Header Ads



சுத்தமான குடிநீரின் அவசியமும், நீரின் முக்கியத்துவமும்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆசிரியர் எஸ். எல். மன்சூர் (கல்விமாணி) யாழ் முஸ்லிம் இணையத்திற்கு எழுதி அனுப்பியிருந்த நீரின் முக்கியத்துவம் உணர்த்தும் இந்தக் கட்டுரையை காலத்தின் அவசியம் கருதி பதிவேற்றம் செய்கிறோம்

எஸ். எல். மன்சூர் (கல்விமாணி)


உலக நீர் தினத்தை ஐக்கிய நாடுகள் தாபனம் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் நாளை உலகமுழுவதும் அனுஷ்டிக்குமாறு பிரகடப்படுத்தியுள்ளது.

உண்மையில் இத்தினத்தினத்தின் முக்கியதுவம் உலக மக்களால் உணரப்படவேண்டிய கடப்பாடு எம்முன்னே காணப்படுவதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. ஏனெனில் நீருக்கான தேவையே மலைபோல் காணப்படுகிறது. இருப்பதோ சொற்பளவு இதனால் பாதிக்கப்படப்போகின்ற உலகின் நிலைமையைச் சிந்தித்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த 1992ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோடி ஜெனரோய் நகரில் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி பற்றி நடைபெற்ற கூட்டத்தொடரின்போது முன்வைக்கப்பட்ட 21ஆம் நூற்றாண்டின் செயற்றிட்டத்தின் பிரகாரம் 1993 ஜனவரி 18ஆந்திகதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி 1993ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மார்ச் 22ஆந்திகதி உலக நீர்வள நாளாக கொண்டாட தீர்மானித்தது.

இந்நடவடிக்கையானது நீர்வளத்தின் ஒட்டு மொத்தத் திட்டத்தையும், நிருவாகத்தையும் மேம்படுத்தி நீர் வளத்தின் பாதுகாப்பையும் வலுப்படுத்தி தொடராக தட்டுப்பாட்டை ஏற்படுத்திவருகின்ற நீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான நோக்கைக் கண்டறியும் தீர்மானமாக இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் ஒவ்வொரு நாட்டினதும் நீர் வளப்பாதுகாப்பு, மக்களிடையே விழிப்புணர்வு போன்றவற்றை மேற்கொள்ளவும் ஏதுவாக இத்தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா.சபை வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், உலகின் கவனத்தை அதிகம் கவர்ந்துள்ள நீர் வளத்தின் மேன்மையை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளமையானது சிறப்பான விடயமாகவே உலக மக்களால் பார்க்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டில் ஐ.நா.வின் 58வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் 2005 முதல் 2015ஆண்டுவரையான காலப்பகுதியான 'பத்தாண்டுகளுக்கு உயிர்வாழ்வதற்கு நீர்' எனும் அனைத்துலக செயல் திட்டத்தையும் அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. நீர் பற்றிய விடயங்களைக் கையாளுகின்ற அமைப்புக்கள் ஆண்டுதோறும் உலகளவில் நீர் வளத்தின் பாதுகாப்புக்குறித்து ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை மேற்கொள்ளவும் இத்தினத்தில் முன்னெடுக்கவும் யுனெஸ்கோவினால் அவ்வாண்டில் 'நீரும் கலாசாரமும்(றுயவநச யுனெ ஊரடவரசந) எனும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நீர் தினத்தின் கருப்பொருளுக்கு அமைவாக ஒருமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை கவனிக்கத்தக்கதாகும்.

அந்தவகையில் கடந்த 2010இல் 'நோயற்ற உலகிற்கு சுத்தமான நீர்' என்றும், 2011இல் 'நகரங்களில் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சவால்கள்' பற்றியும், இவ்வாண்டு 'நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு' எனவும் முன்னெடுத்துள்ள நிலையில் இன்றை காலகட்டத்தில் இதன் கருப்பொருளை உணர்ந்து உலகம் செயற்படாவிட்டால் எதிர்வரும் சில ஆண்டுகளில் நீருக்கான தேவை அதிகரித்து மக்களும், உயிரினங்களும் அழிவுக்குள்ளாகின்றநிலை தவிர்க்க முடியாததாகிவிடும்.

பொதுவாக நீரின் முக்கியத்துவமானது இன்று நேற்றல்ல உலகம் படைக்கப்பட்ட காலம்முதல் கொண்டு உணரப்பட்டே வந்துள்ளது. உலகின் அனைத்துத் தேவைகளுக்கும் நீர் அவசியமாகின்றது. மூன்றில் இரண்டுபங்கு நீராக இவ்வுலம் காணப்பட்டாலும் சுத்தமான குடிநீரின் அளவு மிகக் குறைவானதாகவே காணப்படுகிறது. 'சுத்தமான நீரைப் பெற்றுக் கொள்ளல் என்பது ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படை உரிமையாகும்' ஆதலால்தான் நமது நாட்டில் மக்கள் அனைவரும் சுத்தமான நீரைப் பெறும் பொருட்டு குடிநீர் வளத்தை அரசு ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2009ஆண்டு காலப்பகுதிக்குள் குழாய் மூலம் சுத்தமான நீரைப் பெற்றுக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையானது 1.246.421 ஆகக் காணப்பட்டன. இன்று இத்தொகை பலமடங்காகியுள்ள நிலையில் சுத்தமான நீரைப் பெறுவதில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வருகின்ற சிக்கல்களையும் உணர்ந்து அதற்கேற்ற முன்நடவடிக்கைகளையும் மேற்கொள்வதும் அவசியமாகும்.

கால மாற்றத்தின் காரணமாக உலகில் எதிர்பாராத வகையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மழை காலத்தில் அதிக வெப்பமும், வெயில் காலத்தில் அதிக மழையும் பனிப் பொழிவுகளும், தீடிரெனத் தோன்றும் இயற்கையின் சீற்றங்களால் அல்லலுறுகின்ற நிலையில் உலகின் போக்குக்கு ஏற்ப மக்களும் சிக்கித் தவிக்கின்றனர். இவையனைத்தும் சுத்தமான குடி நீருக்கு வேட்டு வைக்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது என்பதையே சுட்டிக் காட்டிக் காட்டுகின்றன. அத்துடன் உலகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினை விஸ்பரூபம் எடுத்துள்ள நிலையில் உணவுப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரிக்கும் நிலை தோற்றம் பெற்று வருகின்றது.

அண்மையில் ஐ.நா. வின் உலக தண்ணீர் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடர் கடந்த மார்ச் 5ஆந்திகதி பிரான்சின் மார்செய்ஸ் நகரில் ஆரம்பமாகியவேளையில் அது விடுத்துள்ள எச்சரிக்கையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் 'எதிர்வரும் 2050ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகை தற்போதைய 700கோடியிலிருந்து 900கோடியாக அதிகரிக்கும். மக்கள் தொகை அதிகரிப்பு, இறைச்சி சார்ந்த உணவுப் பழக்கம் அதிகரிப்பு ஆகியவற்றால் 2050இல் 70சதவீதம் வiயான உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

தற்போதைய  உற்பத்தி வழிமுறைகள் மூலம் எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் விவசாய உற்பத்திகள் 20சதவீதம் மட்டுமே அதிகரிக்க முடியுமாம். தற்போதைய விவசாயத்திற்கு சராசரியாக 70சதவீதம் நீர் பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் 44வீதமும், பின்தங்கிய நாடுகளில் இது 99சதவீதமும் பயன்படுத்தப்படுகின்றது. நிலத்தடிகீழ் நீர்மட்டம் கடந்த 50ஆண்டுகளில் மும்மடங்கு வேகத்தில் குறைந்துள்ளது. இதில் பெரும்பாலான தண்ணீர் குடிநீருக்காக விநியோகிக்கப்படுகிறது. சிலஇடங்களில் புதுப்பிக்க முடியாதளவுக்கு நீர்வளம் கெட்டு விட்டன. விவசாயம், உணவு உற்பத்தி, மின்சாரத்தேவை இவற்றின் அதிகரிப்பாலும் மோசமான நீர் மேலாண்மையினாலும் நல்ல நீருக்கான தேவையோ நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. பருவநிலை மாற்றம் இதற்கான உண்மையான அச்சுறுத்தலாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள ஐ.நா. சபை முறையான திட்டத்தை அமுலாக்காதுவிட்டால் இலட்சக்கணக்கான மக்கள் பசி, நோய், மின்பற்றாக்குறை, மற்றும் வறுமையில் கிடத்திவிடும் இதனை யாராலும் தடுக்கவே முடியாத நிலை உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இதற்கு ஆதாரமாக அண்மையக் காலங்களில் நமது நாட்டில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத கணத்தமழையினால் பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தாங்கொண்ணா துயர் கொண்டனர். சீனாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் காற்றினால் புகையிரதப்பாதைகளையே உருட்டிப் புரட்டியெடுத்தன. இவ்வாறு உலகின் பல நாடுகளிலும் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் அடிக்கடி ஏற்பட்டு மக்களையும், பொருளாதாரத்தையும் கபளீகரம் செய்வதுடன் நின்றுவிடாது, அதிக வெப்பம் காரணமாக கடல் மட்டம் உயர்வடைவதற்கு உறைபனி மலைகள் உருகுவதும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

இவற்றுக்கெல்லாம் காரணம் மக்களின் நடவடிக்கைகளே என்கிற வாதமும் சுற்றாடல் ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டாலும் அதிகரித்து வரும் மனித இனத்தின் தேவைக்கேற்ப இடப்பற்றாக்குறை, காடுகள் அழிப்பு, தாவரங்களின் நகரமயமாக்கம், புதியவீடமைப்புத் திட்டங்கள் போன்ற இன்னோரன்ன காரணங்களும் இந்த மாற்றத்திற்கு ஏதுவாக அமைகின்றன. இதனால் இயற்கையின் ஊற்றுக் கண்ணான தண்ணீர் படுகையின் மட்டத்திலும் குறைவு ஏற்பட்டு மக்கள் திண்டாட வேண்டிய நிலையேற்படும்.

உலகின் மொத்த நீர் மட்டத்தில் சமுத்திர நீரின் அளவானது 97.2வீதமாகும். எஞ்சிய பகுதியில் 2.11வீதமான நீர் பனிக்கட்டியாக உறைந்த நிலையில், குளங்கள், ஆறுகள், நீர் நிலைகளோ 0.00171 வீதத்திலும், நிலகீழ் நீர் 0.62வீதமாகவும் காணப்படுகின்றது. இன்று உலக சனத்தொகை அதிகரிப்பு காரணமாக நீலகீழ் நீரில் மாசற்ற நிலை காணப்படுவதானது சுத்தமான நீராக ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த நிலத்தடி நீர்கூட பாவனைக்குதவாத நிலையைத் தோற்றுவித்துள்ளது. மீதமாகக் கிடைக்கின்ற வளிமண்டல நீர் 0.001வீதமாகவுமே இன்றைய உலகின் நீர் மட்டம் காணப்படுகின்றது.

ஒரு காலத்தில் உலகின் சனத்தொகையானது மிகவும் குறைவாக இருந்த காலகட்டத்தில் மக்களின் தேவைகளுக்கேற்ப நீர் இலகுவாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தன. ஆனால் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட விரைவான சனத்தொகை காரணமாக நீரின் தேவையும் அதிகரித்துச் செல்லாயின. பயன்பாட்டிற்குரித்தான நீர் வளம் பற்றாக்குறையை முன்னோக்கி நகர்ந்தது. இதனை உணர்ந்து கொண்ட உலக அரசுகள் எதிர்கால சந்ததிகளுக்கான சுத்தமான நீரைத்தேடுவதிலும், நீரை வீண்விரயம் செய்வதிலிருந்து விலக்களிக்கவும் நீரின் பயன்பாட்டை பொருளாதார ரீதியில் முன்னிலைப்படுத்தவும் தயாராகின.

இன்று உலகின் பல பாகங்களிலும் திட்டமிடப்படாதவகையில் பல்வேறுபட்ட அபிவிருத்திகள் நடை பெற்று வருகின்றன. இதன் காரணமாக வருடந்தோறும் சுமார் 160 மில்லியன் தொன் நீர்வளம் பாதிக்கப்பட்டு மாசடைவதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அதுமட்டுமா? உலகின் நீர் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்றின்படி 'நீரை சரியான  முகாமைத்துவம் செய்யாது விட்டால் உலகில் பல மில்லியன் கணக்கான மக்களும், நம்முடைய சூழலும் மிக மோசமாக பாதிக்கப்படலாம்' என்றும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நீர் நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாமும் வாழ்ந்து நமது பிற்காலச் சந்ததிகளுக்கும் இவ்வாழும் உலகிற்கான பயணத்தில் இணைந்து கொள்வதற்கு நம்மைநாம் தயாராகிக் கொள்ள வேண்டும்.

நமது நாட்டில் சுத்தமான குடிநீருக்கான தேவையும், அவசரமும் கருதி அரசும், அரசார்பற்ற நிறுவனங்களும் பட்டி தொட்டி எங்கும் குழாய் மூலமான நீரை மக்கள் பெறும்வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. நீரைச் சேமிக்கும் பழக்கம், நீரைச் சிக்கனமாக பாவிக்கும் தன்மை நம்மிடையே இருந்து வருகின்றதா என்ன? இன்று தலைநகரில் என்றாலும் சரி கிராமப்புறம் என்றாலும் சரி போத்தலில் அடைக்கப்பட்ட நீரையே குடிக்க விரும்புகின்றார்கள். அந்தளவுக்கு நீராகாரம் ஒறுத்த பண்டமாகப் போய்விட்டது. 'வீதியோரங்களில் குடத்தில் நீரிட்டு வருவோருக்கும், போவோருக்கும் நீர் வழங்கியது அந்தகாலம். இன்று காசு கொடுத்து குடிப்பது இந்தக்காலம்' இந்நிலை தோற்றம் பெறுவதற்குக் காரணமாக அமைந்தவர்களும் மனிதர்களாகி நாம்தான் என்பதை ஒருகணம் சிந்திக்கின்றோமா?

அதிகரித்த சனத்தொகையினால் அதிக நுகர்வு, கைத்தொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் இரசாயன வளமாக்கிகளை மிதமிஞ்சிய அளவில் நீரில் கலத்தல் அவை கழிவுநீராக மாற்றமடைதல், நகரமயமாக்கம் போன்றவற்றினால் காடுகள் அழிக்கப்பட்டு மழை வீழ்ச்சி குறைவடைதல்.. இதுபோன்ற பலதரப்பட்ட காரணங்கள் இன்று நீரின் மட்டத்தில் குறைவை ஏற்படுத்தி வருகின்றன. இன்று சதுப்பு நிலங்களாக காணப்படுகின்ற பல இடங்கள் நமது நாட்டில் மண்நிறப்பப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. பயிர்ச்செய்கையில் அதிகரித்த விளைவை எதிர்பார்த்து செயற்கை வளமாக்கிகள் பாவிக்கப்படுகின்றன. நீர் நிலைகளும், அதில் வாழும் உயிரினங்களும் அழிந்து போவதற்கு நாம் ஒருவகையில் காரணமாக அமைகின்றோம் அல்லவா?

உலகில் இன்று மில்லியன் கணக்கான பெண்களும் சிறுவர்களும் இரண்டு தொடக்கம் நான்கு மணித்தியாலயங்களை தண்ணீர் கொண்டுவருவதற்காக செலவு செய்கின்றார்கள். சகலருக்கும் போதுமான தூய நீரானது 21ஆம் ஆண்டின் மிகப் பெரும் சவால்களில் ஒன்றாக காணப்படுகிறது. சமனற்ற நீர் பாவனையானது நீரைச் சேமிப்பதில் இருந்து தவறி விடுகிறது. உதாரணமாக ஆபிரிக்காவில் ஒரு குடும்பத்தில்; ஒருவர் 20லீற்றர் நீரைப் பயன்படுத்துகின்றார். அது இலங்கையில் சராசரியாக 135லீற்றராகவும், ஐரோப்பாவில் இது 165லீற்றராகவும், கனடாவில் 350லீற்றராகவும் நீர்ப்பாவனை காணப்படுகின்றது. சாதாரணமாக ஒரு தனிமனித ஆரோக்கியத்திற்கு நாளொன்றிக்கு 25லீற்றர் நீர் போதுமானதாகும். இருந்தாலும் நீர்ப்பாவனை இதனைவிட அதிகமாக தேவையானதுதான் இருப்பினும் நீரைச் சேமித்து பயனடைதலை ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

நீரில் தோன்றிய நாகரீகத்தை உலகதிற்கே அறிமுகப்படுத்திய நைல்நதியில் கூட பிரச்சினை சூடானுக்கும் எகிப்துக்கும் பிரச்சினை. நிலகீழ் நீர் வளத்தினால் எகிப்துக்கும் லிபியாவுக்கும் பிரச்சினை, இந்தியாவும் பாகிஸ்தானுக்கும் இந்து நதியால் தீராத தகராறு, இந்தியாவில் அத்தனை நீர் நிலைகள் இருந்தும் காவிரிப்பிரச்சினையால் இரண்டு மாநிலங்களிலும் பிரச்சினை. இவ்வாறு நீருக்கான சண்டைகளும் பிரச்சினைகளும் முடிந்தபாடில்லை. ஐரோப்பாவிலும் பல நீர் நிலைகள் மாசுபடுத்தப்பட்டுள்ளன. நீர்பாசனத்திட்டங்களாலும் நீர் மாசுபடுத்தப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் வளிமண்டத்தில் பிரவேசிக்கும் ஈரப்பதன் குறைவடைகின்றது இதன் விளைவு வரட்சி ஏற்படுகின்றது. அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட் ஆய்வொன்றின்படி கடலின் மட்டம் வெகுவாக அதிகரித்து வருவதாகவும், மண்மேடுகள் நீரினுள் அமிழ்ந்துவிடும் என்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இவ்வாறு கால மாற்றத்தின் காரணமாக இயற்கையானது மனித அழிவின் விழிம்புக்கு இட்டுச் செல்லப்படுகின்றதா? என்கிற ஐயம் ஏற்படுகின்ற அளவுக்கு காலம் மாறிப் போய்க் கொண்டிருக்கின்றது. 'இயற்கையினை நாம் பாதுகாத்தால் இயற்கை எம்மைப் பாதுகாக்கும்' என்கின்றனர் சூழலியலாளர்கள். எனவேதான், நிலைத்து நிற்கின்ற அபிவிருத்தியை மேற்கொள்கின்ற ஒரு சமுதாயமாக நாம் மாற்றம் பெறுகின்றபோது இயற்கையின் அருளாகப் படைக்கப்பட்ட நீரை மாசடைவதிலிருந்து விலக்கி, சுத்தமற்ற நீரின் மூலம் சுகாதார கேடுகளில் இருந்து பாதுகாப்பு பெறவும், சுத்தமான நீருக்கான போராட்டத்தில் நமது நிலையை நிலை நிறுத்தி, தண்ணீர் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான முன்னோடிகளாக எம்மை நாம் மாற்றிக்கொள்ள முயற்சிப்பதன் ஊடாக நீர்வளத்தைப் பாதுகாக்கலாம்.




No comments

Powered by Blogger.