Header Ads



நன்மைகளைப் பாதுகாப்போம்...!!


மௌலவி எப். ஜமால் பாகவீ

காலையில் விழித்தது முதல் இரவு தூங்கச்செல்லும் வரை எவ்வளவோ நல்லறங்களை நாம் செய்து வருகிறோம். அதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மைகள் அழிந்து பாழாகிவிடாமல் இருப்பதுடன், சுவனம் கிடைக்க வேண்டுமானால் சில காரியங்களை நாம் செய்யாமல் இருக்க வேண்டும்.

நல்லறங்களுடன் அவற்றையும் சேர்த்து செய்தால் நல்லறங்கள் பாழாகிவிடுவதுடன் நஷ்டமும் ஏற்பட்டுவிடும் என்று இறை வேதமாம் திருக்குர்ஆனும், இறைத்தூதரின் மணிமொழிகளான ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றன.
நல்லறங்களை அழிக்கும் செயல்கள் என்னென்ன? :
 1. அல்லாஹ்விற்கு இணைவைத்தல்.

2. அல்லாஹ்விற்காக நல்லறங்கள் செய்யாமல், "பிறர் புகழ வேண்டும்" என்பதற்காக செய்தல்.
3. தான் செய்த நல்லறங்களை பிறரிடம் சொல்லிக்காட்டுதல் - போன்றவை நல்லறங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பாழாக்கும் காரியங்களாகும்.

  அல்லாஹ்விற்கு இணை வைத்தல் : 

அல்லாஹ்விற்கு எவ்விதத்திலும் இணைவைக்கக்கூடாது. ஏனெனில் அவனுக்கு இணையானவர்கள் யாருமில்லை.

அல்லாஹ் கூறுகிறான்:

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.'' (அல்குர்ஆன் 30:40)

படைத்தல், உயிர்ப்பித்தல், மரணிக்கச்செய்தல், உணவளித்தல், சுகத்தை கொடுத்தல்.... இவை யாவும் அல்லாஹ் ஒருவனால் மட்டுமே செய்ய முடியும். அல்லாஹ் அல்லாத மற்ற யாராலும் இவற்றை செய்ய முடியாது. உலகமே ஒன்று சேர்ந்தாலும் இவற்றில் எந்த ஒன்றையும் செய்து சாதித்துவிட முடியாது. அல்லாஹ் அல்லாதவர்கள் யாவரும் ஒன்றுசேர்ந்து ஒரு ஈ, கொசுவைக்கூட படைத்திட முடியாது. ஏன் அவ்வளவொ போவானேன், ஒரு கொசுவின் இரக்கையைக் கூட படைத்திட முடியாது.

''மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.

அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியாவாறு கண்ணயப்படுத்தவில்லை நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.'' (அல்குர்ஆன் 22: 73,74)

இவ்வளவு ஆற்றல்களைக் கொண்ட அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படை தாரக மந்த்கிரமே "லா இலாஹ இல்லல்லாஹ்" அல்லாஹ்வைத் தவிர வணங்குவதற்குத் தகுதியானவன், தகுதியானவை யாருமில்லை" என்பதாகும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், நேர்ச்சை இவை யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே - அவன் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.

மாறாக, அல்லாஹ் அல்லாதவர்களுக்காகவோ அல்லது அல்லாஹ் அல்லாதவைகளுக்காகவோ இவற்றை செய்தால் அதற்கு "இணை வைத்தல்" என்பதாகும். இணைவைத்தல்" என்பது பெரும் பாவங்களில் முதலிடத்தைப் பெறுகிறது.

உலகில் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களுக்கும் அறிவிக்கப்பட்ட செய்தி யாதெனில்,

''அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், "நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்" (என்பதுவேயாகும்).'' (அல்குர்ஆன் 39:65)

மேற்கூறப்பட்ட இறைவசனத்தின் வாயிலாக அல்லாஹ்விற்கு இணைவைத்தால் நல்லறங்கள் அனைத்தும் பாழாகிவிடுவதுடன் மறுமையில் நஷ்டவாளிகளாகவும் மாறிவிடுவோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் அல்லாஹ்விற்கு இணைவைப்பவர்கள் சுவனம் செல்ல முடியாது. அவர்கள் நரகம்தான் செல்வார்கள் என்பதனை பின்வறும் இறைவசனம் அறிவிக்கிறது.

"நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்குர்ஆன் 5:72)

எனவே, நாம் நல்லறங்கள் சிறியதோ, பெரியதோ இதைச் செய்வதாக இருப்பினும் "அதனை அல்லாஹ்விற்காக செய்கிறேன்" எனும் தூய எண்ணத்துடன் மட்டுமே செய்ய வேண்டும். அதுவே, மறுமையில் நமக்கு நன்மையை பெற்றுத்தருவதுடன் சுவன் வாழ்வும் கிடைத்திட வழிவகை செய்யும்.
 நாம் செய்த நல்லறங்களை சொல்லிக்காட்டுதல் :

நாம் செய்த நல்லறங்கலை சொல்லிக் காட்டுவதன்மூலமாகவும் அவை அழிந்துவிடும். சிலர் தாங்கள் செய்யும் சிறிய நற்கருமங்களைக்கூட பிறரிடம், "நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன்... இவருக்கு இவ்வளவு கொடுத்தேன்..." என்று பெருமையாக சொல்லிக்காட்டுவார்கள். இவ்வாறு சொல்லிக்காட்டுவதன் மூலமாகவும் நல்லறங்கள் அழிந்து பாழாகிவிடும்.

''அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.'' (அல்குர்ஆன் 2:265)

"மறுமை நாளில் மூன்று வகை மனிதர்களுடன் அல்லா ஹ் பேசமாட்டான். அவர்கலை (அருள் கூர்ந்து) பார்க்கவும் மாட்டான்." என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபொழுது நான் கேட்டேன்; "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?" அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "கரண்டைக் காலுக்கு கீழ் தனது கீழாடையை (தரையில் இழுபடும்படி) அணிந்தவர். (அதன் மூலம் பெருமையடித்தவர்). பொய் சத்தியம் செய்து தன்னுடைய (மோசமான) பொருளை விற்பனை செய்தவர். (தான் செய்த நல்லறங்களை) மற்றவர்களிடம் சொல்லிக்காட்டியவர்" என்றார்கள். (நூல்: தாரமீ 2491)

எனவே தர்மம் உட்பட எந்த நற்கருமங்களையும் பிறரிடம் சொல்லிக்காட்டினால், "அதன் நன்மைகளை இழந்துவிடுவோம்" என்பது ஒருபுறமிருக்க மறுமை நாளில் அல்லாஹ் அவருடன் பேச மாட்டான் என்பதையும் மனதில் வைத்து நாம் செய்யும் நல்லறங்கலை சொல்லிக்காட்டுவதை விட்டும் பாதுகாத்துக்கொள்வோம்.
 முகஸ்துதிக்காகச் செய்தல் :

மக்களின் புகழைப் பெறுவதற்காக ஒரு காரியத்தைச் செய்து, உலகத்திலேயே அதற்கு "புகழும்" கிடைத்துவிட்டால் மறுமையில் அவருக்கு எவ்வித நற்கூலியும் கிடைக்கவே செய்யாது.

''இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.'' (அல்குர்ஆன் 107: 4 - 6)

நல்லறங்கள் செய்யும் சமயம் அதிலே முகஸ்துதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.. ஆனால், ''புனித ஹஜ் பயணம்" மேற்கொள்வதில் "முகஸ்துதி" ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் ஒருவர் தொழுகை, நோன்பு, ஜகாத் - தர்மம் போன்ர கடமைகளை செய்யும் சமயம் அவருக்கு மற்றவர்கள், வழியனுப்பு விழா, பாராட்டுவிழா போன்றவற்றை நடத்துவதில்லை. ஆனால், ஒருவர் "ஹஜ்" பயணம் மேற்கொள்ளும் சமயம் (சில ஹாஜிகள்) தங்களுக்கு பிரமாண்டமான முறையில், வழியனுப்பு விழா நடத்த வேண்டும், சால்வைகள் போடவேண்டும், பூ மாலைகள் போடவேண்டும், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் புகழை விரும்புகின்றனர்.

ஹஜ்ஜை முடித்துவிட்டு வரும் சமயம், "ஹாஜிகளே வருக வருக!" என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட வேண்டும். தங்களை "ஹாஜியார்" என்றே அழைக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்கள் ஏற்படுமானால் அது எவ்வளவு பெரிய வணக்கமாக இருந்தாலும் "புகழை" உலகிலேயே அல்லாஹ் வழங்கிவிட்டு மறுமையில் ஒன்றுமில்லாமலாக்கி விடுவான்..

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஒரு நீண்ட ஹதீஸின் கருத்தாவது... மறுமையில் விசரணையின்போது ஷஹீத் - வீர மரணமடைந்தவர், செல்வந்தர், மார்க்க அறிஞர் ஆகியோரை விசாரிக்கும்போது அவர்களில் புகழுக்காக தங்களது செயல்கலைப் புரிந்தவர்களை அல்லாஹ் நரகில் இழுத்துத்தள்ளும்படி உத்தரவிடுவான் எண்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம் 3527, நஸாயீ 3086, அஹமது 7928)

எனவே நல்லறங்கள் செய்வதுடன் மேலே எச்சரிக்கப்பட்டுள்ள காரியங்களை செய்யாமல் இருந்தால்தான் அவற்றுக்குறிய நற்கூலியை மறுமையில் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்வோமாக, அல்லாஹ் நல்லருள் புரிவானாக

No comments

Powered by Blogger.