அமெரிக்கா தவறான கொள்கைகளினால் இலங்கையின் சமாதானத்தை சீர்குலைத்து விடகூடாது - றிஸ்வி முப்தி, அகார் முஹம்மத்
சர்வதேச ரீதியில் இன்று இலங்கைக்கு தோன்றியுள்ள அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டுமாயின் இலங்கையர் அனைவரும் ஒன்றுபட்டு அதனை எதிர்க்க வேண்டும். யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இஸ்லாமிய மதத்தலைவர்களான தங்களுக்கு நாட்டிற்காக செய்ய வேண்டிய பெரும் கடமை இருக்கிறது. அதனடிப்படையில் நாட்டை நாம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து பாதுகாப்பது அவசியமாகும்.
ஜெனீவாவிற்கு வருகை தந்திருக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி அவ்வமைப்பின் பிரதித் தலைவர் அஷ் ஷெய்க் ஏ.சி. அகார் மொஹமட் ஆகி யோரும் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்தின் பின்னர் மீண்டும் நாட்டில் சமாதானமும் அமைதியும், அபிவிருத்தியும் ஏற்பட்டுள்ள இவ்வேளையில் அமெரிக்கா போன்ற சக்திகள் இலங்கைக்கு எதிராக ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை சமர்ப்பித்தமை மாபெரும் தவறாகும்.
இந்நாட்டு மக்கள் அனைவரும் இன்று சமாதானத்தின் பயனையடைந்து கொண்டி ருக்கிறார்கள். இதன் மூலம் நாட்டின் சகல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து, சமாதானமும் அமைதியும் நிலை கொண்டிருக்கிறது.
சமாதானத்தை கட்டியெழுப்புவது அவ்வளவு இலகுவான செயல் அல்ல. அப்படி இருந்தும் இலங்கை மக்கள் அந்தப் பணியை வெற்றிகரமாக நிறை வேற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இத்தகைய சந்தர்ப்பத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் எங்கள் நாட்டின் மீது அநாவசியமான அழுத்தங்களை கொண்டு வருவதை தவிர்த்து இந்த பிரேரணை வாபஸ் பெறவேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். அமெரிக்கா தவறான கொள்கைகளினால் இலங்கையின் சமாதானத்தை சீர்குலைத்து விடகூடாது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment