அபிவிருத்தியில் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு - அரசாங்கத்துடன் மு.கா. விரைவில் பேச்சு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் அதன் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தையொன்று இன்னும் ஒரு சில தினங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தியத்தலாவ பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் பேச்சு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலியின் அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் நிராகரிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த கூட்டத்திற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த நான்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
Post a Comment