Header Ads



மரணம் தீண்டும் வரை...!

களத்தூரான்

மனிதன் உருவாகும் போதே.. அவனின் மரணமும் உறுதி செய்ய படுகிறது! மனிதனுக்கு மட்டுமல்ல... உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இதுவே, பொதுவான நியதி! ஆயுளின் அளவுகளில் வேண்டுமானால்... கொஞ்சம், ‘கூட-குறைய’ன்னு இருக்கலாமேயொழிய, பிறப்பின் முடிவு இறப்பு என்றும், ஆக்கத்தின் முடிவு அழிவு என்றும், ஒவ்வொரு தொடக்கத்துக்கும் ஒரு முடிவு இருக்கவே செய்கிறது.

ஒரு மனிதன்.. பிறந்த வினாடியிலிருந்து, அவனின் ஆயுள் காலம் முழுவதும் அவனை நிழலாய் பின் தொடர்வது இரண்டு விசயங்கள்தான். ஒன்று ரிஜக்கும் மற்றொன்று மௌத்தும். அதாவது ‘உணவும் மரணமும்!’ ஒருவனின் ரிஜக் நிறைவுறும்போது.. மௌத் அவனை தழுவச் செய்யும், அல்லது மரணம் அவனை தீண்டும்போது.. அவனின் உணவு முடிவுற்றிருக்கும்.

’மரணத்தை வென்றவர் எவருமிலர்’ என்ற நிதர்சன உண்மையை ‘மறுப்பவரும் எவருமிலர்’. ஆயினும்.. தன் விசயத்தில் மட்டும்.. "அது எப்போதோ... தற்போதைக்கு இல்லை..." என்ற அலட்சியமே ஒவ்வொரு மனிதனுக்கும்.

நேரங்களின் திரட்சி, அல்லது வினாடிகளின் அடர்த்திகளையே காலம் என்கிறோம். அடர்த்தியின் அளவுக்கேற்ப, மணித்துளிகள், நாட்கள், வாரங்கள், வருடங்கள் என வரைவகை படுத்துகிறோம். நடப்பாண்டு முடிந்து புதிய ஆண்டு பிறக்கையில்.. புத்தாண்டு என்ற பெயரிலும், ஒவ்வொரு வயதை கடக்கும் போதும்.. பிறந்தநாள் என்ற பெயரிலும் காலங்களின் இழப்பை கொண்டாடி குதூகலித்து வருகிறோம். மாறாக... ஒவ்வொரு புத்தண்டிலும், பிறந்தநாளிலும், நம் வாழ்நாளில் ஒரு வருடத்தை அல்லது ஒரு வயதை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு மேலிடும்போதே நேரத்தின் அருமையும், காலத்தின் அவசியமும் விளங்கும்.

ஒரு மனிதனின் சராசரி வயது (அதுவும், எந்த ஒரு விபத்திலோ.. நோய்நொடியிலோ மரணிக்காத பட்சத்தில்) 70 என்று வைத்துக் கொள்வோம்.

அதில்.. 30 வயதான ஒரு வாலிபனின்... மீதமுள்ள 40 வருடங்களின் எண்ணிக்கை...

நாட்களின் அடிப்படையில்... 14,600 நாட்கள்.

மணித்துளிகளின் அடிப்படையில்... 3,50,400 மணி நேரங்கள்.

நிமிடங்களின் அடிப்படையில்... 2,10,24,000 நிமிடங்கள்.

வினாடிகளின் அடிப்படையில்... 126,14,40,000 வினாடிகள் மட்டுமே!

இந்த கணக்கின் அடிப்படையில் 70 வருடத்தில் உங்களின் வயதை கழித்து..

மீதமுள்ள வருடங்களின், நேரங்களை கணக்கிட்டு பார்த்தீர்களானால்..

"ஆயுளின் அற்பம்" புரியும். நாள் ஒன்றுக்கு.. 86,400 வினாடிகள், நம் ஒவ்வொருவரையும் கடந்துக்கொண்டிருக்கிறது.

‘என்ன ஏதோதோ சொல்லி பயமுறுத்துவது போல தெரியுதே’ன்னு சிலரும்

’ஏதோ புதுசா கண்டு பிடிச்சிட்ட மாதிரி பேசுறே’ன்னு சிலரும் கேட்கலாம்.

அப்படி இல்லீங்க..! நான் யாரையும் பயமுறுத்தவுமில்லை.., புதுசா எதையும் கண்டு பிடிச்சிடவும் இல்லை. நாமெல்லாம் அறிந்த ஒன்றை அலட்சிய படுத்துவதையும்,

‘பொழுதே போக மாட்டேங்குது... வாழ்க்கையே போரா இருக்குது..’ன்னு பொன்னான நேரங்களை வீணடிப்பதையும் சுட்டிக் காட்டவே இந்த புள்ளி விபரம்.

இன்னும்.. குடும்பங்களையும், உறவினர்களையும் பிரிந்து.. வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கென்று தனி கணக்கு இருக்கத்தான் செய்கிறது. அதாவது..

வருடத்தில் 11 மாதங்கள் வேலை 1 மாதம் விடுமுறையென்று வருடத்திற்கு ஒரு முறை தாயகம் செல்பவரானாலும் சரி... அல்லது, 2 வருடத்திற்கு ஒரு முறை என்று,

22 மாதங்கள் பனிபுரிந்துவிட்டு, 2 மாத விடுமுறையில் ஊர் செல்பவரானாலும் சரி... 30 வயதில் வேலைத் தேடி, வெளிநாடுகளுக்கு வரும் ஒரு இளைஞன், தன் 60 வயது (முதுமை) வரை, பனிபுரிந்தால்... (அதற்கு மேல் பனிபுரிய நீங்களே விரும்பினாலும் அமீரகத்தின் தற்போதைய சட்டத்தில் இடமில்லை) அவன் தன் குடும்பங்களை பிரிந்து (வாடிய) காலம்.. நாட்களின் அடிப்படையில்... 9,900 நாட்கள். அதாவது 2,37,600 மணி நேரங்கள். ஆனால், அவன் தன் குடும்பத்துடன் (மகிழ்சியாக?) இருந்த (விடுமுறை) காலம்.. வெறும் 720 நாட்கள். அதாவது 17,280 மணி நேரங்கள் மட்டுமே!

பெரும்பாலும், குடும்பத்தை பிரிந்து வெளி நாடுகளில் வசிக்கும் நாம்... நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ள, நமக்கு நாமே முன் வைக்கும் உதாராண தத்துவம்..

‘திரைக் கடலோடியும் திரவியம் தேடு’

‘ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும்’ போன்றவைகளாகும்.

திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்னும் சொல் நாம் வாழும்.. கிட்டத்தட்ட துறவரம் போன்ற வாழ்க்கையை நியாயப் படுத்த கூறப்பட்ட தத்துவமல்ல. ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்ற வைரவரிகளில் நம் வாழ்க்கை எப்படி அடங்கும். எதை பெற, எதை இழக்கிறோம்?. வெறும் 720 நாட்களின் மகிழ்சிக்காக 9,900 நாட்களை தியாகம் செய்கிறோமே இதுவா..? ஒருவன் புழுக்களை போட்டு மீன்களை பிடிப்பதற்கு பதிலாக, மீன்களை போட்டு புழுக்களை பிடிப்பதற்கும், நமக்கும் பெரிதாய் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?. வாழ்க்கையை இழந்து வசதிகளை பெறும் இந்த

"வாழாத வாழ்வு" ஏன்?

அர்ப்பனிப்புகளும் தியாகங்களும் இல்லாத வாழ்க்கை ஒருபோதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாய் ஆகாது. முப்பது வருடங்களை கடந்து, வெளிநாடுகளில் வேலை செய்தும் எண்ணற்ற கடமைகளினால், இன்னும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எத்தனை எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருபோதும் நான் அவர்களை குறிப்பிடுவதாய் எண்ண வேண்டாம். எல்லா வசதிகளுமிருந்தும், மேலும் வசதிகளை பெருக்க வாழ்க்கையை

இழக்க வேண்டாமே.

இறைவன் தந்த மகத்தான பரிசான, அவன் கொடுத்த பொன்னான நேரங்களை வீனாக்காமல், இம்மைக்கும், மறுமைக்குமான, பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து.. ஈருலகிலும் இறைவனுக்கு பொருத்தமானவர்களாக இறைவன் நம்மையாக்கி அருள்வானாக! (ஆமீன்!)
 

No comments

Powered by Blogger.