றிஸ்வி முப்திக்கும், அகார் முஹம்மதுக்கும் முஸ்லிம்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள் - ஏ. எச். எம். அஸ்வர்
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு ஏகாதிபத்திய அமெரிக்கா ஜெனீவாவில் பெரும் சூழ்ச்சி வலைப்பின்னல் தந்திரத்தைக் கைக்கொண்ட பிறகும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு எதிராக, 15 நாடுகள் உலகின் பெரு வல்லரசுக்கு வளைந்து கொடுக்காமல் பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருக்கின்றன. 08 நாடுகள் மத்தியஸ்தம் வகித்துள்ளது. ஆக 23 நாடுகள் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய மறுத்துள்ளன. அதிலும் முக்கியமாக 08 முஸ்லிம் நாடுகள் இலங்கைக்குச் சார்பாக வாக்களித்திருப்பது இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ், குவைத், இந்தோனேஷியா, மாலைதீவு, மொரிட்டானியா, கட்டார், சவுதி அரேபியா உகண்டா ஆகிய எட்டு முஸ்லிம் நாடுகள் இலங்கையை ஆதரித்திருப்பது, சர்வதேச ரீதியில், முஸ்லிம் நாடுகள் மத்தியில் தற்போது இலங்கை வகிக்கும் முக்கியத்துவத்தை துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.
அதிலும் அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாகக் கருதப்படும் சவுதி அரேபியா இந்த இக்கட்டான நிலையில் இலங்கைக்கு ஆதரவளித்திருப்பது பெரும் பாராட்டுக்குரியதே. ஹஜ் கடமை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தற்போது சிரேஷ்ட அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். பெளஸி தலைமையில் ஒரு குழு சவூதி சென்றுள்ள இவ்வேளையில் சவூதி அரேபியா எமக்கு ஆதரவு தெரிவித்திருப்பது இலங்கை முஸ்லிம்களுக்கு பெருமை சேர்க்கும் விடயமென நாம் கொள்ளலாம்.
இக்காலகட்டத்தில் ‘உம்றாவு’க்காக மக்கா செல்லும் இலங்கை முஸ்லிம்கள் இலங்கை நாட்டைக் காப்பாற்றுவதற்கு எல்லாம்வல்ல இறைவனிடம் துவா செய்தவண்ணம் இருக்கின்றனர் என்பதையும் நாம் இங்கு மறந்துவிடக் கூடாது.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆளாகாமல் இலங்கையை ஆதரித்த அனைத்து முஸ்லிம் நாடுகளுக்கும் முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் இவ்வேளை நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாக சபைத் தலைவர் அல்ஹாஜ் எம். ஐ. எப். றிஸ்வி முப்தியும் பிரபல இஸ்லாமிய அறிஞரும் கல்விமானுமாகிய ஷேக் அகார் மொகம்மத்தும் நேரடியாக ஜெனீவா சென்று இலங்கையின் நலனுக்காக அங்கு பல முஸ்லிம் நாட்டுத் தலைவர்களை சந்தித்ததையிட்டும் அனைத்து முஸ்லிம் சமுதாயமும் அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது.
Post a Comment