எகிப்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட எம்.பி. பதவி விலகினார்
எகிப்து கடும்போக்கு இஸ்லாமிய கட்சியான அல் நூர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிலாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்துகொண்டு சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அன்வர் அல் பில்கிமி என்ற அந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது மூக்கை சீர்செய்வதற்கான சத்திர சிகிச்சை செய்துகொண்டுள்ளார். ஆனால் அந்த தகவலை அவர் மறைத்து தாம் தாக்கப்பட்டதற்காகவே சத்திர சிகிச்சை செய்துகொண்டதாக வெளியுலகுக்கு தெரிவித்துள்ளார். பில்கிமியின் முகத்தில் கட்டுப்போட்டு மறைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
இது தொடர்பில் அல் நூர் கட்சி தலைவர் அல்தல் கபூர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு பார்க்கச் சென்றபோது, அவர்களிடமும் தான் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறியுள்ளார். கெய்ரோவில் இருந்து அலக்ஸான்ரியா செல்லும் வழியில் கொல்லையர்கள் தமது காரை மறித்து கொல்லையிட முற்பட்டபோது, தாம் தாக்கப்பட்டதாக கட்சி உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
எனினும் அல் நூர் கட்சி இது தொடர்பில் மருத்துவமனையில் விசாரித்தபோது, அவர் தமது மூக்கை சீர்செய்வதற்காக பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பில்கிமியை எம்.பி. பதவியில் இருந்து விலகும்படி கட்சி அழுத்தம் கொடுத்ததையடுத்து அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் எழுச்சிக்கு பின்னர் எகிப்தில் நடந்த முதலாவது பாராளுமன்ற தேர்தலில் அல் நூர் கட்சி இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.கடும் போக்கு கட்சியான அல்நூர், இறைவனின் படைப்பில் மாற்றங்கள் செய்வது தவறான செயல் என நம்புகிறது.
Post a Comment