Header Ads



ஜெனீவாவில் வீசப்படும் மனிதஉரிமை மீறலுக்கான பந்து இலங்கைக்குள் விழுமா?

எஸ். எல். மன்சூர்
'உன்னிடம் நிறைய தவறுகள், குற்றங்கள் இருந்தும் அவைகளை உம்மால் நீக்கிவிட முடியாதபோது மற்றவர்களின் குற்றம், குறைகளை மன்னிக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் உன்னை நீயே திருத்திக் கொள்ள வேண்டும் உன்னைத் திருத்திக் கொள்ளமுடியாத போது மற்றவர்களை எப்படித் திருத்த முடியும்' - தோமஸ் கெம்பிஸ் எனும் அறிஞரின் வாசகமிது. இன்றைய ஜெனீவா நிலவரத்தைப் பார்த்தால் இக்கூற்று பொருத்தமாக இருக்கலாம்போல் தோன்றுகிறது. தனக்குள்ளே இருக்கின்ற பழிபாவங்களை மறைக்க செய்யப்படுகின்ற குற்றங்கள் பொல்;லாத பாவச் செயலாகும். உன்னைத் திருத்து உலகம் திருந்திடும் என்பதுபோல நடந்தவைகள் நடந்தவைகளாக இருந்தாலும் பரவாயில்லை நடக்கப்போவதை திருத்தமாக செய்ய முயற்சிப்பதே மனிததர்மமாகும். இதனை குற்றம் புரிந்தவர்கள், புரிபவர்கள் யாராக இருந்தாலும் சிரமேற்கொண்டால் வாழ்வில் நிம்மதி, சந்தோஷம், மதிப்பு, மாண்பு மிக்கவர்களாக வாழ்வார்கள் என்பதும் சான்றோர் பதிவுகள்.

இதனை அடியொட்டி அமெரிக்காவாக இருந்தால் என்ன? லிபியாவாக இருந்தால் என்ன? ரஷ்யாவாக இருந்தால் என்ன? ஏன் இலங்கையாக இருந்தால் என்ன? குறைகள் குற்றங்கள் நடப்பதும், ஏற்படுவதும் இயற்கையானதுதான். ஆனால் பட்டதும், தொட்டதுமாக இருந்தால் கிடைப்பது படுபாதளமே என்று கூறுமளவுக்கு இன்றைய ஜெனீவா நிலவரம் கடுமையான வாதப்பிரதிவாதங்களை கிளப்பியுள்ள நிலையில் ஜெனீவாவிலிருந்து இலங்கையை நோக்கிவீசப்படப்போகின்ற அல்லது வீச எத்தனிக்கின்ற மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய பந்து நாட்டுக்குள் வீழ்ந்துவிட்டால் நடக்கப்போவது என்ன? என்கிற மறுபக்கக் கேள்விகள் டசின்கணக்கில் நாட்டு மக்களின் வாய்களில் உரசிக் கொண்டே இருக்கிறது.
அதேவேனை இங்குள்ள பலரும் கூறுவது போன்று ஆட்சியாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளை செய்வதற்குரிய எந்த நிலைமையும் ஏற்படப்போவதில்லை.

இருப்பினும் வெசிங்கடனில் அமெரிக்காவின் இராஜங்கத் திணைக்கள பேச்சாளரான விக்டோரியா நுலண்ட் செய்தியாளர் மத்தியில் கூறும்போது 'இலங்கையில் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறும் வகையில் செயற்பாட்டாளர்கள் எவராகினும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பொறுப்புக்கூற வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த அறிக்கை விடயத்தில் இலங்கை மீதுள்ள பல்வேறு குற்றச் சாட்டுக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கட்டாயத்திற்கு உட்படலாம் என்பது திண்ணம். அதனை நிருபிக்கும் வகையில் இலங்கை அரசினால் ஏற்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதே நோக்கம் என்று நோர்வே வெளியிட்ட அறிக்கையில் அதன் ஏற்பாட்டாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைக பேரவையின் பங்கேற்பாளருமான ஸ்டீபன் ஸ்;மிட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் றொபட் ஓ பிளக் அவர்களின் வேண்டுதலும் இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பதல்ல நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவைப்பதே எமது நோக்கம் என்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டொரு தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக  22நாடுகள் ஆதரிக்கும் என்று கூறப்பட்டது. கடந்த19.03.2012அன்று இந்திய பாராளுமன்றில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் கொடுத்த ஒத்தடத்தை வைத்துப்பார்த்தால் ஆதரிக்கும் பட்டியலில் குறைவினையே ஏற்படுத்தும் என்கின்றனர் நோக்கர்கள். அவ்வாறு ஒருவேளை வெற்றி பெற்றால் ஏகாதிபத்தியவாதிகளின் விடாப்பிடியாது மேலும் இலங்கைக்கு இறுக்கத்தை கொண்டுவரலாம். அது மக்களையே பாதிக்கவைக்கும். எப்படி!

தோல்விகண்ட அமெரிக்கா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்;ள முயற்சிக்கும். அதேவேளை அண்மையில் அமெரிக்காவின் இராஜதந்திரி கூறியதுபோல ஆட்சி மாற்றத்திற்கான கதவுகளை விரியவே திறக்க வேண்டியதன் அவசரமும், அவசியமும் பற்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதேநேரத்தில் ஈராக், லிபியா, எகிப்து, சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகளைப்போல இல்லாவிட்டாலும் சிறியவகையில், மறைமுகமான விடயங்களில் ஈடுபட்டு தற்போதுள்ள அரசிக்கு எதிரான வாதங்களை கொட்டிக் கொண்டே இருக்கும். அண்மையில் இலங்கையின் அமைச்சர் ஒருவர் கூறியதுபோல அமெரிக்காவின் பொருட்களை வாங்காது பகிஷ்கரிக்க வேண்டும். என்பதையும் தாண்டி அமெரிக்காவின் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப முடியாது என்று அமெரிக்கா கூறிவிட்டால் நமது நிலை என்னவாகும் என்பதை நினைத்துக் கொண்டால்சரி.

முழுக்க முழுக்க வெளிநாட்டின் பொருட்களில் தங்கிவாழும் எமது நாட்டின் பொருளாதார அமைப்பொழுங்கின் பிரகாரம் பாரிய சிக்கல்பொறிகளுக்குள்; மக்கள் அகப்பட்டு அல்லலுறுவர் என்பதைத்தான் காணமுடியுமே தவிர வேறொரு நிகழ்வுகளும் பெரியளவில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே அவதானிகள் கூறுகின்றனர். அதேவேளை தற்போதைய களநிலவரத்தின்;படி இந்தியாவின் அணுகுமுறையானது இலங்கை எதிர்பார்;த்திராத வேதனைமிக்க வலியைக் கொடுத்திருந்தாலும், இந்தியாவிடயத்தில் இறுதித் தீர்மானம் வாக்கெடுப்பு நேரத்தில்தான் துல்லியமாகக் கூறமுடியும் என்கிற நல்லபிப்பிராயத்தையும் இலங்கைக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் குழுவில் வேலைத்திட்டங்களை ஜெனீவாவில் மேற்கொண்டுள்ள இலங்கையின் சிறப்புத்  தூதுவரான தமரா குணநாகம் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் ஆபிரிக்க நாடுகள், இஸ்லாமிய நாடுகள் சிலவும் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். இதனை மேலும் நிலைநிறுத்துவதற்காக வேண்டிய இலங்கையிலிருந்து முஸ்லீம் மார்க்க அறிஞர்கள் ஒருசிலரை ஜெனீவாவிற்கு அனுப்பி முஸ்லீம் நாடுகளின் ஆதரவைத் தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

எது எப்படியோ, இலங்கை போன்ற நாடுகள் தனித்திருந்து உலக சமுதாயத்தின் முன்னால் வெற்றி கொள்ள முடியாது என்பதையே இந்தப் பிரேரணை எடுத்துக்காட்டுகின்றது. இலங்கைக்கு ஏற்கனவே இருந்த ஆதரவுகள் இறுதி நாளன்று வாக்கெடுப்பின்போது எப்படி நடந்து கொள்ளும் என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாததாக இருந்தாலும் சில மேற்குலநாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொண்டமை தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களும் இலங்கைக்கு ஆதரவு காட்டக்கூடாது என்கிற வாதத்தை முன்னிருத்தியே அண்மைக்கால நகர்வுகள் காணப்பட்டன.

அதற்கு முடிவுகட்டுவதுபோல பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்த அறிக்கை பலமானதாக இருக்குமா? என்பதிலும் சற்று தளர்ச்சியை உண்டுபண்ணாமலுமில்லை. அதாவது 'இலங்கையின் தமிழர்வாழும் பகுதிகளில் மக்களின் வாழ்வு இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டு வருகிறது. இலங்கைத் தமிழர்கள் குறித்த தமிழ்நாட்டு எம்பிக்களின் கவலைகளையும், உணர்வலைகளையும் மத்தியரசு பகிர்ந்து கொள்ளும். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்தியா வலியுறுத்தியுள்ளது' என்றும் 'இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனீவாவில் முன்வைக்கப் பட்டுள்ள மனித உரிமைகள் மீறல் சம்பந்தமான பிரேரணையின் இறுதி வரைவு நமக்குக் கிடைக்கவில்லை. அந்தப்பிரேரணை எமக்குக் கிடைக்கும் பட்சத்தில் அது பாதிக்கப்பட்ட மக்களின் விடிவுக்கு துணைநிற்குமானால் அதற்கு சார்பாக இந்தியா ஆதரவுவழங்கி மனித உரிமைகள் குழுக் கூட்டத்தின் இறுதியில் நடைபெறும் வாக்கெடுப்பில் இந்தியா ஆதரவாக வாக்களிக்கும்' என்றும் ஒருபோடு போட்டுள்ளார்.

இலங்கைக்கு அண்மைய நாடு என்கிற வகையிலும், இலங்கையில் நடைபெற்ற யுத்தகால நிகழ்வுகள், சிறுபாண்மையினருக்கு எதிரான பல்வேறு எத்தனங்கள் போன்ற அனைத்துவிடயங்களிலும் தன்னை அகலக் காலூன்றி இருந்த இந்தியாவின் போக்கு திடீரென மாற்றம் அடைந்ததன் மர்மத்தை தொலைதூரம் சென்று கவனிக்க வேண்டிய அவசியமில்லை.

எதிர்வரும் ஆண்டுகளில் நடைபெறப்போகின்ற இந்திய பொதுத் தேர்தல்களில் மீண்;டும் மன்மோகன் சிங் சார்ந்த கட்சி வெற்றிவாகை சூடவேண்டுமானால் இந்த தீர்;மானத்தை எடுத்தே ஆகவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதையே பிரதமரின் கூற்று தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளது. உண்மையில் இலங்கையில் பெரும்பாண்மையினரால் சிறுபாண்மையினர் தாக்கப்பட்டபோதெல்லாம் வாய்மூடி காதுகாத்த இந்தியா ஏன் ஜெனீவா பிரேரணைக்கு மாத்திரம் கைகொடுத்தது என்பதெல்லாம் தேர்தல்கால வலிகைளைத் தக்கவைத்துக் கொள்ளவேயாகும். இலங்கையிலும் தேர்தல் காலத்தில் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் மேடைகளில் முழங்குவார்கள் கிலோமீற்றர் கணவளவு பொய்களையும், புரட்டுக்களையும் கூறி மக்களின் வாக்கைப் பெறுவதில் குறியாய் இருப்பார்கள். தேர்தல்முடிவுற்று வெற்றிவாகை சூடியபின் அடுத்த தேர்தலுக்கே காட்சியளிப்பார்கள். இது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் தேர்தல் புறுடா என்பார்கள். இதனைத்தானா இந்தியாவும் இலங்கைக்கு எதிரான செயற்பாட்டில் கால்பதிக்கிறது. இது நம்பிக்கைத் துரோகத்தனம் என்றும் அரசியல் வட்டாரங்களில் நோக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி 27ஆந்திகதி தொடங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத்தொடர் இம்மாதம் 23ஆந்திகதி மாலையில் நிறைவடைய இருக்கின்ற நிலையில் ஆணைக்குழுவின் 10வது சரத்தின்படி அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அங்கு அங்கத்துவத்தைப் பெற்றுள்ள 47நாடுகளில் முக்கியத்துவம் பெறுகின்ற நாடுகளாகும். இந்நாடுகளின் சாய்வுகள் எந்தப்பக்கம் செல்கிறதோ அப்பக்கமே அந்தப் பிரேரணை வெற்றிபெறும். இதனை எப்படியெல்லாம் தன்பக்கம் சாய்க்க முடியுமோ அவ்வாறெல்லாம் அமெரிக்காவும் தன் நாட்டிலுள்ள கொழுத்த, உலக அரசியலில் முற்றிப்பழுத்தவர்களை எல்லாம் களமிறக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையும் பல்வேறு மட்டங்களில் காணப்படும் புதிஜீவிகள், களநிலவரத்தை வெற்றிவாகை சூடக்கூடியவர்களையே பார்த்துப் பார்;த்து தெறித்தெடுத்து ஜெனீவாவுக்கு அனுப்பியுள்ள நிலையில் இறுதி நேரத்தில் அனைத்தையும் கேட்டுவிட்டு இராமன் சீதைக்கு என்னமுறை என்கிற பழங்கதைக்கு ஒப்பான நிலவரம் வராது என்பதற்கு உத்தரவாதத்தை வழங்க முடியாதுள்ளதையே இன்றைய களநிலவரங்கள் தெளிவுபடுத்துகின்றன என்பதே உண்மையாகும்.

இறுதியாக நடைபெறப்போகின்ற வாக்கெடுப்பில் இந்தியாவின் காய்நகர்த்தல்கள் சிலவேளைகளில் மாற்றம் அடையுமானால் இலங்கைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். முஸ்லீம் நாடுகளும், ஆசியாவின் சில நாடுகளும் இதற்கு பக்கபலமாக இருக்கின்றன. இருப்பினும் அன்றைய நாளின் அக்கணப்பொழுதில் தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக திருப்பிவிட்டால் மனித உரிமைகளை மீறியவிடயத்தை ஒட்டு மொத்தமாக ஜெனீவா பந்து இலங்கைக்குள் வந்து விழும்.  அவ்வாறு விழுகின்றபட்சத்தில் முட்டுக் கொடுத்து ஒத்தனம் போடவேண்டிய பாரிய பொறுப்பு சீனாவின் பக்கமே உள்ளது. இந்தியாவும் கைவிட்டால், அறபுலகமும் கைவிட்டால் பாரியளவிலான வெடிப்புக்கள் படிப்படியாகவே உட்செலுத்தப்படும் என்கிற விடயத்தை ஐநா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுதவர் எய்லீன் டொனாகு தெரிவித்துள்ள கருத்து சாதகமாகவே உள்ளது.

அதாவது 'யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை நடாத்தும் அங்கீகாரத்தை ஐநாவிடமிருந்து அமெரிக்கா பெற்றுவிட்டது' என்கிற கருத்தும் தற்போது அதிக பிரசங்கத்தைப் பெற்றுள்ளது. நடக்கப்போகும் நாடகத்தின் ஒரு கட்டம் முடிவுற தயாராகிவிட்டது. அடுத்த கட்டம் விழுகின்ற பந்தின் அடி ஆரம்பிக்கும் தடயம் பாரியதாகவே தென்படுமா என்ன?


No comments

Powered by Blogger.