அதிகம் பேசுபவர்களை கட்டுப்படுத்த வருகிறது புதிய கருவி
பேசிப் பேசியே நம்மைப் பாடாய்படுத்தும் நபர்களைக் கட்டுப்படுத்துவது எப்படி..? பலருக்கு, மேடையில் பேச சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். பேசியே கூட்டத்திலிருப்பவர்களைக் கொன்று விடுகிறார்கள். பலருக்கு எப்படிப் பேச வேண்டும் என்று தெரிவதில்லை. பலருக்கு எப்படிப் பேசக் கூடாது என்று தெரியவில்லை.
சினிமா பார்க்கச் சென்றால், தியேட்டரில் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தபடி தொண, தொணவென்று பேசியே தொல்லைபடுத்துகிறார்கள் பலர். அமைதியாக இருக்கிறதே என்று, படிப்பதற்கு நூலகம் சென்றால் அங்கும், ஊருக்கே கேட்கிற மாதிரி செல்போனில் சத்தமாகப் பேசி, அடுத்தவரைப் படிக்கவிடாமல் செய்வோர் இன்னும் பலர். இப்படிப்பட்ட தொல்லைபிடித்த மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஜப்பானில் ஒரு புதிய கருவி.
எங்கு போனாலும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வகையில், சிறிய துப்பாக்கி மாதிரி வடிவமைப்பில் அந்த கையடக்க சாதனத்தை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கஸýடகா குரிஹரா மற்றும் கோஜி சுகாடா என்ற இரு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அது சரி. எப்படி வேலை செய்கிறது அந்தக் கருவி என்று கேட்கிறீர்களா..?
ஒரு நபர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரது பேச்சை அவரையே கேட்க வைத்தால் அவரால் தொடர்ந்து பேச முடியுமா? முடியாதல்லவா? அதைத்தான் இந்த நவீன கருவி செய்யும்.
பேசுகிற நபரின் ஒவ்வொரு வார்த்தையையும் 2 நொடியில் அவருக்கே திருப்பிக் கேட்கும் வகையில் அந்த கருவி செயல்படும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். பேசுகிற நபருக்கு எதிரில் சற்று தொலைவில் (நூறு அடிக்கு மிகாமல்) அந்த கருவியை வைக்க வேண்டும். அப்புறமென்ன, அவர் தொடர்ந்து பேசிய மாதிரிதான்..!.
"தேவையில்லாமல் பேசுகிற நபர்களை, அவர்களது பேச்சை அவர்களையேக் கேட்க வைத்தால் அது அவர்களது சிந்தனையைத் தடுமாறச் செய்து உடனடியாக பேசுவதை நிறுத்தச் செய்துவிடும் என்ற மனோதத்துவ உண்மையின் அடிப்படையில் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது' என்று கூறுகிறார்கள் அதைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்.
Post a Comment