Header Ads



தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொடியப்புக்கு பிறக்கவில்லையாம் - விமல் வீரவன்ச கோவணம் அணிவாரா..?

அமெரிக்காவின் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று சொன்ன விமல் வீரவன்ச, அதை  இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்த இந்தியாவுக்கு சொல்லியிருந்தால் கோவணத்துடன்தான் வீரவன்ச இங்கு இருந்திருப்பார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் கலாபூசணம் இரா.அரசகேசரியின் களுவாஞ்சிகுடி கலைக்களஞ்சியம் முதலாம் பாகமும் காவடிச்சிந்தும் நூல்வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
 
இதிலே பியசேன என்பவர் பொடியப்புக்கு பிறந்ததன் காரணமாக அவரது பிறந்த குணத்துக்காக அவர் சென்றுவிட்டார். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பொடியப்புக்கு பிறக்காத 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதும் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளோம். தற்போது எங்களை பிரிப்பதற்கான பல சக்திகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவை என்ன சக்திகள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஜெனீவா மகாநாட்டில்கூட 62 வருட காலங்களாக எங்களது போராட்டம் சர்வதேசத்திற்கு சென்றிருக்கின்றது என்பதை நாங்கள் பல இடங்களில் கூறியிருக்கின்றோம். புலம்பெயர்ந்த மக்கள் கூறியிருக்கின்றார்கள்.
   
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றிருக்கின்றது என்பதை ஐ.நா சபையில் சாட்சி சொல்லப்பட்டிருக்கின்றது. ஐ.நா சபையில் ஒரு அறிக்கை வந்திருக்கின்றது. ஆனால் அந்த அறிக்கையை அமெரிக்கா கொண்டுசெல்லவில்லை. போர்க்குற்றத்தை விசாரியுங்கள் என்று அமெரிக்கா கொண்டுசெல்லவில்லை. இதன் பின்னர் இலங்கை அரசினால் நல்லிணக்க ஆணைக்குழுஎன்ற அறிக்கை வெளியிடப்பட்டது. இலங்கையிலே இருக்கக்கூடிய இலங்கையிலே பிறந்த ஸ்ரீலங்கா பாராளுமன்றத்திலே இருக்கக்கூடிய ஸ்ரீலங்காவை ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற மகிந்த ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நீங்கள் செய்யுங்கள் என்று தான் அமெரிக்கா பிரேரணையை கொண்டுவந்திருக்கின்றது.

24 நாடுகள் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றது. இதற்கு வாக்களிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக கூறிக்கொண்டிருந்தது. அதற்கான ஆய்வுகளையும் ஆதாரங்களையும் நாங்கள் கொடுத்திருந்தோம். அது இப்போது நிறைவேறியிருக்கின்றது. இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக இரட்டைத் தன்மை கொண்ட நடவடிக்கையை கடைப்பிடித்திருக்கின்றது. இரட்டைத் தன்மை கொண்ட நடவடிக்கையின் விளைவாகத்தான் அதில் போடப்பட்ட இரண்டு வசனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றது.

இலங்கையிலே நடைமுறையிலிருக்கின்ற எல்.எல்.ஆர்.சி என்ற அறிக்கையிலே கொடுக்கப்பட்ட அறிக்கையை இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையூடாக அமுல்படுத்த வேண்டும் என்ற விடயத்தை இலங்கை அரசாங்கத்துடன் பேசி கையாளப்படவேண்டும் என்று அந்த வசனம் மாற்றப்பட்டிருக்கின்றது.

இரண்டு இடங்களில் மாற்றம் செய்யப்பட்டதாக பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றது. இந்த விடயம் மாற்றப்பட்டாலும் சரி மாற்றப்படாவிட்டாலும் சரி எங்கள் விடயம் சர்வதேசத்திற்கு சென்றிருக்கின்றது என்ற விடயத்தை மட்டும் நீங்கள் பார்க்க வேண்டும். இதற்குப் பின் என்ன நடக்கப் போகின்றது என்பதை பார்த்து அதற்கேற்ப ஏனைய விடயங்களை கையாளக்கூடிய நிலைவரும்.

ஆனால் அந்த விடயங்களை வைத்துக்கொண்டு நாங்கள் ஜெனிவாவுக்கு செல்லவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டது என்று பச்சோந்திகளும் துரோகிகளும் எதிரிகளும் சொல்கின்றார்கள். அதை சொல்வதற்கு அவர்களுக்கு அருகதையில்லை.
 
கொழும்பிலிருந்து சரவணமுத்து பாக்கியசோதி உட்பட மூன்று ஊடகவியலாளர்கள் ஜெனிவாவுக்கு சென்றிருந்தார்கள். அவர்கள் நேரடியாக இங்கு நடந்த கொடுமையை சொன்னார்கள். இங்கிருக்கின்ற அமைச்சர் மேர்வின் சில்வா அவர்கள் வந்தால் காலை வெட்டுவேன் என்று சொல்கின்றார். இலங்கையிலே பொறுப்பு வாய்ந்த பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் கௌரவ மேர்வின் சில்வா அவர்கள் அங்கு சென்றால் காலை வெட்டுவோம் என்று சொல்கின்றார். இதிலிருந்து இனவாதத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று விமல் வீரவன்ச சொல்கின்றார். ஆனால் இந்தியா அங்கு இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தது. அவர் அதை இந்தியாவுக்கு சொல்லவில்லை. இந்தியாவின் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தால் கோவணத்துடன்தான் வீரவன்ஸ இங்கு இருந்திருப்பார்.

இவ்வாறான இனவாதத்திற்குள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணம் செய்துகொண்டிருக்கின்றது. இந்தப் பயணத்தை பொறுக்க முடியாத அரசாங்கம் பல சக்திகளை குழப்பி உடைத்து சிதறடித்துப் பார்த்த இந்த மகிந்த அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குழப்புவதற்கு பல கோடி ரூபாய்களை அள்ளி விதைத்திருக்கின்றது. இது உண்மையாகும். அதற்காக பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நீங்கள் அறிவீர்கள்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த களுவாஞ்சிகுடி மண் சோரம் போகாத மண்ணாகும். 2010ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் நான் இங்கேதான் அடிபட்டேன். அந்த அடி தான் எனக்குக் கிடைத்த வாக்குகளாகும். இந்த நூல் வெளியீடு சிறப்பாக அமைந்திருந்தது. கடந்த காலவரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் அறியாதவனுக்கு எதிர்காலமே கிடையாது என்று ஒரு அறிஞர் கூறியிருக்கின்றார்.

நாங்கள் கடந்தகாலத்தை பார்க்க வேண்டும். இரண்டரை இலட்சம் மக்கள் என்ன செய்தார்கள் என்பதை பார்க்க வேண்டும். என்ன இழந்தார்கள் எத்தனை பேர் அங்கவீனர்களாக இருக்கின்றார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

கல்லடியில் மாண்புமிகு ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த தேர்தலுக்கு வரும்போது விளக்குமாற்றால் அடியுங்கள் என்று கூறுகின்றார். அம்பாந்தோட்டையில் பிறந்தவர் கல்லடியில் வந்து சொல்கின்றார். இது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்ற விமர்சனம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரல்ல. விளக்குமாறு கட்டுகின்ற அமைச்சராக மாறிவிட்டார். இதுதான் உண்மையாகும். நாங்கள் எவருக்கும் பயந்து அரசியல் செய்யவில்லை. நாங்கள் 2004ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்தவர்கள். ஜோசப் பரராஜசிங்கம் ரவிராஜ் யாழ். மாவட்டத்தில் கிட்ணன் சிவனேசன் போன்றோரை இழந்திருக்கின்றோம். இழப்புக்களை வைத்து நாங்கள் பாராளுமன்றம் செல்லவில்லை. மக்கள் சாகலாம் கொள்கை சாகாது. என்றார் அரியநேத்திரன்.

No comments

Powered by Blogger.