உப்பு நீர் இனிமேல் உபத்திரவம் செய்யாமல் இருக்க விஞ்ஞானிகள் நடவடிக்கை
உலகில் அதிகரித்து வரும் சனத்தொகைப் பெருக்கத்தாலும் காலநிலை மாற்றத்தாலும் குடிநீர்ப் பிரச்சினையாலும் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகின்ற நிலையில் மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்வதற்கான சவாலுக்கு ஆறுதலளிக்கக்கூடிய செய்தியொன்றை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதாவது உப்பு நிலத்தில் கோதுமையை செழிப்பாக பயிரிடமுடியுமென்ற கண்டுபிடிப்பு செய்தியானது உண்மையிலேயே மனமகிழ்வுடன் வரவேற்கக் கூடியதொன்றாகும். உப்பை விருப்பத்துடன் உள்ளீர்த்துக் கொள்ளும் மரபணுக்கொண்ட டூரம் கோதுமையை உப்பு நிலத்தில் பயிரிட்ட போது ஏனைய இன கோதுமைத் தாவரத்தை விட 25 சதவீதம் இந்த டூரம் (Durum) கோதுமை செழிப்பாக வளர்ந்திருப்பதாக தாவரவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள அடேலெய்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மத்தியூ ஹில்றாம் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இந்தஅரிய கண்டுபிடிப்புக் குறித்து தகவலை வெளியிட்டுள்ளனர். TMHKTI:5-A என்று அழைக்கப்படும் இந்த மரபணுவானது நீரிலிருந்து சோடியத்தை அகற்றுவதற்கு உதவுகிறது.கோதுமை தாவரத்தின் வேர்களிலிருந்து இலைகளுக்கு கொண்டு செல்லப்படும் நீரிலிருந்து சோடியத்தை அகற்றிவிட இந்த மரபணு துணை நிற்கிறது.
மரபணு பொறியியல் முறைமையை பின்பற்றாமல் பராம்பரிய பதியமுறை இனப்பெருக்கமுறை மூலம் இந்த TMHKTI:5-A மரபணுவை கோதுமைகளில் செலுத்தி ஆயவு நடத்தப்பட்டது. ட்ரிகம் ரேர்ஜிடம் (Triticum turgitum) என்ற டூரம் கோதுமையானது பாஸ்டா பேர்கர் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ட்ரிகம் ஆஸ்தியம் (Triticum aestivum) கோதுமையை விட இது அதிகளவுக்கு உப்புதன்மையை கொண்டதாகும். இன்று உலக சனத்தொகை 700 கோடியாகவுள்ளது.2050 இல்900 கோடியை எட்டிவிடும் என்று மதிப்பிடப்படும் நிலையில் உலக உணவுத்தேவை 70 சதவீதத்தால் பாதிப்படையும் என்று எதிர்வு கூறப்படுகிறது.
இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் மழைவீழ்ச்சியில் மாற்றம் ஏற்படுமெனவும் அதனால் ஏற்படும் தாக்கத்தால் உணவுத்தேவையை பூர்த்திசெய்வதற்கான சவால் பாரியதாக இருக்கும் என்று எச்சரிக்கப்படும் நிலையில் உப்பு நிலத்தில் கோதுமையை பயிரிட முடியுமென்பது உண்மையிலேயே ஆறுதலளிக்கும் செய்தியாகும்.
உப்பு நீர் பலநாடுகளுக்கு பாரிய பிரச்சினையாகும்.இலங்கையைப் பொறுத்த வரை குறிப்பாக வடக்கில் யாழ்.குடாநாட்டில் நன்னீர் வளம் அருகிவருவதுடன் உப்பு நிலங்களே அதிகளவுக்கு காணப்படுகின்றன. விசேடமாக தீவுப்பகுதிகளில் நன்னீருக்கு பெரும் பற்றாக்குறை காணப்படுகிறது. குடாநாட்டு விவசாயிகள் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்திய புகையிலையையே பணப்பயிராக நம்பி வாழ்கின்றனர்.இப்போது புகையிலை பாவனை பெரிதும் அருகி வருவதால் மாற்றுப் பணப்பயிரை நாடவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு காணப்படுகிறது.
இதுகாலவரை குளிர் வலய நாடுகளிலேயே கோதுமை பயிரிடப்பட முடியுமென்ற எண்ணப்பாட்டை மாற்றியமைப்பதாக உப்பளத்தில் கோதுமையை பயிரிடமுடியுமென்ற கண்டுபிடிப்பு மாற்றியமைத்திருக்கிறது. வட,கீழ் பருவகால மழையையே வடபகுதி விவசாயிகள் நம்பி வாழ்கின்றனர்.
போதிய மழை இல்லாவிடின் நெற்செய்கை நாசமடைந்து விடும் இப்போது உப்பு நிலத்தில் கோதுமையைசெழிப்பாக வளர்க்க முடியுமென்பது நம்பிக்கையூட்டும் செய்தியாகும். ஆனால் குளிர்வலய நாடுகளின் உப்பு நிலத்தில் மட்டுமே இந்தகண்டுபிடிப்பு வெற்றியளித்திருக்கிறது. இதேவேளை நெற்பயிரும் உப்பைச் சகித்துக்கொள்ளும் தன்மையை கொண்டதாக பயிரிடமுடியுமா என்பது பற்றிய ஆராழ்ச்சியில் பிரிட்டன், ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கடந்த ஜனவரி முதல் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்தால் அதிகளவு பயன் பெறப்போவது ஜப்பானிய விவசாயிகளே என்று கூறப்படுகிறது.கடந்த வருடம் இடம்பெற்ற கடல்கோளால் 20 ஆயிரம் நெற் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டிருந்த நெற்பயிரை கடல்நீர் உட்புகுந்து அழித்திருந்தது.ஆனால் கடல்நீரிலேயே நெற்செய்கையை மேற்கொள்வதற்கான கண்டுபிடிப்பு வெற்றிபெற்றால் இனிமேல் உப்பு உவர்க்காது இனிக்கும்.
Post a Comment