Header Ads



ஒஸாமா பின்லேடனை பேட்டிகண்ட அல்ஜஸீரா செய்தியாளர் ஸ்ப்பெயினில் விடுதலை

அல்காயிதா தலைவர் உஸாமா பின்லேடனை நேரடியாக பேட்டி எடுத்து ஊடகத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் அல்ஜஸீராவின் செய்தியாளர் தைஸீர் அலூனி. இவரை ஸ்பெயின் நாடு அல்காயிதாவுடன் தொடர்புடையவர் என பொய் குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் அடைத்தது.

அல்காயிதாவுக்கு நிதியுதவி அலூனி வழியாக கிடைப்பதாக ஸ்பெயின் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், அலூனி இதனை மறுத்தார். உலக வர்த்தக மையம் தாக்குதலுக்கு பிறகு அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனை அல்ஜஸீரா தொலைக்காட்சி சேனலுக்காக பேட்டி எடுத்தார் அலூனி. இதன் காரணமாக ஸ்பெயின் அரசு அவரை சிறையில் அடைத்தது. இச்சம்பவம் 2005-ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

இவர் சிரியா வம்சாவழியைச் சார்ந்தவரும், ஸ்பெயின் குடியுரிமை பெற்றவருமாவார். அலூனி மீதான வழக்கில் உறுதி இல்லை என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி தீர்ப்பு கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து அலூனி விடுதலையானார். அங்கிருந்து அவர் அல்ஜஸீராவின் தலைமையகம் அமைந்திருக்கும் தோஹாவிற்கு வருகை தந்தார். அரசியல் காரணங்களால் தான் கைது செய்யப்பட்டதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அலூனி கூறினார்.

‘ஸ்பெயினில் ஊடகங்கள் எனக்கு எதிராகவே செயல்பட்டன. காரணம், என்னுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அல்ல. மாறாக அல்ஜஸீராவின் மீதான பகைமை உணர்வாகும்’ என்று அலூனி கூறினார்.

ஆஃப்கான் போர் மற்றும் ஈராக் போர் செய்திகளை சேகரிக்கும் காலக்கட்டத்தில் காபூல் மற்றும் பாக்தாதில் அல்ஜஸீரா பீரோவின் தலைவராக அலூனி நியமிக்கப்பட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.