Header Ads



இலங்கை - பலஸ்தீன் உறவை மேலும் வலுப்படுத்த இணக்கம் (புகைப்படம்)

இலங்கை- பலஸ்தீன உறவினை மேலும் வலுப்படுத்தி இரு தரப்பு வர்த்தக உறவுகளை அதிகரிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும்,பலஸ்தீன சுற்றுலா மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் டாக்டர் கவுலுட் பிரான்ஸிஸ் டெப்பஸ் அபூ தய்யாவுக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சில் இடம் பெற்ற இந்தக் கலந்துரையாடலில்,இலங்கையுடன் பலஸ்தீனம் தொடர்ந்து மிகவும் நெருக்கமான உறவுடன் செயற்படுவதாகவும்,இலங்கை மக்கள் பலஸ்தீன மக்களை அதிகமாக நேசிப்பதாகவும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியதுடன், ஜனாதிபதியின் பெயரைப் பலஸ்தீனம் தமது நாட்டின் மிக முக்கியமான பாதையொன்றுக்கு சூட்டியுள்ளமை இலங்கை மக்களுக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ள செயலாகும் என்றும் பலஸ்தீன அமைச்சரிடத்தில் கூறியதுடன் இலங்கை மக்களின் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

இதேவேளை இலங்கை பல்துறைகளில் முன்னேற்றம் கண்டுவருவதுடன்,குறிப்பாக சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருவதனால்,பலஸ்தீனம் இலங்கையுடன் சுற்றுலாத் துறையில் பங்களிப்பு செய்வதற்கு விருப்பம் கொண்டுள்ளதாகவும்,இலங்கைத் தயாரிப்புக்களை பலஸ்தீனர்கள் விரும்பி நுகர்வதாகவும்,எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு உற்பத்திகளை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் தேவைப்பாட்டையும் பலஸ்தீன சுற்றுலா மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் அபூ தய்யாஹ் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இலங்கைக்கு பலஸ்தீன உயர் மட்ட வர்த்தக குழுக்களை அனுப்பி இரு தரப்பு வர்த்தக செயற்பாடுகளை மிகவும் சக்தியுள்ளதாக மாற்றுவது குறித்தும் இரு தரப்பு அமைச்சர்களும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.


 

No comments

Powered by Blogger.