Header Ads



இலங்கையின் எதிரியே ரணில் விக்கிரமசிங்க - அமைச்சர் மைத்திரிபால சொல்கிறார்

பிரபாகரனால் செய்யமுடியாது போனதை மேற்குலகம் தமது கைங்கரியத்தைப் பயன் படுத்தி பல்வேறுபட்ட கோணங்களில் காய் நகர்த்தி, கடல் கடந்து வாழ்கின்ற புலிகளின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் திட்டமிடுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அவர்களால் எந்தவகையிலும் ஈழத்தை வென்றெடுக்க முடியாது. அதனால் தற்போதைய ஆட்சியை மாற்றியபின் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என அவர்கள் அடித்தளம் இடுகின்றனர்.

இதனை அவதானத்திற் கொண்டே நாம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டோம் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அமெரிக்கா சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி நாம் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

இது அமெரிக்காவின் வேண்டுகோளுக்கோ அல்லது அச்சுறுத்தலுக்கோ அடிபணிந்து செயற்படுவதல்ல. ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் மேற் கொண்ட தீர்மானமே இது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். அந்தச் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,

"ஈழத்தை வென்றெடுப்பதற்காக ஜெனிவாவைக் களமாகக் கொண்டு இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கை அரசை மாற்றியமைத்து அதன்மூலம் ஈழத்தை வென்றெடுக்கலாம் எனக் கடல்கடந்து சென்றும் கனவுகண்டு கொண்டிருக்கின்றார் உருத்திரகுமார். நமது நாட்டிற்கு எதிராக அந்நிய சக்திகள் மேற் கொண்டு வருகின்ற சதித்திட்டங்களை நாட்டு மக்களும் அறிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் நாம் கடந்த 27 ஆம் திகதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை மேற் கொண்டோம். இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக மக்களுக்கு உண்மை நிலையைத் தெளிவுபடுத்தினோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு எதிராக நாம் ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை. இந்தப் பேரவையின் பின்புலத்தில் இருந்து செயற்பட்டு வருகின்ற தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மேற்குலக நாடுகளினால் எமது நாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கே நாம் எதிர்ப்பை வெளிக்காட்டினோம்.

இதன் மூலம் நாம் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். நமது நாட்டிற்கு இவ்வாறானதொரு பிரச்சினை இருக்கின்றதென எதிர்க்கட்சிகள் ஒருபோதும் மக்களைத் தெளிவுபடுத்தும் செயற்பாட்டை முன்னெடுக் காது, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கவே அவை முயற்சிக்கின்றன.

போர் இடம்பெற்ற காலத்தில் எதிர்க்கட்சிதான் மேற்குலக நாடுகளுக்குச் சென்று நமது நாட்டிற்கு எதிராக இல்லாததும் பொல்லாததும் கூறியது. நாட்டின் எதிர்க் கட்சி என்ற அடிப்படையில் அது செயலாற்றவில்லை. நாட்டிற்கு எதிரான கட்சி என்ற வகையிலேயே அவர்கள் செயற்பட்டனர். அந்த வகையில் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அப்போது செயற்பட்ட விதம் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? அவர் நாட்டுக்கு எதிரான கட்சித் தலைவர் என்ற வகையிலேயே செயலாற்றினார்.

ஏனைய நாடுகளில் உள்நாட்டுப் பிரச்சினைகள் ஏற்படும் போது அந் நாடுகளிலுள்ள அனைவரினதும் ஒத்துழைப்புடனேயே பிரச்சினைகளைத் தீர்க்க அந்நாடுகள்  செயலாற்றியுள்ளன. இதன்மூலம் உள்நாட்டுப் பிரச்சினைகள் கடல்கடந்து செல்வதற்கு அந்நாடுகள் இடமளிக்கவில்லை. நமது நாட்டுப் பிரச்சினை சர்வதேசத்தின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலை யில் சிறந்ததொரு தீர்மானத்தை எடுப்பதற்கு நாம் செயலாற்றுவோம்'' என்றார்.                  

No comments

Powered by Blogger.