மாணவர்களிடம் தேசப்பற்று குறைந்துவிட்டதாம் - கவலைப்படுகிறார் கல்வியமைச்சர்
சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவின் இலவச கல்விமுறையை மேலும் வலுப்படுத்துவதற்கு கல்விமுறையில் மாற்றஞ்செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். வாழ்க்கைச் செலவில் கல்விக்கான செலவு 7 வீதமாகக் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பணம் இருந்தால் மாத்திரமே பிள்ளைகளைக் கல்வி கற்பிக்க முடியும் என்ற நிலைமை தோன்றியிருப்பதாக குறிப்பிட்டார். கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கன்னங்கரா இலவச கல்விமுறையை அறிமுகப்படுத்தியபோது பாடசாலைகளில் தொழில்சார் கல்விகள் நடைமுறையில் இருந்தன. தற்போது இந்த நிலைமைமாறி தொழில்சார் கல்விமுறை நடைமுறையில் இல்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், க.பொ.த. உயர் தரத்தில் 22 வீதமானவர்கள் விஞ்ஞான, கணிதப் பிரிவிலும், 25 வீதமானவர்கள் வணிகப் பிரிவிலும், 53 வீதமானவர்கள் கலைப்பிரிவிலும் பரீட்சைகளுக்குத் தோற்றுகின்றனர். பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டே மாணவர்கள் கல்வி கற்று வருவதால் பலர் நடைமுறைப் பயிற்சி பெறுவதில்லை.
இதனால் வேலைவாய்ப்பைப் பெறுவதில் இவர்களுக்கு சிக்கல் நிலை ஏற்படுகிறது. இலவசப் பாடசாலைக் கல்வியிலும் தற்போது போட்டிநிலை ஏற்பட்டிருப்பதுடன், புகழ்பெற்ற பாடசாலைகளிலேயே தமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் விரும்புகின்றனர். இதனால் 147ற்கும் அதிகமான பாடசாலைகளில் மாணவர்களே இல்லை. 100ற்கும் அதிகமான பாடசாலைகளில் 20 வீதமான மாணவர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
அதேநேரம், தற்பொழுது மாணவர்கள் மத்தியில் தேசப்பற்று குறைந்துள்ளது. பலர் வெளிநாடுகளுக்குச் செல்வதையே விரும்புகின்றனர். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் மூன்றாவது பரம்பரையினர் இலங்கைக்கு வருவதற்கு விரும்புவதில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment