மஹிந்த ராஜபக்ஸ மன்மோகன் சிங்குடன் தொலைபேசயில் பேச்சு - றிசாத் பதியுதீன் இறுதிக்கட்ட உதவிக்காக கட்டார் விரைந்தார்
ஜெனீவா மனித உரிமை பேரவையின் மாநாடு இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சுமார் ஒரு மணிநேரம் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தி ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் சமர்ப்பித்திருக்கும் நிலையில் இலங்கைக்கு ஆதரவாகவேபேசிவந்த இந்தியா திடீரென அதன் நிலைப்பாட்டை மாற்றி தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது.இதன் காரணமாக இலங்கை ஜெனீவாவில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலைஉருவானது. இதற்கிடையில் வாக்கெடுப்பு எவ்வேளையிலும் இடம்பெறலாமென்ற நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெளிவுபடுத்தியிருப்பதாக அறியவருகின்றது.
இலங்கைக்கு பாதகமேற்படும் விதத்தில் இந்தியா ஒருபோதும் செயற்படமாட்டாதெனவும் அமெரிக்காவின் தீர்மானத்தில் மாற்றங்களை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் இலங்கை மீதான அழுத்தங்களுக்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது என்ற உறுதிமொழியை மன்மோகன்சிங் வழங்கியதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, இந்தியாவின் முடிவால் இலங்கை இக்கட்டான நிலைக்குத்தள்ளப்பட்டிருந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு சுமார் 20 நிமிடங்கள் உரையாடியுள்ளார்.
இதன்போது ஜெனீவாவில் வாக்கெடுப்பை தடுப்பதற்கு முயற்சிக்குமாறும் முடியாது போனால் தீர்மானத்தின் கடும் இறுக்கத்தை குறைக்கவேனும் முயற்சிக்குமாறும் பேராசிரியர் பீரிஸ் கேட்டிருக்கின்றார். இது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கிருஷ்ணா பேராசிரியர் பீரிஸிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுடன் மேலதிகச் செயற்பாடுகள் குறித்து பேசுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.இதனையடுத்து ஜெனீவாவில் உள்ள இந்திய நிரந்தர வதிவிடப்பிரதிநிதி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுடன் நேரடிப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது தீர்மானத்தை தடுக்கமுடியாது போனாலும் வாக்கெடுப்பை ஒத்திப்போட அல்லது அதில் காணப்படும் கடுமையான இறுக்கத்தை குறைப்பது தொடர்பாக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாக நீண்டநேரம் ஆராயப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இது இவ்விதமிருக்க ஜெனீவாவில் இலங்கை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் அவசர அறிவுறுத்தலுக்கமைய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜெனீவாவிலிருந்து நேற்று கட்டார் வந்து கட்டார் மன்னரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கியிருப்பதோடு, நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு கட்டாரின்ஒத்துழைப்பை கோரியுள்ளார்.
கட்டார் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று மீண்டும் ஜெனீவா சென்று இலங்கைக் குழுவுடன்இணைந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment