சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் கவனத்திற்கு..!
சவூதி அரேபியாவில் வீடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் சார்பாக அவர்களது நலன்புரி வசதிகள் மற்றும் சமூக பாதுகாப்பு என்பன கருதி சர்வதேச மட்டத்திலான சமூக பாதுகாப்பு (ISSP) வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காடீகார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிலே வீட்டு வேலைவாய்ப்பு க்களை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கும் உள்ளூர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் வேலை வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள நபர்கள் ஆகியோருக்கு இந்த காப்புறுதித் திட்டம் மிகவும் பயனளிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளப் படும் ஊழியர் 50 வயதிற்குள் குறைந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் தற்போது பணிபுரியும் ஊழியர்களது சேவைக் காலத்தை நீடிப்பதற்கு தொழில் வழங்குநர் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் இந்த வயதெல்லை கவனத்திற் கொள்ளப்பட மாட்டாதென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள் வாங்கப்படும் ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலும் (ISSP) நிறுவனத்திலும் பதிவு செய்துகொள்ளல் வேண்டுமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மை பெறும் ஒருவர் இயற்கை மரணம் அல்லது திடீர் விபத்து ஒன்றின் மூலம் மரணிக்கும் பட்சத்தில் அவரை தங்கி வாழ்வோருக்கு 15000 சவூதி றியால் (ரூ 435,000 தொகை) கிடைக்கும்.
தொழில்புரிபவர் நோய் காரணமாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பட்சத்தில் 15,000 சவூதி றியால் வரையில் நட்ட ஈடு பெறுவதற்கும் இதன் மூலம் வாய்ப்புண்டு.
மேலும் சம்பளம் வழங்கப்படாத பட்சத்தில் இத்திட்டத்தின் கீழ் ஆகக் கூடியது 6 மாதங்கள் வரையில் நட்டஈடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காடீகார தெரிவித்துள்ளார்.
Post a Comment