Header Ads



மீண்டும் ஜெனீவா வருகிறார் ரவூப் ஹக்கீம் - சட்டவாளர் அலி சப்ரியும் இணைவு

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பலமிழக்கச் செய்யும் முயற்சிகளை முன்னெடுக்கும் பொருட்டு அமைச்சர் மகிந்த சமரசிங்க திங்கட்கிழமை ஜப்பானிலிருந்து நேரடியாக ஜெனீவா விரைந்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவைக்கு எந்தத் தீர்மானமும் கொண்டுவரப்படுவதற்கு மொத்தமாக உள்ள 47 உறுப்பு நாடுகளில் 15 நாடுகளின் அனுமதி கிட்டவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் எந்தத் தீர்மானத்தையும் கொண்டு வர முடியாதெனத் தெரிவித்திருக்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனடிப்படையில் அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் தீர்மானத்தை செயலிழக்கச் செய்யும் வகையில் அடுத்து வரும் சில தினங்களில் ஜெனீவாவில் உள்ள உறுப்பு நாடுகளின்  தூதுவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டவிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சிகளைத் துரிதப்படுத்தும் பொருட்டு ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி இந்திர திஸ்ஸ காலிங்கவும் அலி சப்ரியும் திங்கட்கிழமை மாலை ஜெனீவா புறப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரம் தெரிவித்தது.

இதேநேரம் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமும் செவ்வாய்க்கிழமை ஜெனீவா செல்லவிருக்கின்றார். அமைச்சர் ஹக்கீம் ஜெனீவா சென்றதும் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் இணைந்து உறுப்பு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து ஆக்கபூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்விதமிருக்க அரபுநாடுகளின் ஆதரவைத் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியா சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்பியதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த பின்னரே அவரது அடுத்த பணி குறித்து அறிய முடியுமென வெளிவிவகார அமைச்சு வட்டாரம் தெரிவித்தது.

இதேசமயம் ஜெனீவா அமர்வில் கலந்துகொள்ளும் பொருட்டு சில அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் அடுத்த இரண்டொரு தினங்களில் செல்லவிருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரே கையாள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.