வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம்
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை விரைந்து நடத்துமாறு இந்தியா கொழும்பிடம் வலியுறுத்தவுள்ளது. இதற்கான இராஜதந்திர நகர்வுகளில் இந்திய அரச தலைமை ஈடுபட்டுள்ளது.
ஜெனிவாவில் இலங்கை மீது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் நெருக்கடி நிலையில் இருந்து இலங்கை அரசு மீள்வதற்குப் பல காத்திரமான உறுதியான நடவடிக்கைகளை நாட்டில் மேற் கொள்ள வேண்டி உள்ளன என புதுடில்லி கருதுகிறது. அதனையே இலங்கையிடம் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. எனவே இந்தவேளையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் நடைபெறுவதற்கான வழியை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை ஓரளவேனும் விடுபட முடியும் என இந்தியா இலங்கைக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.
வடக்கில் இராணுவ நெருக்குவாரங்கள் தொடர்கின்றமையால் அங்குள்ள மக்களும் சினம் அடைந்துள்ளனர். எனவே வடக்கில் தேர்தலை நடத்தி மாகாண சபை நிர்வாகத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிப்பதன் மூலம் மக்கள் தற்காலிகமாகவேனும் இராணுவ நெருக்குவாரங்களில் இருந்து மீளமுடியும் என இந்தியா இலங்கையிடம் சுட்டிக் காட்டவுள்ளதாகவும் ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தப் பொருத்தமான சூழல் உள்ளதால் அதனை விரைவில் நடத்துமாறு புதுடில்லி கொழும்பிடம் பகிரங்கமான கோரிக்கை ஒன்றை முன்வைக்க ஆயத்தமாகி வருவதாகவும் நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவித்தன. இதற்காக இந்திய அரசின் பிரதிநிதிகள் இலங்கை அரச தலைமையை நேரில் சந்தித்து இது தொடர்பில் வலியுறுத்துவர் என கூறப்படுகிறது.
Post a Comment