யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு புலிகள் அநீதி இழைத்தார்களா..? ஆச்சரியத்துடன் கேட்ட அப்துல் கலாம்
யாழ் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்த விபரங்களை அறிந்துகொள்தல் பொருட்டு யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் முன்னால் செயலளாரும், யாழ்ப்பாணம் தகவல் வழிகாட்டல் மத்திய நிலையத்தின் செயலாளருமாகிய சகோதரர் அஷ்-ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி) டனான பிரத்தியேக நேர்காணல்
யாழ் முஸ்லிம் இணையம்: யாழ்ப்பாண முஸ்லிம்களின் தற்போதைய மீள்குடியேற்ற நிலைமைகள் குறித்து விளக்க முடியுமா?
அய்யூப் அஸ்மின்(நளீமி): இவ்வாறான ஒரு நேர்காணல் நிகழ்வை ஏற்பாடு செய்த யாழ் முஸ்லிம் இணையத்துக்கு முதற்கண் எனது நன்றிகளைக்கூறிக்கொள்கின்றேன். உங்களது ஊடக முயற்சி எமது முஸ்லிம் பிரதேச மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைகின்றது, அதற்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும், சரி விடயத்துக்கு வருகின்றேன்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் நகர்வதை அண்மைக் காலங்களில் நோக்க முடிகின்றது. யாழ் மாவட்டத்தை எடுத்து நோக்குகையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவில்2,087 குடும்பங்களும், சாவகச்சேரி பிரதேச செயலகப்பிரிவில் 93 குடும்பங்களும், வேலனை பிரதேச செயலகப்பிரிவில் 76 குடும்பங்களும் மீள்குடியேற்வதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.2011 பெப்ரவரி மாதம் முதல் 2012 பெப்ரவரி மாதம் வரையான 12 மாத காலப்பகுதிக்குள் சராசரியாக மாதம்மொன்றிற்கு 23 குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்காக பிரதேச செயலக மட்டங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. எமது கணிப்பீட்டின் பிரகாரம் 2008ம் ஆண்டின் மாவட்ட செயலகங்களின் தரவுகளின் படி வெளிமாவட்டங்களில் 5,483 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பங்கள் பதிவாகியிருக்கின்றன, 41%மான குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.எனினும் 10% குடும்பங்களே இங்கே நிரந்தரமாக குடியேறியுள்ளனர். ஏனைய 31%மானவர்களும் வீடில்லா மற்றும் காணியில்லாப் பிரச்சினைகளின் அடிப்படையில் தமது மீள்குடியேற்றத்தை தாமதப்படுத்துகின்றனர். மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான சீரான திட்டமிடல்களும் அமுலாக்கங்களும் துரிதமாக மேற்கொள்ளப்படவேண்டிய தேவை இருக்கின்றது.
யாழ் முஸ்லிம் இணையம்: யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் முக்கிய தடைகள் எவை என நீங்கள் கருதுகின்றீர்கள்?
அய்யூப் அஸ்மின்(நளீமி): இது ஒரு சிக்கல் தன்மை வாய்ந்த வினாவாகும், மீள்குடியேற்றத்திற்கான பொதுத்தடைகள் என எதனையும் நாம் அறுதியிட்டுக்கூற முடியாது. நிவாரணங்கள் வழங்கப்பட்டால், அல்லது வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டால் எமது மக்கள் மீளக்குடியேறுவார்கள் என்ற ஒரு எண்ணப்பாடு பொதுவாக இருக்கின்றது,ஆனால் இதனை நான் ஒரு பிரதான விடயமாக கருதவில்லை, என்னுடைய அவதானத்தின்படி மீள்குடியேற்றத்திற்கான் அடிப்படைத்தடை எமது மக்களின் மனோநிலைகளேயாகும். மீள்குடியேற்றத்தின்பால் தேவை இருப்பின் அதனை நோக்கிய தேடல் இருக்கும் தேடல் முயற்சிகளை மேற்கொள்ளச் செய்யும் முயற்சிகள் நல்ல விளைவுகளைத்தரும், தேவையும் தேடலும் இல்லாதபோது முயற்சிகள் பிறக்காது, முயற்சிகள் இல்லாவிட்டால் நல்ல விளைவுகளை எம்மால் அடைய முடியாது. எனவே அடிப்படையாக எமது மக்களின் மனோநிலைகளில் மாற்றங்களையேற்படுத்த வேண்டும் அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து யோசிக்க முடியும். வீட்டுத்திட்டங்கள், காணியற்றோர்க்கான காணி விநியோகம் என்பன அடுத்ததாகவுள்ள தடைகளாகும், இப்பிரச்சினைகளும் விரைவில் அடையாளப்படுத்தப்பட்டு நிவர்த்திக்கப்பட வேண்டும்.மூன்றாவது முக்கிய காரணியாக தொழில்வாய்ப்பு, வாழ்வாதார விடயங்களைக் குறிப்பிட முடியும்,தொழில் வாய்ப்புகள் இருக்குமாக இருந்தால் அது மீள்குடியேற்றத்திற்கான முக்கிய தூண்டுகோளாக இருக்கும் என நம்புகின்றேன்.
யாழ் முஸ்லிம் இணையம்: இத்தகைய தடைகளை எதிர்கொள்வதில் முஸ்லிம் சமூகத் தலைமைகளின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன?
அய்யூப் அஸ்மின்(நளீமி): யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் சிவில் சமூக நடவடிக்கைகளனாது மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்திருக்கின்றது.அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டிய அளவிற்கு சிவில் சமூக நடவடிக்கைகளில் அவர்களின் ஈடுபாடு மிகவும் குறைவானது, பல்வேறு சந்தர்ப்பங்களில் சிவில் சமூக நடவடிக்கையினையும் அரசியல் நடவடிக்கைகளையும் குழப்பிக்கொள்கின்ற தன்மைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதன் காரணமாக காத்திரமான ஒரு சிவில் சமூக நடவடிக்கையினை எமது சமூகத்தில் காண முடியாதுள்ளது.மீள்குடியேற்றம் என்பது அரசியல் நலன்களுக்கு அப்பால் சென்று நோக்கப்படவேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அந்த நிலை மீறப்பட்டிருக்கின்றது. அத்தோடு யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தலைமைகளிடையே பலிவாங்கும் மனோநிலையை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது, இதன் காரணமாக தான் பெரியவன் என்ற மனோநிலையும், தானே எல்லாவற்றையும் கட்டியாழவேண்டும் என்ற எண்ணமும் எழுகின்றது, இதன் காரணமாக சமூக ஒற்றுமை சீர் குலைவதோடு காத்திரமான முயற்சிகளை மேற்கொள்ள இது தடையாக இருக்கின்றது.
யாழ் முஸ்லிம் இணையம்: இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் இயந்திரமாக யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் அடையாளப்படுத்தப்படவில்லையா?
அய்யூப் அஸ்மின்(நளீமி): சம்மேளனம் என்பது ஒரு வெற்றிகரமான முயற்சி என்பது எவராலும் மறுக்கப்பட முடியாததொன்றாகும், சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்க முன்வராத பலர் பல சிரமங்களுக்கு மத்தியில் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டார்கள்,இன்று அவர்கள் அதன் உயர் பதவிகளை நோக்கி நகரும் ஒரு நிலை உருவாகியிருக்கின்றது. அந்தவகையில் சம்மேளனம் ஒரு வெற்றிகரமான முயற்சியாகும். எமது சமூகத்தின் பலவீனமான நிலைகளை ஒரே இரவில் இல்லாமலாக்கிவிட முடியாது, அது படிமுறை ரீதியான அமைப்பில்தான் ஏற்படுத்தப்பட வேண்டும்,சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு சமூக நடவடிக்கைகள் சார்ந்த பயிற்சிகளை வழங்க நாம் உத்தேசித்திருக்கின்றோம். இன்ஸா அல்லாஹ் அவ்வாறான பயிற்சிகளினூடாக அவர்களது தலைமைத்துவ ஆற்றல்கள் ஒழுங்குபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது யாழ் முஸ்லிம் சமூகத்தில் உண்மையான சேவை நோக்குள்ளவர்களை சமூகம் அடையாளம் கண்டுகொள்கின்றது. ஒரு சிலர் பெயருக்காக பதவிகளில் தங்கியிருக்கின்றார்கள் அல்லது தம்மை சமூக சேவகர்களாக காட்டிக்கொள்ள முயலுகின்றார்கள், இவர்களையும் சமூகம் அடையாளம் கண்டுகொள்ளும். எனவே அவ்வாறான ஒரு நிலை இயல்பாக ஏற்படும் வரை சம்மேளனம் அவசரப்பட்டு இவ்வாறான தலைமைத்துவம் சார்ந்த விடயங்களை கையாளும் என எதிர்பார்க்க முடியாது, அவ்வாறு கையாள்வதும் சம்மேளனத்தின் நீண்டகால நலன்களுக்கு பாதிப்பாக அமையும் என நான் நம்புகின்றேன்.இவ்வாறான தலைமைத்துவங்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்களே தீர்ப்பளிக்கப் போதுமானவர்கள்.
யாழ் முஸ்லிம் இணையம்: இந்திய வீட்டுத்திட்ட உதவிகள் முஸ்லிம்களுக்கு கிட்டுமா? அதில் உள்ள நடைமுறைப்பிரச்சினைகள் என்ன?
அய்யூப் அஸ்மின்(நளீமி): இலங்கையில்50,000 வீடுகளை நிர்மானிக்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது, இதில் முஸ்லிம்களும் உள்வாங்கப்படுவார்கள் என்றே ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கூட 163 முஸ்லிம் குடும்பங்கள் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகளாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் பட்டியலிடப்பட்டிருந்தனர், இந்நிலையில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு விடயத்தில் புதிய நடைமுறைகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இத்தகைய புதிய நடைமுறைகளின் பிரகாரம் அதிக வருமானம் உள்ளவர்கள், அரச தொழில் புரிவோர், வெளிநாடுகளில் வதியும் அல்லது தொழில் புரியும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் அதிகளவிலான ஆண் குழந்தைகளை யுடையோர், இலங்கையின் எப்பாகத்திலாவது சொந்த வீடுகளைக் கொண்டிருப்போர், பயனாளிகளாக இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் பயனாக முஸ்லிம்கள் இந்திய வீட்டுத்திட்டத்தினுள் உள்வாங்கப்படுவது மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இந்திய வீட்டுத்திட்ட உதவிகளின் முதற்கட்ட வீடு நிர்மானப்பணிகள் நிறைவடையும் தறுவாயில் இருக்கின்றது, சுமார் 6,000 வீடுகள் வடமாகாணத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது, இதில் மன்னார் சிலாவத்துறை பிரதேச செயலகப்பிரிவில் 67 வீடுகள் முஸ்லிம்களுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ளன, ஏனையவை தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கவென நிர்மானிக்கப்பட்டுள்ளன. அத்தோடு கண்டி ஹசலக பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கும் புலிகளின் போராளிகளுக்கும் இந்திய வீடுகள் நிர்மானிக்கப்படும் என்ற ஒரு உத்தியோகபூர்வமற்ற செய்தியும் எமக்கு கிடைத்துள்ளது. இவற்றைக்கொண்டு நோக்குகையில் இந்திய வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்கள் இணைத்துக் கொள்ளப்படுவது மட்டுப்படுத்தப்பட்ட அமைப்பிலேயே இடம்பெறும் என நாம் நம்பமுடியும்.
யாழ் முஸ்லிம் இணையம்: இந்திய முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் உடனான சந்திப்பு குறித்து…
அய்யூப் அஸ்மின்(நளீமி): யாழ்ப்பாண முஸ்லிம் என்ற வகையில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும், அப்துல்கலாம் அவர்களுடனான பகற்போசனமொன்றுக்கு நாம் அழைக்கப்பட்டிருந்தோம், அப்போது அவருடன் உறையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் எமது மக்களின் பலவந்த வெளியேற்றம் குறித்து ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன், அதனை அவர் ஒரு ஆச்சரியமான விடயமாக நோக்கினார் முஸ்லிம்களுக்கு புலிகள் அவ்வாறனதொரு அநீதியை இழைத்தார்களா என்று கேட்டார், அவர் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அதுவரை அறிந்திருக்கவில்லை. நாம் இப்போது மீளவும் குடியேறிவருகின்றோம், எமது மீள்குடியேற்றம் ஸ்திரமானதாக அமையவும் நாம் இன்னுமொருதடவை இவ்வாறான ஒரு துன்பியல் நிகழ்விற்கு முகம் கொடுக்காமல் இருக்கவும் என்ன வழிவகைகளை கையாளவேண்டும் என்று அவரிடம் கேட்டேன், அதற்கு ஜனாதிபதி அபுல்கலாம் அவர்கள் “ நீங்கள் வெளியேற்றத்துக்கு முன்னர் வர்த்தக சமூகமாகவே இருந்திருக்கின்றீர்கள் இப்போதும் நவீன முறைமைகளுடன் கூடிய வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள், அதனை நேர்மையாக மேற்கொள்ளுங்கள்,அதன் மூலம் உங்களின் மீது இங்கிருக்கின்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் நீங்கள் இந்த சமூகத்தினரால் மதிக்கப்படுவீர்கள் அத்தோடு மீள்குடியேற்றமும் சிறக்கும்” என்றார்கள்.இது உண்மையில் ஒரு முக்கியமான அறிவுறையாகும்.
யாழ் முஸ்லிம் இணையம்: யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றம் குறித்து புதிய முன்னேற்றங்கள் அல்லது திட்டங்கள் இருக்கின்றனவா?
அய்யூப் அஸ்மின்(நளீமி): நிச்சயமாக நாம் தொடர்ந்தும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றோம், யாழ்ப்பாண முஸ்லிம் மீள்குடியேற்றம் என்பது ஒரு பாரிய சமூக நகர்வு நடவடிக்கை, இதனை தனித்து ஒரு அமைப்பு அல்லது ஒருசில தனிமனிதர்கள் நிறைவேற்றிட முடியாது, இதனை ஒரு சமூக வேலைத்திட்டமாகக் கொண்டே முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.இதன் ஒரு பகுதியை நாம் ஒரு சில புத்திஜீவிகளுடனும் அமைப்புகளுடனும் இணைந்து “யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள்” என்னும் கருத்திட்டமாக முன்னெடுக்கவும் உத்தேசித்திருக்கின்றோம். இன்ஸா அல்லாஹ் மிக விரைவில் எமது உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து விளக்கவுள்ளோம்.
யாழ் முஸ்லிம் இணையம்: யாழ் முஸ்லிம் பிரதேசத்தில் காணிகள் விற்பனவு குறித்து?
அய்யூப் அஸ்மின்(நளீமி): கட்டாயம் தவிர்க்கப்படவேண்டிய ஆனால் தடுக்க முடியாதுபோன விடயமே காணிவிற்பனவு சார்ந்த பிரச்சினையாகும்.ஆனால் சம்மேளனத்தின் காத்திரமான முயற்சியின் விளைவாக தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது,ஆனால் ஒரு தொடர்தேர்ச்சியான வேலைத்திட்டமொன்று இதற்கு அவசியப்படுகின்றது, இன்ஸா அல்லாஹ் விரைவில் அவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை நாம் அறிமுகம் செய்யவுள்ளோம். அது வினைத்திறன் மிக்கதாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்.
யாழ் முஸ்லிம் இணையம்: யாழ் முஸ்லிம்களை மையப்படுத்தி இயங்கும் ஊடகங்கள் குறித்து
அய்யூப் அஸ்மின்(நளீமி): யாழ் முஸ்லிம் இணையத்தளத்தைத் தவிர ஏனையவை சமூகப்பொறுப்புடன் நடக்கின்றனவா என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. அவர்கள் தமது சுய விருப்புவெறுப்புகளை அரங்கேற்றும் அமைப்பாக ஊடகங்களைப் பயன்படுத்தாது, மீள்குடியேற்ற செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் தமது பங்களிப்புகளை நல்கினால் சிறப்பானதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
மேற்படி நேர்காணலை நோக்கும்போது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது, சமூகப்பொறுப்புடன் சமூகத்தின் நலன்களை தூரநோக்கோடு அணுகி வினாக்களும் அதற்கான பதில்களும் அமைந்திருக்கின்றன, அந்தவகையில் யாழ் முஸ்லிம் இணையத்தளம் மற்றும் மௌலவி அஸ்மின் ஆகியோர்க்கு எமது நன்றிகள்
ReplyDeleteமௌலவி அஸ்மின் அவர்களுடைய அறிவுப்புலமையும் சமூக ஆற்றலும் பாராட்டத்தக்கது, எனினும் எம்மிட ஒரு கேள்வி எழுகின்றது, இந்த நேர்காணலில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்து எதுவித கேள்விகளும் கேட்கப்படவில்லை, இதற்கான காரணம் என்ன? அஸ்மின் மௌலவி அவர்கள் மேற்படி ஒன்றுகூடலை நடாத்துவதில் அதிக பங்கெடுத்தவர் என அறிகின்றோம், இது ஒன்றுகூடலா அல்லது மீலாத் விழாவா போன்ற கேள்விகளுக்கு இன்னமும் தெளிவான பதில்கள் கிடக்கவில்லை, அதனையும் இங்கே ஒரு வினாவாக கேட்டு மௌலவி அஸ்மின் அவர்களுடைய பதில் என்ன என்று அறிந்திருக்கலாம்,ஆனால் அது தவிர்க்கப்பட்டுவிட்டது, எனவே அதனை எனது கேள்வியாக முன்வைக்க விரும்புகின்றேன், தயவு செய்து அங்கே நடந்த ஒன்றுகூடலா அல்லது மீலாத் நிகழ்வா என்பத அஸ்மின் மௌலவி அவர்கள் தெளிவுபடுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்
முஹம்மது
நீர்கொழும்பு
நாளைய முஸ்லிம்கள் மீள்குடியேறும் யாழ்பாண சோனக தெரு நவீனத்துவம் பொருந்தியதாக எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய திட்டங்கள் எம்மிடம் இல்லை. சூழ் நிலை கைதிகளாக இருந்து கொண்டு முடிவுகள் எடுப்பதனால் அந்த சூழு் நிலைகள் மாறும் போது இந்த முடிவுகள் தோற்றுப்போய் விடுகின்றன.
ReplyDeleteஎம்மிடம் இரு தெரிவுகளே உள்ளன.
ஒன்று எமது பிரதேசத்தை மறப்பது. வரலாற்றில் சமூக, அரசியல், இராணுவ, பொருளாதார, மார்க்க காரணங்களிற்காக இனங்கள் மற்றும் இனக்குழுக்கள் தங்கள் பூர்வீகங்களை துறந்து இன்னொரு இடத்தை தேர்ந்து தம்மை முற்றாக மாற்றிக்கொள்வது. இவ்வாறான நிகழ்வுகள், சேர்பியாவின் தென்கிழக்கு பகுதி, கொசோவாவின் எல்லைகள், குரேசியாவின் மலைப்பகுதி, ரஷ்ய சைபீரிய பாலைவனத்தையண்டிய பகுதி என முஸ்லிம்களால் பல இடங்கள் கைவிடப்பட்டுள்ளன. எதிர்கால சந்ததியின் நலன்களிற்காக இந்த வரலாற்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான உலமா விளக்கங்கள் பல உள்ளன. இவை பற்றியும் எம்மிடம் தெளிவுகள் இருத்தல் அவசியம்.
மற்றையது எமது மண்ணை கட்டியெழுப்புவது. ஒரு நவீன பிரதேசமாக மாற்றுவது. இஸ்லாமிய அடிப்படைகளை தாங்கி நிற்கும் சமூகமாக மாறுவது. இலங்கையில் இதுவரை இல்லாத முன்மாதிரி இஸ்லாமிய கிராமம் பற்றிய சிந்தனைகள் பற்றியது அது. பழைய கனவுகளை உதறிய நிலையில் சம கால வாழ்வியல் ஒழுங்குகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறான ஒரு சமூக, அரசியல் ஒழுங்கை அறிவு, ஆராய்ச்சி என்பவற்றின் அடிப்படையில் எம் வாழ்வை உருவாக்குவது. இது சற்று சிரமமான வேலை. இதில் தரமும் தகுதியிமுள்ளவர்கள் தாமாக முன்வந்து செயற்படல் வேண்டும்..
நாம் இதில் ஒன்றை ஒரு முகமாக தேர்ந்து முடிவெடுத்தல் அவசியம். அழிவுகளிற்கும், பிரச்சனைகளிற்கும் மத்தியிலான சோனக தெருவின் அடைதல்கள் என்ன? என்பது பற்றிய சரியான பார்வை எம்மிடம் வரல் அவசியம்.. அல்லது இந்த இழப்புக்களையும் தாண்டிய சோன தெருவின் இருப்பின் அடிப்படைகள் என்ன என்பது பற்றிய தெளிவு அவசியம். இதில் ஒன்றினை நாம் விரைவாக அமைப்பு ரீதியாக சிந்தித்து செய்தல் காலத்தின் தேவையாகும்.
I appreciate your progress.Small correction,56Indian houses only is built at Chilavathurai.Haroos CVT
ReplyDeletekalaam
ReplyDeleteஅப்துல் கலாமுக்கு மாத்திரமல்ல, இந்தியாவிலுள்ள அணைத்து
ReplyDeleteமுஸ்லிம் மக்களுக்கும் இலங்கையில் என்ன நடக்கின்றது என
தெரியாமலே இருக்கின்றது .காரணம்,தமிழ் நாட்டில் புலிகளுக்கு
ஆதரவாக (அங்கு அரசியல் லாபத்துக்காக )போராட்டம் நடாத்துபவர்களின்
பிரச்சாரம் அப்படி இருக்கின்றது .இந்த உண்மை தெரியாமல் தமிழ் நாட்டிலுள்ள
தமிழ் போராளிகளுக்கு என்று நிதி சேகரிக்கும் போதெல்லாம் அள்ளி அள்ளி
கொடுத்தார்கள். ஏன்?
கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள் விளங்கும் :
நம் நாட்டில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என பிரித்தரியப்பட்பவர்களாக
வாழ்கிறோம்.நாகராஜா,பெரேரா, அப்துல் காதர் ,என்று பெயர்களை சொன்னதும்
யார் என்பதைப் புரிந்துகொள்வோம்.ஆனால், தமிழ் நாட்டில் தமிழ் மொழி
பேசுகின்ற எந்த இன மக்களாக இருந்தாலும் அவர்கள் தமிழர்கள் என்றே
அழைக்கப்படுகிறார்கள் .தமிழ் நாட்டிலுள்ள ஒரு அப்துல் காதர் என்பவரிடம்
கேட்டாலும் "நான் தமிழன்"என்றே சொல்லுவார்.
தமிழ் நாட்டில் புலிகள் என்ற பிரச்சாரமே இல்லை . இலங்கையில் தமிழர்கள்
கொல்லப்படுகிறார்கள்,தமிழர்களுக்கு தனித் தமிழ் நாடு வேண்டும்,இலங்கைத்
தமிழ் மக்களுக்காக உதவுங்கள் என்றே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் .
இப்போது கொஞ்சம் சிந்தியுங்கள்: அங்குள்ள முஸ்லிம் மக்கள் என்ன நினைக்கிறார்கள்
இலங்கையில் இந்துக்களும், முஸ்லிம்களும்தான் கொல்லப்படுகிறார்கள் என்று நினைத்து
நாம் கொடுக்கும் நிதி உதவிகள் இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவே
பயன்படப் போகிறது என்று தெரியாமல் அள்ளி அள்ளி கொடுத்தார்கள் .
இந்த விஷயம் இந்தியாவின் ஜனாதி பதியாக இருந்தவருக்கே தெரியவில்லைஎன்றால்
சாதாரண பொது மக்களுக்கு எப்படித் தெரிந்து இருக்கும்........