Header Ads



அமெரிக்காவின் காலம் கடந்துவிட்டது - அஹ்மதி நஜாத்

அனைத்து உலகத்திற்குமான அமெரிக்காவின் அதிகார கொள்கைகளுக்கான காலம் கடந்துள்ளதாக ஈரான் ஜனாதிபதி மொஹமூத் அஹமதிநிஜாத் தெரிவித்துள்ளார் . அத்துடன் பாகிஸ்தானுடனான மேற்குலக நாடுகளின் உறவுகளின் ஸ்திரமன்ற நிலை தொடர்ந்தும் உயர்வடையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பிராந்திய மாநாட்டில் உரையாற்றும் போது ஈரான் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படையினர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென குறிப்பிட்ட அமஹதி நெஜாத், அவர்களின் இராணுவ செலவீனங்களை, ஆப்கான் பொருளாதாரத்தின் மீட்சிக்கு வழங்கலாம் எனவும் கூறியுள்ளார். நேட்டோ மற்றும் அமெரிக்கா ஆகியன அதன் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் ஈரான் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜங்க செயலாளர் ரொபேட் பிளேக்கும் , குறித்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். எனினும் அஹமதிநிஜாத்தின் உரை ஆரம்பித்ததை அடுத்து குறித்த மாநாட்டில் இருந்து வெளியேறிய அவர், ஈரான் ஜனாதிபதியின் உரை நிறைவடைந்த பின்னர் மீண்டும் மாநாட்டில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. ஈரானின் சர்ச்சைக்குரிய அணுதிட்டம் காரணமாக சர்வதேச ரீதியில் அந்த நாட்டிற்கு எதிராக தடைவிதிக்கும் முயற்சிகளில் அமெரிக்க ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.