேண்டும், வரலாறு பாடத்திட்டங்களில்
    இருந்து நீக்கப்பட வேண்டும், நூதனசாலைகள் இடித்துத் தள்ளப்பட வேண்டும்.

    மிக மோசமாக வாழ்ந்த ஜாஹிலியாக் கால குறைசிகளின் வரலாறுகள் இன்னுமும் பாதுகாக்கப் படுகின்றன. அதற்காக இஸ்லாம் அழிந்து போய்
    விடவில்லை. அந்த மண்ணில் மேலும் மேலும் வளர்ந்துள்ளது.

    நாம் மட்டும் நமது வரலாற்றை பேசக்கூடாது, பழைய நினைவுகளை மீட்டக் கூடாது, என்பது சரியான கருத்தல்ல.
    இந்த விடயத்தில் சகோதரரின் கருத்து ஏற்றுக் கொள்ளப்படத் தேவையில்லை.
    யாழ் முஸ்லிம் இணையத் தளம் பழைய நினைவுகளை மீட்டுவதனையும், யாழ் முஸ்லீம்களின் முஸ்லீம்களின் வரலாற்றை
    பதிவதனையும் தொடரலாம்.

    அதே நேரம் சகோதரர் கூறியுள்ளது போல இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட ஆரோக்கியமான புதியதோர் சொனகதேருவை உருவாக்குவதில்
    யாழ் முஸ்லிம் இணையத்தளம் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கும் என நம்புகின்றேன்.

    ReplyDelete
  3. Wow. Very good angle. Nice way to presented. Anyway who is Abu Maslama?

    ReplyDelete
  4. பிழையான கோணத்தில் அணுகப்பட்ட விடயம்.

    பழைய நினைவுகளை மீட்டுவது ஒன்றும் முன்னேற்றத்துக்கு தடை இல்லை.
    வரலாறுகளும் மறக்கப்படக் கூடாதவை.
    அதனால்தான் தொல்பொருள் திணைக்களம் என்ற ஒன்றை
    அரசாங்கங்கள் வைத்திருக்கின்றன.

    ReplyDelete
  5. எம்.சபீர்
    தில்லையடி
    புத்தளம்.

    யாழ் முஸ்லிம் குறித்து அபூமஸ்லமா என்பவர் எழுதியுள்ள ஆக்கம் முற்றிலும் பொய்யானது. வரலாறு என்பது சமூகத்திற்கு முக்கியமானது. அந்த வரலாறை மக்கள் முன் கொண்டுவரும் யாழ் முஸ்லிம் இணையத்தை குறைகூறுவதற்கான உரிமை அபூமஸ்லாவிற்கு இல்லை. ஊடக தர்மம், கருத்துச் சுதந்திரம் என்றடிப்படையில் இதுபோன்ற ஆக்கங்களை யாழ் முஸ்லிம் இணையம் அனுமதிக்கக்கூடாது.

    யாழ்ப்பாண முஸ்லிம்களின் தனித்துவமானதும், உரிமைக் குரலுமான யாழ் முஸ்லிம் இணையம் யாழ்ப்பாணாண முஸ்லிம்களை பொருத்தமட்டில் ஒரு வரலாற்று அம்சமாக கருதப்படவேண்டும். யாழ் முஸ்லிம் இணையத்திற்கு சகல யாழ் முஸ்லிம்களும் ஒத்துழைப்பு நல்குவது அவசியமானதும்கூட. சர்வதேச, தேசிய முஸ்லிம்களின் நலனுக்காகவும் குரல்கொடுக்கும் யாழ் முஸ்லிம் இணையத்தின் வளர்ச்சிக்கு உதவுவதும் நமது கடமையாகும்.

    அபூமஸ்லமா போன்று சமூகத்தை குழப்புவர்கள் பற்றிய தெளிவு யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அவசியமானது. தயவுசெய்து இதனை கருத்திற்கொள்ளவும். யாழ் முஸ்லிம்களின் பெயரை பயன்படுத்தி ஊடகம் நடாத்தி குழப்பம் ஏற்படுத்துபவர்கள் பற்றியும் நம்மிடையே விழிப்புணர்வு அவசியம்.

    ReplyDelete
  6. யாழ் முஸ்லிம் இணையத்தள ஆசிரியருக்கு..!

    அபூமஸ்லமா என்றழைக்கப்படும் ரூமி அப்துல் அஸீஸ் என்பவரின் இதுபோன்ற விமர்சனங்களை நீங்கள் ஏன் அனுமதிக்கிறீர்கள் என்பது புதிராகவுள்ளது.

    ReplyDelete
  7. அபூ மஸ்லமாவின் ஆக்கத்தை ஏன் அனுமதித்தீர்கள், அனுமதிக்கக்கூடாது என்றவாறு
    யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை நோக்கி விமர்சித்த சகோதரர்களே, உங்கள்
    பிற்குறிப்புகளே அனுமதிக்கப் பட்டதை பார்த்த பின்னர், அபூ மஸ்லமாவின் ஆக்கத்தை
    அனுமதித்ததில் என்ன குறை வந்துவிடப் போகின்றது.

    சலபிகள் முதல் ஷீயாக்கள் வரை பரந்த தொடர்பு உள்ள, சலபிகள் கருத்துக்கள் முதல் ஷீயாக்கள் கருத்துக்கள் வரை
    எழுதும் அபூ மஸ்லமாவிற்கு உங்கள் கருத்துக்களால் எந்தப் பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை.

    (ஷீயாக்கள் தொடர்பும், ஷீயாக்களின் கருத்தை எழுதுவதும் நல்ல விடயங்கள் இல்லவே இல்லை)

    யாழ் முஸ்லிம் இணையத் தளம் இதற்கு முன்னர் பிரசுரித்திருந்த அபூ மஸ்லமாவின் எல்லா கட்டுரைகளும்
    அல் குர்ஆன் மற்றும் சுன்னாஹ் அடிப்படையிலான தூய இஸ்லாத்தை, இஸ்லாமிய சமூகத்தை வலியுறுத்தியே
    அமைந்திருந்தன. அந்தவகையில் அவற்றை எழுதிய அபூ மஸ்லமாவையும், பிரசுரித்த யாழ் முஸ்லிம் இணையத்தளத்தையும்
    பாராட்டியே ஆக வேண்டும். இதற்காக யாராவது அபூ மஸ்லமாவை சமூகத்தை குழப்புபவர் என்று குறை சொன்னால், அவர்கள் உண்மையிலேயே குறை சொல்வது
    அல்லாஹ்வையும், அவனின் தூதரையுமே என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

    இஸ்லாம் என்பதனை யாழப்பாண சோனகர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதனை வைத்து ஒருபோதும் தீர்மானிக்க முயலக்கூடாது,
    மாறாக அல்லாஹ்வின் தூதர் எதனை போதித்து, எப்படி செயல்படுத்திக் காட்டிச் சென்றார்கள் என்பதனை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.

    முக்கிய குறிப்பு : அபூ மஸ்லமா மேலே உள்ள ஆக்கத்தில் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. பசுமையான பழைய நினைவுகளும், வரலாறும் எமக்கு தேவை.
    அதற்காக இஸ்லாத்துக்கு விரோதமான பழைய வழிகேடுகளை (Eg:சீதனம், செப்பு, பிறந்தநாள் கொண்டாட்டம்,சுன்னத்து வீட்டு கொண்டாட்டம்,கத்தமும் பொட்டிசோறும், மீலாத் விழா, ஒடுக்கத்துப் புதன், ஊசிப் பெருநாள், மவ்லூது நார்ஸா
    போன்றவை) ஒருபொழுதுமே மீண்டும் அரங்கேற்ற முயலக் கூடாது.
    நபி (ஸல்) அவர்கள் தமது தந்தையும், பெரிய தந்தையும், பாட்டனாரும் செய்ததையெல்லாம் செய்யவில்லை என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. யாழ் முஸ்லிம்களின் பெயரைப் பயன்படுத்தி இணையத்தளங்கள் நடத்துவது பற்றிய
    தில்லையடி சபீரின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன்.

    தகுதியில்லாதவர்கள் எல்லாம் தமது சொந்த இலட்ச்சியங்களை அடைந்து கொள்ளும்
    பொருட்டு யாழ் முஸ்லிம்களின் பெயரைப் பயன்படுத்தி இணையம் நடாத்தும் கொடுமையை காண்கின்றோம்.
    எதனை அறையில் பேச வேண்டும், எதனை அம்பலத்தில் பேச கூடாது என்ற இங்கிதம் கூட தெரியாதவர்களெல்லாம்
    இணையத்தளம் நடாத்தும் கொடுமையை காண்கின்றோம்.

    இவர்களுக்கு இஸ்லாமும் தெரியாது, ஊடக தருமமும் தெரியாது, இனவாதத்தைத் தூண்டுவதும்,சமூகங்களை பிரிப்பதும்,
    மக்களை பிழையான சிந்தனையின் பால் இட்டுச் செல்வதனையும் தவிர இவர்களால் ஆகப் போவது ஒன்றுமில்லை.

    தங்கள் தலைவர் கனவுகளுக்காகவும், அரசியல் ஆசைகளுக்காகவும் சமூகத்தை சிக்கலில் தள்ள முயல்கின்றனர்.

    ஆயிரம் அண்டங் காக்கைகள் எவ்வளவுதான் கரைந்தாலும், ஒரு குயிலின் குரலில் இருக்கும் இனிமை அண்டங் காக்கைகளின் கரைதலில்
    இல்லை என்பதுதான் உண்மை.

    யாழ் முஸ்லிம் இணையத்தளத்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. சகோ. அபு மஸ்லமா!
    வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்களில் ஒரு அக்கறை தெரிகிறது. அதை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் எம்மவர்களிடத்தில் இல்லை. இது எமது சமூகத்துக்கு எப்பவோ கொடுக்கப்பட்டுருக்க வேண்டிய சவுக்கடி. மீண்டும் மீண்டும் எழுதுங்கள். திருந்துபவர்கள் திருந்திக்கொள்ளட்டும்.

    ReplyDelete
  10. அபு மஸ்லமா மட்றும் அபு சையாப் என்கிற ரூமியின் எழுத்துக்கள் நல்ல கருத்துக்களுடன் விசமக் கருத்துக்களும் சேர்த்து எழுதப் பட்டுள்ளது. பிரித்து ஆளும் தந்திரம் என்பது ஜூதர்கள் கிறிஸ்தவர்கள் உபயோகித்த தந்திரம். அதையே இந்த ரூமியும் செய்யப் பார்க்கிறார். இஸ்லாத்தைப் பேசிக் கொண்டு இஸ்லாத்துக்கு எதிரான நடைமுறை வாழ்க்கையை கொண்ட இவரது கட்டுரைகள் யாழ் முஸ்லிம் இணையத்தில் வருவது கூடாது. கருப்பு பட்டியலிடப் பட்டோர் பெயரில் இவரது பெயரும் பதிவு செய்யப் பட வேண்டும். வருமானத்துடன் தொழில் யாழ்பாணத்தில் அமைந்தும் அங்கு குடியேறச் செல்லாத ரூமி போன்றவர்கள் ஒதுக்கப்பட வேண்டும்.


    சொனகரிச்டான் வாசி

    ReplyDelete

Powered by Blogger.