வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இடமளிக்கமுடியாது - மஹிந்த திட்டவட்டமாக அறிவிப்பு
முப்பது வருட யுத்தத்துக்குப் பின் நாடு அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் இத்தருணத்தில் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அதேவேளை, நாட்டுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் வரும்போது அரசியல், கட்சி பேதம் பார்க்காது எதிர்க்கட்சி உட்பட சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டிற்கும் மக்களுக்குமான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எவ்வித பேதங்களுக்கும் இடமில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் என தெரிவித்தார். மக்களுக்குப் பொறுப்புக் கூறுபவர்களாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் செயற்படுவது முக்கியமெனவும் அவர் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட விசேட அபிவிருத்திக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மாதம்பே கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, எஸ். எம். சந்திரசேன, பந்துல குணவர்தன, பியங்கர ஜயரத்ன உட்பட பெருமளவில் அமைச்சர்கள் மாகாண பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் இறுதியில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம். சில சம்பவங்கள் தொடர்பில் முழு நாட்டினதும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் விதத்தில் எவரும் செயற்படக்கூடாது. புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நிலவும் குறைபாடுகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எமக்குக் கிடைத்த சகல முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். மாவட்ட ரீதியில் பார்க்கப்படவேண்டிய பல விடயங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அது பற்றி நான் அறிவித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பேன்.
Post a Comment