பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான மிகச்சிறந்த வாழ்க்கை திட்டமே இஸ்லாம் - இமாம் ஸஊத் அஷ்ஷுரைம்
மக்காவில் உள்ள புனித மஸ்ஜிதுல் ஹரமில் ரமலான் இரவுகளில் தராவீஹ் தொழுகைகளில் திருக்குர்ஆன் வசனங்களை ஓதும் போதும், பிரார்த்தனைகளின் போதும் மக்களின் உள்ளங்களை நெகிழச்செய்து கண்ணீரை வரவழைக்கும் குரல் ராம்லீலாவில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்டவர்களையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸின் 2 தின மாநாடு நேற்று(வெள்ளிக்கிழமை) ராம்லீலா மைதானத்தில் துவங்கியது. வெள்ளிக்கிழமை ஜும்ஆ சிறப்பு தொழுகைக்கு புனித மக்கா ஹரம் ஷெரீஃபில் ரமலானில் தராவீஹ் தொழுகைகளுக்கு தலைமை வகிப்பவர்களில் ஒருவரான இமாம் டாக்டர்.ஷேக் ஸஊத் அஷ்ஷுரைம் தலைமை வகித்தார்.
ராம் லீலாவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஸஃபுகளில்(அணிவரிசையில்) மக்கள் கூட்டம் காணப்பட்டது. 1991-ஆம் ஆண்டு முதல் ஹரமில் தராவீஹ் தொழுகைக்கு தலைமை வகித்து வரும் அறிஞர் அஷ்ஷுரைம் சவூதி அரேபியாவில் நீதிபதியாகவும் பணியாற்றுகிறார்.
ஜும்ஆவின் முன்னோடியாக நிகழ்த்திய உரையில் இமாம், ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டிட இந்திய முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். நபி(ஸல்…) அவர்களின் தோழர்களிடமிருந்து கேட்ட இந்தியாவை குறித்த செய்திகளை வரலாறு பதிவுச்செய்துள்ளது.
உலகம் முழுவதும் மனிதர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் மிகவும் மனோரீதியான நெருக்கடியை அனுபவித்து வருகின்றார்கள். உலகம் முழுவதும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான மிகச்சிறந்த வாழ்க்கை திட்டம்தான் இஸ்லாம். இஸ்லாத்தை அனைத்து அனாச்சாரங்களில் இருந்து விடுவிக்க பாடுபட வேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் செயல்படுத்த முனையும்பொழுதே சமூகத்தில் அமைதியும், நல்லிணைக்கவும் நிலவும். இவ்வாறு இமாம் அஷ்ஷுரைம் உரையாற்றினார்.
ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் ஹிந்தின் அமீர் ஹாஃபிஸ் முஹம்மது யஹ்யா தஹ்லவி மாநாட்டின் நோக்கங்கள் குறித்து விவரித்தார். ஜம்மியத்து அஹ்லே ஹதீஸின் பொதுச்செயலாளர் மவ்லானா அஸ்கர் அலி இமாம் அலி மஹ்தி ஸலஃபி, மவ்லானா அப்துற்றஹ்மான் அப்துல்லாஹ் ரஹ்மானி முபாரக்பூரி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மாநாட்டின் இறுதி நாளான இன்று(சனிக்கிழமை) இரவு இஷா தொழுகைக்கு இமாம் அஷ்ஷுரைம் தலைமை வகிப்பார்.
Post a Comment