யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை திறப்பு (படங்கள் இணைப்பு)
வடமாகாணத்தில் சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ் நகரில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. நேற்றுக் காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்ட நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையினை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மகிந்த ஹந்துருசிங்க, ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மற்றும் வைத்தியசாலையின் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தனதுரையில், இந்த வைத்தியசாலை அமைப்புக்கான அனுமதி கோரப்பட்ட போது நாம் நிலத்தடி நீர் குறித்தே அதிகம் கவலைப்பட்டோம். ஆனால் அந்த கவலையினை முற்றாக நிவர்த்தி செய்யும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வைத்தியசாலையில் பொருத்தியிருக்கின்றனர். அந்த வகையில் சிறப்பான பணியை இந்த மண்ணுக்கு ஆற்றியுள்ளனர் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் தனதுரையில், வெளிநாட்டிலிருந்து வருவோர் எங்களிடமே வடக்கு மாகாணத்தில் சர்வதேச தரத்திலான வைத்தியசாலை, ஆங்கில பாடசாலைகள் இல்லையே ஏன் என்று கேட்கின்றனர். எனவே அந்த நிலையை இன்று இந்த வைத்தியசாலை மாற்றியமைத்திருக்கின்றதென தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில், யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம், வைத்திய கலாநிதி ரவிராஜ், முதலீட்டுச்சபையின் யாழ். பணிப்பாளர் ஆர்.ஜெயமனோன், கைத்தொழில் வணிகமன்றத்தின் தலைவர் எஸ்.பூரணச்சந்திரன், வைத்தியகலாநிதி தெய்வேந்திரம், வட மாகாண பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி மற்றும் பலரும் உரையாற்றினர். இந்த நிகழ்வில், வங்கி முகாமையாளர்கள், யாழ்.மாவட்டத்தின் சிரேஷ்ட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், யாழ். மாவட்ட வர்த்தகர்கள் இராணுவ அதிகாரிகள் சர்வமதத்தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment