இஸ்ரேலின் தலையெழுத்தை அவர்களே தீர்மானிப்பார்களாம்
தமது நாட்டின் தலையெழுத்தை தொடர்ந்தும் தாமே தீர்மானிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளதாக பி பி சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென அமெரிக்க ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. வொஷிங்டனில் நடைபெற்ற இஸ்ரேலுக்கு ஆதரவான மாநாடு ஒன்றில் ஈரான் தொடர்பாக கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமென பரக் ஒபாமா இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
ஈரான் அணு ஆயுதங்களை விருத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், தமது அணுத்திட்டங்கள் அமைதி செயற்பாடுகளுக்கே பயன்படுத்தப்படுவதாக ஈரான் கூறி வருகின்றது. இந்த நிலையில் தமது நாட்டிற்கும் இஸ்ரேலுக்கும், இடையிலான பிணைப்பு உடைக்க முடியாத ஒன்றென அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் அணுவிவகாரம் தொடர்பாக இராஜதந்திர ரீதியில் தீர்வொன்றை எட்டுவதற்கான சந்தர்ப்பம் தற்போதும் உள்ளதாக பரக் ஒபமா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும் ஈரான் தொடர்பாக எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்கா கவனம் செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே தமது நாட்டை பாதுகாப்பதற்கும், ஆபத்தை எதிர்கொள்வதற்குமான இயலுமை தமக்குள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய அணுதிட்டம் தொடர்பாக ஈரான் மீது கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதுடன், தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஈரானின் அணுத்திட்டப் பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Post a Comment