வடமாகாண முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக சபை வழங்கப்பட வேண்டும் - மௌலவி முபாரக்
இனப்பிரச்சினை தீர்வின் போது முஸ்லிம்களுக்கென தனியலகு கோரிக்கை அவசியமற்றது என கூறுவதற்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் அவர்களுக்கு எத்த கைய உரிமையுமில்லை என உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மெளலவி தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவின் ஆட்சிக் காலத்தில் இரவோடிரவாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட போது கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம்கள் பாரிய துன்பங்களுக்கு முகம் கொடுத்தனர். குறிப்பாக முஸ்லிம்கள் பாரிய இன சுத்திகரிப்புக்கு முகம் கொடுத்தார்கள்.
இந்த நிலையில் கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்ற எமது தொடர்ச்சியான கோரிக்கைகளினதும் பிரார்த்தனைகளினதும் பலனாக கிழக்கு பிரிக்கப்பட்டதனால் திரு சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக வர முடிந்தது.
இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது முஸ்லிம்களுக்கு தனியலகு என்பது தேவையற்றது என திரு. சுந்திரகாந்தன் கூறியிருப்பது அப்பட்டமான இனவாத சிந்தனையின் எதிரொலி என்பதுடன் இவ்வாறு கூறுவதற்கு அவருக்கு எத்தகைய தார்மீக உரிமையுமில்லை என்பதை சொல்லிக் கொள்கிறோம். முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக சபை தேவையா இல்லை என்பதை தீர்மானிக்கும் உரிமை முஸ்லிம் மக்களுக்கும் அவர்களின் விடுதலைக்காக கைகொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமே உண்டு.
முஸ்லிம் சமயத் தலைவர்களின் உலமா கட்சியை பொறுத்தவரை ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் கட்டெறும்பாகிவிட்ட தனியலகுக் கோரிக்கைக்கும் அப்பால் சென்று கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கென நிலத் தொடர்பற்ற நிர்வாக சபை ஒன்றும் வட மாகாண முஸ்லிம்களுக்கென தனியான நிர்வாக சபை ஒன்றும் வழங்கப்பட வேண்டுமென்பதே நாம் 2006ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்த எமது உறுதியான தீர்வுத்திட்டமாகும்.
அதனையொட்டிய பேச்சுவார்த்தைகளை அரசாங்கத்துடன் முஸ்லிம் கட்சிகள் நடத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கல்முனைத் தேர்தல் தொகுதியில் தமிழர்களுக்கென தனியான செயலகமும் முஸ்லிம்களுக்கென தனியான செயலகமும் உள்ளதை இத்தகைய நிலத் தொடர்பற்ற மாகாண நிர்வாக சபை தேவையற்றது அல்லது சாத்தியமற்றது எனக்கூறுவோர் பார்க்க வேண்டும். ஒரு தொகுதிக்குள் இது சாத்தியமாயின் ஒரு மாகாணத்தில் ஏன் சாத்தியமாகாது என்பதை உணர வேண்டும்.
Post a Comment