Header Ads



இமாம் ஹஸனுல் பன்னாவின் இறுதி நாட்கள் - மகளின் உருக்கமான பேட்டி


உதவி - மீள்பார்வை

“யூதர்கள் உங்களை கொலை செய்ய முயற்சிக்கிறார்களே” என்று சொன்னபோது அவர் புன்னகைத்தார். அப்புன்னகை அவ்வார்த்தையை உண்மைப்படுத்துவதுபோல் இருந்தது. “முழு நாட்டிலும் என்னைக் கொல்வதற்கு சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கையில் நான் தனியே நடந்து செல்கிறேன். 10 வயது சிறுவனால் கூட என்னைக் கொலை செய்ய முடியும்” எனப் பதிலளித்தார் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள்.

அவரது கடைசி நாட்களில் அவரது மகள் வபா உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி யொன்றை எடுத்து பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ளும்படி தந்தையிடம் நீட்டியபோது அவர் அதனை ஏற்க மறுத்தார். “அவர்களில் ஒருவர் என்னைக் கொலை செய்ய முயன்றால் நான் அவரைக் கொல்வதற்கு எனது கையை உயர்த்துவேன் என்று நீ நினைக்கிறீரா?” என்று அவர் மகள் வபாவிடம் திருப்பிக் கேட்டார்.

இமாம் ஹஸனுல் பன்னாவின் அந்திம கால நினைவுகளை கண்ணீர் மல்கப் பகிர்ந்து கொள்கிறார் இமாம் ஹஸனுல் பன்னாவின் புதல்வி ஸனா ஹஸனுல் பன்னா. அவர் வீர மரணமடைந்த பின்பு நான் சென்று பார்த்தபோது எனது சாச்சி தந்தையின் முகத்தைத் திறந்து காட்டினாள். அப்போது அவரது முகம் பூரண சந்திரனைப் போன்றிருந்தது. அவரது முகத்தில் புன்னகை படர்ந்திருந்தது. அவர் மரணித்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. "என் தந்தை இன்னொருமுறை மீண்டு வருவார்" என என் தோழிகளிடம் நான் கூறினேன். அப்போது அவருக்கு வயது 11 ஐத் தாண்டி யிருக்கவில்லை.

இமாம் ஹஸனுல் பன்னாவின் மகள் ஸனா ஹஸனுல் பன்னா தனது தந்தையுடனான நினைவுகளை அண்மையில் இஃவான் ஒன்லைனுடன் பகிர்ந்து கொண்ட நேர்காணலின் முதல் பகுதி இது.

* தந்தையின் கடைசி நாள் நிகழ்வுகள் குறித்து சொல்ல முடியுமா?

அன்றைய தினம் லைஸி தங்களை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். எல்லாம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். எனவே, தந்தை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்திற்குச் சென்றார். எதிரிகள் அனைத்தையும் தயார்படுத்தியிருந்தனர். அவர்கள் வீதி விளக்குகளை அணைத்து ஒரேயொரு டெக்ஸியைத் தவிர. எவ்வித பாதசாரிகளும் இன்றி அதனை வெறிச்சோட விட்டிருந்தனர். தந்தை ஜமாஅத்துடன் இஷாத் தொழுகையை நடாத்தி விட்டு வீடு திரும்புவதற்காக வெளியேறினார்.

வீதி இருளடைந்திருப்பதையும் அருகே இருந்த ஒரேயொரு டெக்ஸியையும் அவதானித்தார். வழக்கத்திற்கு மாறாக சூழவுள்ள வீதியை நோட்டமிட்டார். எனது சாச்சியின் கணவரான அப்துல் கரீம் தந்தைக்கு முன்பாக டெக்ஸியினுள் ஏறினார். வழக்கமாக தந்தை முன்பாகவும் பின்னரே சாச்சாவும் ஏறுவர். முதலில் ஏறியவர் மீது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே தந்தை அவரைப் பிடித்து டெக்ஸியின் பின் ஆசனத்தில் அமர்த்த முயற்சித்தார். டெக்ஸி சாரதி திட்டமிட்டபடி ஆசனத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்.

தந்தை சாச்சாவிடம் அழகிய பொறுமையுடன் இருக்குமாறு வேண்டிக் கொண்டார். அவர்கள் உதவிவேண்டி இரண்டாவது தடவையாக ஒன்றியத்திற்குள் நுழைய முயன்றபோது அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். துப்பாக்கியால் சுட்டனர். இதனால் துப்பாக்கி சன்னமொன்று தந்தையின் கிட்னியொன்றை பாதித்தது. லைஸியும் இன்னுமொரு இளைஞரும் டெக்ஸியின் இலக்கத்தைப் பதிவு செய்து கொண்டனர். இந்தக் கணம் வரை அது அடையாளம் காணப்படவே இல்லை.

தனது தந்தை முதலுதவிக்காக இருவரையும் கொண்டு செல்லுமாறு சாரதியிடம் வேண்டிக் கொண்டார். இளம் வைத்தியர் ஒருவர் விழித்திருக்கச் செய்யும் மருந்தொன்றினை அவ்விருவருக்கும் கொடுத்தார். வைத்தியசாலை அவ்விருவரையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்ததுபோல் இருவரும் கஸ்ருல் அனி வைத்திய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, இரண்டு மணித்தியாலத்திற்கு அதிகமாக அறையொன்றினுள் அவர்கள் விடப்பட்டனர். இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.

எனது தந்தையின் நிலை அபாயகரமானதாய் இருக்கவில்லை. ஒரு நுரையீரலால் மனிதனுக்கு வாழ முடியும். பின்பு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என அறிவிக்கப்பட்டது. தந்தை தனக்குப் பரிச்சயமான சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரே தனக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அதற்கு வைத்தியர் ஒருவர் "நாங்களும் உங்கள் குழந்தைகளே" எனப் பதிலளித்தனர்.

பின்பு அறைக்கு முன்னாலுள்ள பகுதியொன்றுக்கு சாச்சா அப்துல் கரீமை அவர்கள் இடம் மாற்றினர். வைத்தியர்கள் பிடறி நரம்பு குறித்து ஏதோ பேசிக் கொண்டதை தான் செவியேற்றதாக சாச்சா கூறினார். அவர்கள் பிடறி நரம்பை துண்டித்திருக்கிறார்கள் என்பதை பின்பு நாங்கள் அறிந்து கொண்டோம். இதனால் அவருக்கு பெரும் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பிரிந்திருக்கிறது.

* தந்தையின் ஷஹாதத் செய்தியை அறிந்தவுடன் எவ்வாறு நடந்து கொண்டீர்கள்?
அவர்கள் எனது பாட்டனாரிடம் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்தனர். அவர் அதனை மறுத்துவிட்டார். பிள்ளைகளும் சகோதரிகளும் பார்ப்பதற்காக ஜனாஸா வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். வீட்டை இரகசியப் பொலிஸார் ஆக்கிரமித்திருந்தனர். எந்த ஆண்களையும் அவர்கள் நுழைய அனுமதிக்கவில்லை. நெருங்க முற்பட்டவர்களை அவர்கள் கைது செய்தனர். நெருங்கிய உறவினர்கள் என்று உறுதிப்படுத்தியவர்களை மட்டும் சில நிமிடங்கள் அனுமதித்தனர்.

எனது பாட்டனாரும் சகோதரர் ஸைபுல் இஸ்லாமும் தந்தையைக் குளிப்பாட்டினர். ஜனாஸாவைச் சுமந்து செல்வதற்கு இராணுவம் மறுத்தது. எனவே, எனது பாட்டியும் கூடவிருந்த சில பெண்களுமே இந்த ஜனாஸாவைச் சுமந்து சென்றனர்.

அன்றிலிருந்து எமது வீடு முற்றுகையிடப்பட்டே இருந்தது. அவர்கள் எமது வாழ்க்கை விவகாரங்கள் அனைத்திலும் தடைகளை ஏற்படுத்தினர். சகோதரர் ஸைப் தந்தையைப் பின்பற்றி தாருல் உலூமில் படித்தார். சட்ட பீடத்தில் பயின்று பட்டம் பெற்றார். கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அவருக்கு நியமனம் கிடைத்தபோது அவர்கள் தடைகளை ஏற்படுத்தினர். கல்வி அமைச்சு உஸ்யூத் மாகாணத்திற்கு என்னை மாற்றி எனக்குக் கொடுமை செய்தது. ஆயினும், எனது உரிமையைப் பெறும்வரை நான் போராடினேன்.

* தடைகளை எதிர்கொள்ளும் தைரியம் உங்களுக்கு எப்படி வந்தது?
சத்தியத்திற்காக உயிர்துறந்த என் தந்தையிடம் இருந்து கற்றதுதான் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றி யாரும் எமக்குச் சொல்லித்தரவில்லை. எனது தாயும் எங்களைப் போன்றே இருந்தார். அவர்கள் பரிசோதனை செய்வதற்காக வீட்டுக்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்வர். அப்பொழுது பொலிஸுக்கு முன்னால் இருந்து கொண்டு எனது தாய், வீட்டிலிருந்து எடுத்த பொருட்களை அவர்கள் மீள ஒப்படைப்பதற்காக வேண்டி அவற்றை எழுதிக் கொள்ளும்படி வேண்டுவார். அவைகள் வீட்டின் முதுசங்கள். அதை மீட்டெடுப்பது உங்களது கடமை என்பார்.

* இமாம் ஹஸனுல் பன்னாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து ஏதும் உணர்ந்திருந்தீர்களா?

உண்மையில் நாங்கள் அவருடனே நெருங்கி வாழ்ந்திருக்கிறோம். அவர் ஷஹீதாவதற்கு முன்னரான காலம் வீடு முழுவதும் பெரும் குழப்பத்தில் இருந்தது. வீட்டை அவர்கள் தாக்கப்போவதாக செய்திகள் அடிபட்டன. சில இரவுகளை நாம் எம் பாட்டியின் வீட்டிலே கழித்தோம். எம் வீட்டில் யாராவது நுழைந்தால் அவர்களை சுடுவதற்காக சகோதரர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து ஒரு முறை காவலுக்கு இருந்திருக்கிறார்.

* இக்காலப்பகுதி குறித்து கூற முடியுமா?
ஒருநாள் தந்தை தொழுவதற்காக மஸ்ஜிதுக்குச் சென்றார். அவருக்கு ஏதும் நடந்து விடுமோ என்ற பயத்தின் காரணமாக நாம் யன்னலோரத்தில் நின்றுகொண்டு அவரை எதிர்பார்த்திருந்தோம். வீதியோரத்தில் இனம்தெரியாத முகமூடியணிந்த இருவர் இருப்பதை நாம் கண்டு கொண்டோம். உடனே எனது தாயார் சகோதரி வபாவையும் வீட்டுப் பணிப் பெண்ணொருத்தியையும் மஸ்ஜித் பக்கமாக அனுப்பினார். அவர்கள் வெளியே சென்றபோது அவ்விருவரும் விரண்டோடி விட்டனர். ஜமாஅத்தின் தலைமைக் காரியாலயத்தின் மீது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட டிசம்பர் 08 ஆம் திகதியிலிருந்து எமது வீட்டை பீதி ஆக்கிரமித்திருக்கிறது. அன்றிலிருந்து எமது வீடு அவதானிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜனவரி 25 புரட்சி வரைக்கும் அது இருந்தது.

அனைவரும் அவரது ஷஹீதை எதிர்பார்த்தே இருந்தனர். அவர் வெளியே சென்றால் அல்லது தாமதித்தால் அவர்கள் அவரைக் கொலை செய்து விட்டார்களோ என்றுதான் நாம் உணர்ந்தோம். இஹ்வான்களை சிறையிலிருந்து வெளியேற்றுவதற்காக மத்தியஸ்தம் வகிக்குமாறு வேண்டி ஷெய்க் முராகி அவர்களிடம் எனது தந்தை செல்வார். அவர் அடிக்கடி இப்படிச் சொல்வார். "எனது காதுகளில் இஹ்வான்களது குழந்தைகளின் அழுகுரலை கேட்கிறேன்" இந்த சந்திப்புக்களில் எவ்வித பயனையும் காணாத போது, தான் அனைத்து விடயங்களிலிருந்தும் ஒதுங்கி ஷெய்க் நப்ராஷியுடன் விவசாயத்தில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்தார். எனினும், அவர்கள் அவரையும் அவரது பிள்ளைகளையும் கைது செய்தனர். அவரது விவசாய நிலத்தை தீமூட்டி எரித்து விட்டனர்.

* நீங்கள் வளர்ந்த வீடு எப்படி யிருந்தது?
எகிப்தின் ஏனைய வீடுகளைப் போலவே எமது வீடும் காணப்பட்டது. எனினும், நாங்கள் இஸ்லாமிய அடையாளத்தைப் பேணுவதனூடாக மகிழ்ச்சியடைந்தோம். பெருநாட்கள் வந்தால் அன்பளிப்புகள், இனிப்புப் பண்டங்கள் பரிமாறப்படும். அண்டை வீட்டார்களுக்கு உணவளிப்பது எங்களது இயல்பான விடயமாகக் காணப்பட்டது.

* தந்தை என்ற வகையில் இமாம் ஹஸனுல் பன்னாவின் பண்புகள் எப்படியிருந்தது?
 
தந்தை மிக இரக்கமுடையவராக இருந்தார். எங்கள் வீட்டிலுள்ள எல்லோரும் அறிந்த விடயம்தான், எமது தாய் கொஞ்சம் கடுமையானவர் என்பது. தவறு செய்தால் தண்டிப்பவராக இருந்தார். அப்படியான சந்தர்ப்பத்தில் அடிபடாமல் இருப்பதற்காக நான் தந்தையிடமே அடைக்கலம் தேடுவேன். அவர் அருகே சென்று மேசைக்குக் கீழால் ஒழிந்து கொள்வேன். என்றாலும், நான் தவறு செய்தால் தாயார் தண்டிக்கவே முயற்சிப்பார். நாம் தந்தையைத் திருப்திப் படுத்துபவர்களாகவே இருந்தோம். எம்மில் எவர் மூலமாவது அவர் சங்கடப்படக் கூடாது என நாம் விரும்பினோம். இது அவர் மீதான பயத்தால் அல்ல. அவர் மீதான அன்பினாலும் மரியாதையாலுமே. என் தந்தை எம்முடன் கடுமையாக நடந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை.

* அப்படியானால் தந்தை உங்களை ஒருபோதும் தண்டித்த தில்லையா?

என்னை இரு தடவை தண்டித்திருக்கிறார். ஒரு முறை தந்தை இஹ்வான்களுடன் வருவதை நான் யன்னலருகே இருந்து அவதானித்துக் கொண்டிருந்தேன். உடனே, சிறுமி என்ற வகையில் அவரை வரவேற்பதற்காக வெளியே சென் றேன். அப்பொழுது அவர் எனக்கு வாங்கித் தந்த பாதணியை அணிய மறந்துவிட்டேன். எனது தந்தை எனது பாதத்தை ஒருமுறை உற்றுப்பார்த்தார். நான் உடனே வீட்டுக்கு திரும்பி விட்டேன். நான் தவறு செய்துவிட்டேன் என்பதை அறிந்து கொண்டேன். விருந்தினர்கள் வெளியேறிச் சென்றபின் என் பாதத்தை உயர்த்தச்சொல்லி ஒவ்வொன்றிலும் பத்துத் தடவை அடிமட்டத்தால் அடித்தார். நான் சிரித்துக் கொண்டேன். அதன் பிறகு நான் அப்படித் தவறு செய்ததில்லை. அடுத்தது, நான் சிறிய பணிப்பெண்ணொருத்திக்கு ஏசி விட்டேன். தந்தை தனது பக்கெற்றில் இருந்த பென்சிலை எடுத்து எனது காதருகே வைத்துக் குத்தினார். ஒரு மாதகாலம் வரை அது வலித்தது. அவரது தண்டனைகள் நான் அத்தவறை மீண்டும் செய்யவிடவில்லை.

No comments

Powered by Blogger.