Header Ads



ஜப்பான் சுனாமிக்கு வயது ஒன்று

ஜப்பானில், 16 ஆயிரம் பேரைப் பலி கொண்ட பெரும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி கொடூரத்தின் ஓராண்டு நினைவு நாள், இன்று அந்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.

ஜப்பானில், கடந்தாண்டு மார்ச் 11ம் தேதி கடற்பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தையடுத்து, ஜப்பானை சுனாமி தாக்கியது. இதில், ஐவேட், மியாகி, புக்குஷிமா ஆகிய மூன்று மாகாணங்கள் இதில் பேரிழப்பைச் சந்தித்தன. இச்சோக சம்பவத்தில், 15 ஆயிரத்து 800 பேர் பலியாயினர். 3,200 பேர் காணாமல் போயினர். புக்குஷிமா மாகாணத்தில் உள்ள அணுமின் நிலையங்கள் பெரும் அபாயத்திற்குள்ளாயின. அவற்றில் இருந்து ஏற்பட்ட கதிர்வீச்சு, இன்றளவும் அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. மூன்று லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் அழிந்தன. ஒரு லட்சத்து 60,000 பேர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். இயற்கையின் கொடூர முகம் வெளிப்பட்ட இச்சம்பவம், உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடந்த 1986ல், உக்ரைன் நாட்டின் செர்னோபிள் அணுமின் நிலைய விபத்திற்குப் பின், நிகழ்ந்த பெரும் விபத்தாகக் கருதப்படும் ஜப்பான் சுனாமியின் ஓராண்டு நினைவு நாள், இன்று அந்நாட்டில் அனுசரிக்கப்பட உள்ளது. ஐவேட் உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், அஞ்சலி செலுத்துவதற்கான நினைவிடங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு நேரப்படி, இன்று நண்பகல் 2.46 மணிக்கு, நாடு முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும். அந்த நேரத்தில் தான் சுனாமி தாக்கியது என்பது குறிப்பிடத் தக்கது. நினைவு நாளை முன்னிட்டு, நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒசாகா நகரில், சுனாமியில் பலியானோரின் நினைவாக, நேற்று 16 ஆயிரம் மெழுகுவத்திகள் பொருத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.