இந்திய வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்களா..? உள்வாங்கப்படுவார்களா..??
இந்தவார நவமணி பத்திரிகையில் வெளியாகியிருந்த ஆசிரியர் தலையங்கத்தை காலத்தின் அவசியம் கருதி இங்கு மீள் பதிவுசெய்கிறோம்
நன்றி - ஏன்.எம்.அமீன் - நவமணி பிரதம ஆசிரியர்
வடக்கில் இந்திய அரசு நிர்மாணிக்கவுள்ள ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கினை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசாங்க கட்சியிலிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி எதிர்க் கட்சியிலிருக்கும் முஸ்லிம் எம்.பீ.க்களும் கூட்டாக இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பொது விடயங்களில் கட்சி பேதங்களை மறந்து ஒருமித்து குரல் கொடுக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்திருப்பது பாராட்டுக் குரியது. தாமதித்தேனும் இவ்வாறான பொது விடயங்களில் ஒன்றுபட்டுச் செயற்பட முற்பட்டிருப்பதனை முஸ்லிம் சமூகம் வரவேற்கும்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 21 ஆண்டுகள் கழிந்து விட்டன. யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்கள் ஆகின்றபோதிலும் கூட தம் சொந்த மண்ணில் மீளக் குடியேற விரும்பும் முஸ்லிம்களை மீளக்குடியேற்ற ஆக்கபூர்வமான திட்டம் எதனையும் இது வரை முன்வைக்காத நிலையில் இந்தியா நிர்மாணிக்கவுள்ள ஐம்பதாயிரம் வீடுகளிலும் முஸ்லிம்களுக்கு பங்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்
தெரிவிக்கின்றனர்.
தெரிவிக்கின்றனர்.
இந்தியா யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு உதவியாகவே 50000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளது. இந்தியாவின் இந்த நன் முயற்சியை பாராட்டியுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வீட்டுத் திட்டத்திற்குபயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு விடுத்துள்ள திட்டத்தில் போடப்பட்டுள்ள நிபந்தனைகளில் சில முஸ்லிம்கள் தெரிவாவதைத் தடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
1990ம் ஆண்டு வெளியேறிய இடம்பெயர்ந்தவர்கள் அகதிகள் அந்தஸ்தாக கருதி நிவாரணங்களை வழங்கத் தயங்குவது அவர்கள் முஸ்லிம்களாக இருப்பதனாலா என்று சந்தேகிக்குமளவுக்கு சர்வதேச நிறுவனங்கள் செயற்படுகின்றன.
இடம்பெயர்க்கப்பட்டவர்கள் மீளக் குடியேறும் போது ஐ.நா. அமைப்புகளினூடாக 25000 ரூபா பணம் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் தற்காலிகமாக வீடுகளை நிர்மாணிப்பதற்குத் தேவையானதகரங்கள் போன்ற பொருட்கள் உதவியாக வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த உதவிகள் முஸ்லிம்கள் மீளக்குடியேறும் போது வழங்கப்படுவதில்லை. இது உண்மையிலேயே பாரபட்சமான ஒரு செயற்பாடாகும். மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் ஐ.நா. போன்ற சர்வதேச நிறுவனங்கள் இப்படி ஏன் நடந்து கொள்கின்றன என்பதே நாம் எழுப்பும் கேள்வியாகும்.
இந்தப் பின்னணியிலே இந்திய வீடமைப்புத் திட்டத்திலும் தாம் கைகழுவி விடப்படலாம் என இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஐயாயிரம் வீடுகள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்படும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் இந்திய தூதுவராலயத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக வகுக்கப்பட்டுள்ள புள்ளி வழங்கும் திட்டம் அமுல்நடத்தப்பட்டால் முஸ்லிம்கள் எவரும் தெரிவாகாத நிலையே ஏற்படும்.
யுத்தத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டது போன்றே முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தத் திட்டங்களில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுவதில் தவறில்லை. அதற்காக பாதிக்கப்பட்ட மற்ற இனத்தை புறக்கணிக்க இடமளிக்கக்கூடாது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் போது தமிழர்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம்களுக்கும் சேர்த்தே தீர்வு வழங்கப்பட வேண்டும் என இப்பிரச்சினை தோன்றிய காலத்திலிருந்தே இந்தியா கூறி வருகின்றது. இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி உட்பட்ட சகல இந்தியத் தலைவர்களும் இந்த நிலைப்பாட்டிலே இருந்தார்கள். இந்திய அரசு பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுமுள்ளது. முஸ்லிம் சமூகம் இந்தியாவின் இந்த நல்லெண்ணத்தை நன்றியுடனே நோக்குகின்றது.
இந்த நிலையில் இந்திய வீடமைப்புத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் குறிப்பிட்டளவு வீடுகள் கிடைப்பதனை உறுதி செய்ய வேண்டும்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் இலங்கை அரசாங்கமும் ஒரு பங்காளியாகவுள்ளது. இலங்கை அரசாங்கமும் இந்த விடயம் தொடர்பாகப் பேசி எந்தவொரு இனத்திற்கும் அநீதி ஏற்படாத வகையில் வீட்டுத் திட்டத்தின் பலனாளிகளைத் தெரிவுசெய்வதனை உறுதி செய்ய வேண்டும்.
Post a Comment