Header Ads



சீதனத்தை ஒழிக்க முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் - சுன்னத்வல் ஜமாஅத் தீர்மானம்

வரதட்சணை (சீதனம்) எண்ணும் கைக்கூலி கொடுமையால் பல ஏழைகள், மற்றும் நடுத்தர மக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதை ஒழித்துகட்ட முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்று திரண்டு உணர்வுடன் செயல்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நெல்லையில் நடைபெற்ற முஸ்லிம் அமைப்பின் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நெல்லையில் நெல்லை மாநகர ஜமாத்துல் உலமா சபை நடத்தும்  சுன்னத்வல்  ஜமாஅத் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், இஸ்லாமியர்கள் அரசியலில் பல சிந்தனைகளில் இருந்தாலும் மகல்லா ஜமாத்திற்கு  எல்லா வகையிலும் கட்டுப்பட்டு பாரம்பரியத்திற்கும் சமுதாயத்தின் கண்ணியத்தையும், மரியாதைகளையும் பாதுகாக்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் இஸ்லாமியர்களுக்கு 7  சதவிதம் முதல் 10  சதவிதம் வரை இட ஒதுக்கீடு செய்ய வேண்டும், மதுவை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், வரதட்சணை எண்ணும் கொடுமையால்  நடுத்தர இளம்பெண்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்டு இருப்பதால் முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றுபட்டு வரதட்சணை கொடுமைகளை ஒழித்து  கட்ட முன் வரவேண்டும், கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று விஞ்ஞானிகள் கூறியிருப்பதால் மத்திய மாநில அரசுகள் கால தாமதம் செய்யாமல் உடனடியாக கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு மவுலவி அல்ஹாஜ் டி.ஜே.எம். சலஹுதின் ரியாஜி தலைமை தாங்கினார். செய்யது அப்பாஸ் வரவேற்று பேசினார். ஷேக் இப்ராகிம், சாகுல் ஹமீது  மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மவுலவி அப்துர் ரகீம் பாகவி அறிமுக உரையாற்றினார். மவுலவிகள் முகமது மைதீன், சாகுல் ஹமீது மஹ்லரி மற்றும் பலர் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு சுன்னத்வல்   ஜமாஅத் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர்  பேராசிரியர் முகமது அலி சிறப்புரையாற்றினார்.

No comments

Powered by Blogger.